முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
22. சினனே காமங் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை
தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும்
  5 தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபய முதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
  10 மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
  15 ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்
  20 அமர்க்கெதிர்ந்த புகன் மறவ ரொடு
துஞ்சமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
  25 நெடுமதி னிரைப்பதணத்
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலி னம்பழிக்கு நரும்
  30 ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பணை சீறினை யாதலிற்
குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப்
பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பக லமயத்துக்
  35 கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக்
கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகும னளிய தாமே.

     துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித் தூக்கும். பெயர்-கயிறுகுறு முகவை (14)

     (ப - ரை) 2. அச்சம்-பகைவர்க்கு அஞ்சுதல். அன்பு -
பொருண் மேலன்பு.

     13. சிரறுசில ஊறியவென்றது பல்லூற்றொழியச்
சில்லூற்றாகவூறிய வென்றவாறு; சிரறுதல் - சிதறுதல்.

     14. கயிறு குறு முகவையென்றது தன்னால் நீர்தாங்குவது
பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும்
முகவையென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, கயிறுகுறு முகவை' என்று
பெயராயிற்று.

     22. தூங்குபு என்பதனைத் தூங்கவெனத் திரித்துக் கால
வழுவமைதி யெனக் கொள்க. தகைத்தல்-கட்டுதல்.

     23. வில்விசை மாட்டிய விழுச்சீர் 1ஐயவியென்றது
விசையையுடைய வில்லானும் துளையுருவ எய்யமுடியாது மிக்க
கனத்தையுடைய 2ஐயவித்துலா மென்றவாறு.

     37. கருங்கண் - 3கொடியகண். வழங்குதல் - ஆடுதல்.

     உரவோரும்பல் (11), தோன்றல் (16), குட்டுவ (27), நீ
சீறினையாதலின், நாடுகெழு தண்பணை (31) அளிய தாம்
பெரும்பாழாகும் (38) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     சீறினையாதலின், நாடுகெழு தண்பணை பாழாகுமென
4
எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், வஞ்சித்துறைப்
பாடாணாயிற்று.

     'உளைப்பொலிந்த மா' (17) என்பது முதலாய நாலடியும்
'கடிமிளை' (24) என்பது முதலாய இரண்டடியும் வஞ்சியபடியால்
வந்தமையால் வஞ்சித் தூக்குமாயிற்று.

     20. 'புகல்' என அடியிடையும், 'ஒடு' என அடியின் இறுதியும்
வந்தன கூன்.

     (கு - ரை) 1 - 5 செங்கோல் செலுத்தும் அரசருக்கு
வேண்டப்படாத குற்றங்கள் கூறப்படும்.

     சினன் - கோபம்; ஏ : எண்ணேகாரம். இதனைக் காம முதலிய
வற்றோடும் கூட்டுக. கழி கண்ணோட்டம் - அளவிறந்து ஒருவரை
உவத்தல்; இதனை, "மாணா உவகை" என்றும் "அளவிறந்த உவகை"
என்றும் கூறுவர் (குறள், 432, பரிமேல்.); "பிணைந்த பேரருள்"
(சீவக. 198) என்றவிடத்து நச்சினார்க்கினியர், 'கழிகண்ணோட்டம்'
என்று உரை கூறினார்.

     2. அச்சம் - பகைவர்க்கு அஞ்சுதல். அன்புமிக உடைமை -
பொருளிடத்தே அளவுக்கு மிஞ்சிய பற்று உடையோனாதல்; இஃது
உலோபம் என்னும் குற்றத்தின்பாற்படும்.

     3. தெறல் கடுமை - அளவுக்கு மிஞ்சிய தண்டனை; "கையிகந்த
தண்டம்" (குறள். 567). பிற என்றது மதம், மானம் முதலியவற்றை.

     1-3. இங்கே கூறிய குற்றங்களையும், "செருக்குஞ் சினமுஞ்
சிறுமையு மில்லார், பெருக்கம் பெருமித நீர்த்து" "இவறலு மாண்
பிறந்த மானமு மாணா, உவகையு மேத மிறைக்கு" (குறள். 431 - 2)
என்பவற்றிற்கூறிய குற்றங்களையும் ஒப்பு நோக்குக.

     4. அறந்தெரிதிகிரி-தருமத்தையே தெரிந்துசெலுத்தும்
ஆக்ஞாசக்கரம்; தரும சக்கரமென்பர். தெரிதலைக் கூறினும் தெரிந்து
செலுத்தலையே கொள்க. வழியடை-தடை; 'குன்றம் உருண்டால் குன்று
வழியடையாகாதவாறு போலவும், (இறை. 3, உரை).

     3-5. பிறவுமாகிய தீது என்க. கேண் இகந்து - சேய்மையிலே
விட்டு நீங்க; இகந்து: எச்சத் திரிபு.

     1-5. அறந்தரு திகிரிக்கு வாயடையாகுமென்று பாடம் கொண்டு
இவற்றைப் பரிமேலழகர் மேற்கோள் காட்டினர். (குறள். 432)

     6. கடல்-நெய்தல் நிலம். கானம்-காடு; முல்லை நிலம். கடலுங்
கானமும் கூறினராயினும் உபலட்சணத்தால் அவற்றின் இனமாகிய
குறிஞ்சியும் மருதமும் உடன் கொள்க.

     7-9. குடிமக்கள் செயல். பிறரை நலியாமலும், பிறர் பொருளை
விரும்பாமலும் குற்றமற்ற அறிவினராய்ச் செவ்விய அறநெறியிலே
ஒழுகித் தம்முடைய, விரும்புகின்ற மனைவியரைப் பிரியாமல் இல்லறம்
நடத்தி விருந்தினருக்குப் பகுத்து எஞ்சியதை உண்டு. பிறரை
நலிதலையும் வேற்றுப் பொருளை வெஃகுதலையும் அரசர்
தொழிலாகக் கூறுதல் சிறவாது; முன்னரே தெறலும், அன்பு
மிகவுடைமையும் கூறப்பட்டமை காண்க.

     9-10. மாக்கள் - குடிமக்கள். மூத்தயாக்கையும்
பிணியுமில்லாமல் அவற்றினின்றும் நீங்க.

     11. நெடுங்காலம் வாழும்படி செய்த வலியோர் வழியில்
வந்தோய்.

     1-11. சினன் முதலியனவும் பிறவுமாகிய தீது, இகப்ப நன்று
புரிந்து, உதவ அறிவினராகி நலியாது வெஃகாது நடந்து பிரியாது
உண்ண, மாக்கள் கழிய உய்த்த உரவோரும்பல்.

     12-5. பசுக்களுக்காகத் தோண்டிய பத்தல்: நற். 2 : 5 - 6,
240 : 7 - 8; ஐங். 304 : 1 - 2, அகநா. 155 : 9.

     12-6. இரும்பினாற் செய்த குந்தாலியால் திண்ணிய பாறையின்
செறிவை உடைத்தமையால் சிதறின போன்ற சிலவாக ஊறிய நீரைத்
தன் இடத்தேபெற்ற குழியில் பறியாகிய கயிற்றை வாங்கும்
பாத்திரத்தைச் சுற்றி நீருண்ணும் பொருட்டு மொய்க்கின்ற பசுக்கள்
பொருந்திய கொங்கர் நாட்டைக் கைக்கொண்ட, வேற்படையைப்
பெற்ற சேனையையுடைய பகைவர் அஞ்சுதற்குரிய தலைவனே.

     இரும்பையும் பொன்னென்றல் மரபு; ‘’பொன்னியற் புனை
தோட்டியான்’’ (புறநா. 14 : 3) என்பதன் உரையைப் பார்க்க. பிணி
- செறிவு; இங்கே பாறையின் செறிவு. உடைத்து என்பதனை உடைக்க
வென்று திரித்துப் பொருள்கொள்க. சிரறு-சிதறிய; ‘சிரறு சேலாடிய
நீர்வாய்ப் பதத்த என்றாற்போல, சிரறுதல் சிதறுதன்மேல் நின்றது’
(கலித். 88; 13, ந.). சிலவென்பதிற் சின்மை சிறிதென்பதைக் குறித்தது;
சின்னீரென்னும் வழக்கைக் காண்க (தொல். கிளவி. 17, சே.).
பத்தல் - குழியின்கண். முகவை - முகக்கும் பாத்திரம். ஆ கெழு
கொங்கர்; ‘’கொங்கர், ஆபரந்தன்ன செலவு’’ (பதிற். 77 : 10 - 11)

     17. உளையாற் பொலிந்த குதிரைகளோடு; மறவரொடு: ஒடு
என்னும் எண்ணிடைச் சொல்லை மா முதலியவற்றோடும் கூட்டுக.
உளை-தலையாட்டம்.

     18. பட்டம்முதலிய ஆபரணங்களாற் பொலிந்த களிற்றோடு.

     19. வம்பு - தேர்ச்சீலை.

     20. போரை எதிர்நோக்கியிருந்த விருப்பத்தையுடைய
வீரர்களோடு மாமுதலியன முற்கூறினமையின் மறவரென்பது
காலாட்படையை.

     17-20. நால்வகைப்படை: புறநா. 55 : 7 - 8.

     21. துஞ்சுமரம்-கணையமரம்; பதிற். 16 : 3, உரை பார்க்க.
துவன்றிய வாயில். மலரகன் பறந்தலை - மலர்ந்த அகன்ற
வெளியையுடைய.

     22. வாயிலின்கண்ணே நாலும்படிகட்டிய; இது பின்வரும்
ஐயவிக்கு அடை.

     23. வில்லின் விசையோடு பொருந்திய மேலான
சிறப்பையுடைய அம்புக் கட்டுகளையும்; வில்விசை - விற்பொறியுமாம்
(சிலப். 15 : 207); ஐயவி - துலாமுமாம். 21 - 3. பதிற். 16:2 - 4.

     24-5. காவலையுடைய காட்டையும் ஆழமாகிய அகழியையும்
உலர்ந்த மதிலையும் மதிலுள் மேடையையும் உடைய.

     26. பெருமையுடைய பெரிய சிகரங்களோடு கூடிய
அகப்பாவென்னும் அரணத்தை எதிர்த்த. அகப்பாவெறிந்தது:
பதிற்: 3-ஆம் பதி. 3; நற். 14 : 3; சிலப். 28 : 144.

     27. மதிற்போர் கூறுதலால் மதில் வளைத்தற்குரிய
உழிஞையைக் கூறினார். பொன்னாற் புனையப்பெற்ற உழிஞை;
போர்ப்பூக்களைப் பொன்னாற் செய்து அணிதலும் மரபு;
"பொலம்பூந் தும்பை" (மதுரைக். 737) என்பதையும் அதன்
அடிக்குறிப்பு முதலியவற்றையும் பார்க்க. குட்டுவன் - குட்ட
நாட்டையுடைய சேரன்.

     28. தோலைப் போர்த்து முழக்கிய பறையின் ஒலியால்
நீரினது ஒசையை அடக்குவாரும்; செறுக்குநர் - அடக்குவார்;
"மீனிற் செறுக்கும் யாணர்" (புறநா. 7 : 12)

     29. நீரில் செய்கின்ற விளையாட்டின் ஆரவாரத்தினால்
அம்பினாற் செய்யும் போராரவாரத்தை அழியச் செய்வாரும்; என்றது
நீர்விளையாட்டுப் பூசல் போர்ப்பூசலைவிடப் பெரியதாயிற்றென்றபடி
(பரி. 6 : 29; பெருங். 1. 41 : 20 - 22; சீவக. 2655)

     30. முழக்கத்தைத் தன்னிடத்தே பெற்ற நீர்விழாவின்கண்
மிகுதியாக உள்ள புதுவருவாயையுடைய பெருங்கதையிலுள்ள
நீராட்டரவமென்னும் பகுதி இங்கே அறிதற்குரியது.

     31. தண்பணை- மருதநிலம். நீ கோபித்தாயாதலின்.

     32-8. இனிவரும் கேடு கூறி இரங்கியது.

     32-4. மேற்குத் திசையிலே மறைந்து கிழக்கில் உதயமாகி,
பரவிய இருளை அகற்றும் பயனையுடைய பண்பைப் பெற்ற சூரியன்
ஒருபாற் சாயாமல் நின்ற நடுப்பகற்பொழுதில்.

     34-8. இரவிலே நிகழ்வதற்குரிய செய்திகள் மக்களின்றிப்
பாழ்பட்ட பகைவர் நிலத்தில் நடுப்பகலிலும் நிகழ்ந்தனவென்றார்;
"பின் பகலேயன்றியும் பேணா ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும்"
(பு, வெ. 39)

     35. கவர்த்த வழிகளில் உள்ள வெள்ளிய நரிகள் கூவுதலை
முறையே செய்ய.

     36-7. பிதுங்கிய கண்களையுடைய கோட்டான்கள் குழறுகின்ற
குரலாகிய தாள இசைக்கு ஏற்பக் கொடிய கண்களையுடைய
பேய்மகள் ஆடுகின்ற. கழல்கட் கூகை : முருகு. 49.

     தண்பணை (31) பெரும்பாழாகும்; தாம் அளிய. மன்:
ஒழியிசைப் பொருளில் வந்தது.

     (பி - ம்) 13. சிரறுசெல. 34. ஞாயிறு கொண்ட. (2)


     116ஆம் பாட்டில் ஐயவியென்பதற்கு அப்புக்கட்டென்றும்
பொருளெழுதினார்.

     2ஐயவித்துலாம்: சிலப் 15; 213

     3செங்கண்ணையுடைய பேயாதலின் கரிய கண் என்னாது
கொடியகண் என்றார்.

     4எடுத்துச் செலவு - போர்புரிதற்கு மேற்செல்லுதல்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2. கயிறுகுறு முகவை
 
22.சினனே காமங் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை
தெறல் கடுமையொடு பிறவு மிவ்வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந்
 
5தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபய முதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
 
10மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
 
15ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
வெல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப் பொலிந்த மா
இழைப் பொலிந்த களிறு
வம்பு பரந்த தேர்
  
20அமர்க் கெதிர்த்த புகன் மறவரொடு
துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக்
கடுமிளைக் குண்டு கிடங்கின்
 
25நெடுமதில் நிரைப் பதணத்    
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூச லினம்பழிக் குநரும்
 
30ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பணை சீறினை யாதலின்
குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப்
பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பக லமையத்துக்
 
35கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக்
கழல்கட் கூகை குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகுமன் னளிய தாமே.
 

துறை    : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. 
வண்ணம்  : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு    : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்    : கயிறுகுறு முகவை.

1 - 11. சினனே..............உம்பல்.

உரை : சினன் காமம் கழி கண்ணோட்டம் - கையிகந்த  சினமும்
கையிகந்த  காமமும்  கையிகந்த  கண்ணோட்டமும்; அச்சம்  பொய்ச்
சொல்   அன்பு  மிக  வுடைமை  -  பகைவர்க்கு  மிக  அஞ்சுதலும்
வாய்மையின்   படாதபொய்   சொல்லுதலும்  தொடர் புடையார்பால்
அளவிறந்த   அன்புடைமையும்;   தெறல்  கடுமையொடு  பிறவும் -
மையிகந்த தண்டஞ் செய்தலும் இவைபோல்வன பிறவும்; இவ்வுலகத்து
அறம்  தெரி திகிரிக்கு இவ்வுலகத்தே அறமறிந்து செய்யும் அரசுமுறை
நடத்தற்கு;    வழியடையாகும்    தீது    -    இடையீடாய்த்   தீது
விளைவிப்பனவற்றை;    சேண்    இகந்து    -   தன்னாட்டின்கண்
இல்லையாக்கி;  நன்று மிகப் புரிந்து - அறத்தையே மிகுதியும் செய்து;
மாக்கள்  -  தன்னாட்டில்  வாழ்பவர்;  பிறர்பிறர் நலியாது - தம்முட்
பிறரைத்  துன்புறுத்தாமலும்;   வேற்றுப்பொருள்  வெஃகாது - பிறர்க்
குரித்தாய்த்     தமக்கு இயைபில்லாத    பொருளை  விழையாமலும்;
மையில்    அறிவினர்    செவ்விதின்    நடந்து   -  குற்றமில்லாத
அறிவுடையராய்ச்  செம்மை  நெறிக்கண்  வழுவுதலின்றி;  தம்  அமர்
துணை  பிரியாது  -  தம்பால்  அன்பு  செய்து  வாழும் வாழ்க்கைத்
துணைவியைப்  பிரியாமல்; பாத்து உண்டு - பலர்க்கும் பகுத்தளித்துத்
தாமும் உண்டு இனிது வாழ; மூத்த யாக்கை யொடு பிணியின்று கழிய
-  வெறிதே மூத்த யாக்கையும் நோயும் இலராய் மிக்கு நிலவ; கடலும்
கானமும்  பல்  பயம்  உதவ;  ஊழி  உய்த்த  உரவோர்  உம்பல் -
அரசியலை முறையே செலுத்திய பேரரசர் வழித் தோன்றலே எ - று. 

கழி     கண்ணோட்டம் என்புழி நின்ற, கழி யென்னும் உரிச்சொல்
ஏனைச்  சினம்  காமம்  என்பவற்றோடும் சென்றியையும்,   அன்புமிக
வுடைமை யென்றதற் கேற்ப, மிக்க அச்சமும், வாய்மையிடத்த   தாகாத
பொய்ம்மையும்  எனக்  கொள்க.  ஏகாரம் எண்ணுக் குறித்  தியல்வது.
கழிய   வென்பது,  கழி  யென்னும்  உரிச்சொல்  லடியாகப்   பிறந்த
வினையெச்சம்.  தீது  சேணிகந்து,  நன்று  புரிந்து,  மாக்கள்  மையில்
அறிவினராய்  நடந்து  பாத்துண்டு  பிணியின்று கழிய கடலும்  காடும்
பயம்  உதவ,  ஊழி  யுய்த்த உரவோர் உம்பல் என இயையும்,  திகிரி
யுருட்டிச்   செங்கோ   லோச்சும்  வேந்தர்  செய்வதும்   தவிர்வதும்
தேர்ந்து,  தவிர்வதனைத்  தவிர்த்தவழிச்  செய்வது செய்தது  போலச்
செம்மை   பயத்தலின்,  தீதினை  முதற்கட்  கூறினார்.  நன்றாற்றலிற்
றாழ்க்கினும்  தீது  களைதலே வேண்டுவ தென்பதை, “நல்லது  செய்த
லாற்றீ  ராயினும்,  அல்லது  செய்த  லோம்புமி  னதுதான்,  எல்லாரு
முவப்ப  தன்றியும்,  நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே” (புறம். 195)
என்று   சான்றோர்  கூறுதல்  காண்க.  வினைசெய்தற்கண்   சினமும்
அரசர்க்கு ஓரளவு வேண்டுதலின், விலக் குண்பது கழிசினமே  யென்க.
வேந்தனைச்  “சினங்கெழு குரிசில்” (பதிற். 72) என்றும்,  “சினங்கெழு
வேந்தர்”  (புறம். 72) என்றும் சான்றோர் கூறுதலால், சினமும் ஓரளவு
வேண்டியிருத்தல்  துணியப்படும்  உயிர்த்  தோற்றத்துக்கும்  அன்பும்
அருளும்   மன்னிய   இன்ப   வாழ்விற்கும்  அளவுட்பட்ட   காமம்
இன்றியமையாமையின்  கழி  காமமே தீதென  வறிக. “காமஞ்  சான்ற
கடைக்கோட்            காலை............சிறந்தது            பயிற்றல் 
இறந்ததன்   பயனே” (தொல். பொ. 192) என்றும், “எல்லா  வுயிர்க்கு
மின்ப   மென்பது,   தானமர்ந்து   வரூஉ   மேவற்றாகு”  மென்றும்,
“சிறப்புடை  மரபிற்  பொருளும்  இன்பமும்,  அறத்துவழிப்  படூஉம்”
(புறம்.  31) என்பதனால் அறத்தின் இம்மைப் பயன்கள் நற்பொருளும்
நற்காமமுமாம்   என்றும்   சான்றோர்   ஓதுவது   காண்க.  எனவே,
அறத்துக்குத் துணையும் பயனுமாகிய அளவுட்பட்ட காமத்தை விடுத்து
அளவிறந்து செல்லும் கழிகாமமே நூலோரால் யாண்டும் விலக்கப்பட்ட
தென்  றறிக.  குற்றம்  செய்தோரை மேன்மேலு மூக்கு மாகலின், கழி
கண்ணோட்டமும் தீதெனப்பட்டது. சின முதலிய மூன்றும்  உள்ளத்தே
யுருத்  தெழுவனவாதலின், ஓரினமாக்கப்பட்டன. “காணாச்  சினத்தான்
கழிபெருங்காமத்தான்,  பேணாமை   பேணப்  படும்”   (குறள்.  866)
என்பதனால், கழிசினமும் கழி காமமும் விலக்கப்படுவன காண்க. 

அச்சம்    உள்ளத்தைச் சிதைத்து மெய்யினும் வாயினும் விளங்கத்
தோன்றலின்,    சின   முதலியவற்றைச்   சாரவைத்து,   உள்ளத்தே
யில்லாததைக்  கூறுவதாகிய  சொன்மே  னிற்கும்  பொய்ச் சொல்லை
அச்சத்தின்  பின்  வைத்தார்.  இவ்விரண்டையும்  ஓரினப்படுத்தியது
சொல்லோடியைபுண்மை  கருதி  யென்க, “அச்சமே கீழ்கள தாசாரம்”
(குறள்.  1075)  என்றும், “அச்சமுடையார்க் கரணில்லை” (குறள். 534)
என்றும்  சான்றோர்  விலக்கினமையாலும், கொலைக் கடுத்த நிலையிற்
றங்கும்  குற்றம்  பொய் கூறுதலாதலாலும் இவ்விரண்டும் விலக்குண்ப
வாயின.   “ஒன்றாக   நல்லது   கொல்லாமை   மற்றதன், பின்சாரப்
பொய்யாமை   நன்று”  (குறள்,  323)  என்பதனால்  கொலைக்கடுத்த
நிலையி்ற்றங்குவது  பொய்கூற  லென்பது உணர்க. அரசாட்சியின்கண்
பகைவரது   பகைமைக்கு  ஓரளவு  அஞ்சுதலும்,  வினைக்குரியாரைத்
தேர்ந்து     தெளிதற்கண்     புரைதீர்ந்த         பொய்ம்மையும்
வேண்டியிருத்தலின்,  மிக  அஞ்சுதலும், வாய்மைப்பாற் படாத பொய்
கூறுதலையும்  விலக்கினார்.  “அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு”
என்றும்,  “உட்பகை  யஞ்சித்தற்  காக்க வுலைவிடத்து, மட்பகையின்
மாணத்தெறும்”(குறள்.  882,  883)  என்றும் வருவனவற்றால் அச்சம்
ஓரளவு   வேண்டியிருத்தலும்,   இல்வழி  “வகையறிந்து  தற்காத்தல்”
இலனாய்  வேந்தன்  கெடுதலும்  பயனா  மென்க. “அஞ்சுவ தஞ்சல்
அறிவார் தொழில்” என்பதும், “மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்,
பிழையுயி    ரெய்தின்    பெரும்பே    ரச்சம்,   குடிபுர  வுண்டுங்
கொடுங்கோலஞ்சி,  மன்பதை  காக்கும்  நன்குடிப்  பிறத்தல்,  துன்ப
மல்லது  தொழுதக  வில்”  (சிலப்.  வஞ்.  25  - 100 - 104) லெனச்
சேரமான்  செங்குட்டுவன் அஞ்சிக் கூறுவனவும் ஈண்டு நினைவுகூரத்
தகுவனவாம்.   வாய்மையிற்   றீராத  பொய்ச்  சொல்லும்  அரசியல்
வினைக்கு   வேண்டுமென்பதை,   “அறம்பொரு   ளின்ப   முயிரச்ச
நான்கின்,  றிறந்தெரிந்து  தேறப்படும்” (504) என்று திருவள்ளுவனார்
தெரிவிப்பதனாலறிக.

கழி  கண்ணோட்டம்போல் அன்பு மிகவுடைமையும் தீதா மாகலின்,
நட்டோரை  யளிக்குமிடத்து  இதன்  பயப்பாடு  கண்டு  விலக்கினார்.
அன்பு   தொடர்புடையார்   மேலும்,   கண்ணோட்டம்   தன்னொடு
பயின்றார்  மேலும்  செல்வன.  அன்பு மிக வுடையனாயவழி, அன்பு
செய்யப்பட்டார்   “கொளப்பட்டே   மென்றெண்ணிக்  கொள்ளாதன”
செய்து வேந்தனது கொற்றம் சிதைப்ப ராதலின், அன்பு மிக வுடைமை
தீதாய்   விலக்கப்படுவதாயிற்று.    சச்சந்தன்    கட்டியங்காரன்பால் 
அன்பு      மிகவுடையனாய்,       “எனக்  குயி ரென்னப்பட்டான்
என்னலாற்  பிறரை யில்லான்”      என்று    தன்      னரசினை
அவன்பால்    வைத்துக்கெட்ட    திறத்தைச்      சீவகசிந்தாமணி
தெரிவிப்பது காண்க.

தெறலாவது,     நெறி திறம்பியும் பகைத்தும் கொடுமை   செய்து
குற்றப்பட்டார்கண்  வேந்தன்  செய்ய  வேண்டுவது.  அத்  தெறலின்
கடுமையாவது    குற்றத்தின்   மிக்க   தண்டம்;   இது   கையிகந்த
தண்டமென்றும்   வழங்கும்.  கையிகந்த  தண்டம்,  “வேந்தன்  அடு
முரண்  தேய்க்கும்  அரம்” (குறள், 567) என்ப. குற்றங் காணுமிடத்து,
“மெய்கண்ட  தீமை  காணின்,  ஒப்ப  நாடி அத் தக வொறுத்”தலும்,
ஒறுக்குமிடத்தும்,  “கடிதோச்சி  மெல்ல” வெறிதலும் வேண்டுமென்பது
அரசியன்முறை.     இனிப்         பழையவுரைகாரர்,     “அச்சம்
பகைவர்க்கஞ்சுதல்”  என்றும்,  “அன்பு பொருண்மே லன்பு” என்றும்
கூறுவர். 

“பிறவும்”     என்றது, இக் கூறியவை போல அரசர்க் காகா வென
ஆன்றோரால்   விலக்கப்பட்டன  வெல்லாம்  எஞ்சாமல்  தழுவுதற்கு;
அவற்றைத்   திருக்குறள்   முதலிய  அற  நூல்களுட்  காண்க.  இக்
குற்றங்களை   யுடையதாயின்   அரசனீதி   செல்லாது  கெட்டழியும்
என்பார்,  “அறந்தெரி  திகிரிக்கு  வழியடையாகும்  தீது” என்றார். தீ
தென்பதனை   ஒவ்வொன்றிற்கும்   தனித்தனிக்  கூட்டுக.  “கால்பார்
கோத்து  ஞாலத்  தியக்கும்,  காவற்  சாகா  டுகைப்போன்  மாணின்,
ஊறின்  றாகியாறினிது  படுமே,  உய்த்தல் தேற்றா னாயின் வைகலும்,
பகைக்கூழள்ளற்பட்டு,   மிகப்பஃ  றீநோய்  தலைத்தலைத்   தருமே”
(புறம்.  185)  என்று  பிறரும்  கூறுதல்  காண்க. அறம் தெரி திகிரி -
அறம் நிற்றற் பொருட்டு ஆராய்ந்து செலுத்தப்படும் அரசு முறை. வழி
யடைப்பதை, “வழியடை” யென்றார்.

கழிசினம்    முதலிய குற்றமும் பிறவுமாகிய தீது தம் அரசியலிலும்,
அது நிலவும் நாட்டிலும் அறவே இல்லையாகப் போக்கினமை தோன்ற,
“சேணிகந்து”  என்றார்.  என் றென்பது எஞ்சி நின்றது. தீது நீங்குவது
நன்றேயென்றாலும்,  தாமும் அறம் பலவும் செய்தன ரென்பார் “நன்று
மிகப்  புரிந்து”  என்றார்.  மிகப்  புரிந்தது,  அது  நோக்கி நாட்டில்
வாழ்பவர்  தம்  செம்மை  நெறி கடவாது நிற்றற்கென வுணர்க. சினம்
முதலியன  மிக்க  வழித் தீது பயத்தல் போல மிகச் செய்தவழி மிக்க
நலம் பயத்தலின், “நன்று மிகப் புரிந்து” என்றெடுத் தோதினார்.

கடற்பயன்  முத்தும் மணியும் பவளமு முதலாயின. கானம் உதவும்
பயன் காடுபடு பொருள் பலவுமாம். தீதுசே ணீங்க நன்று மிகப் புரிந்து
நிலவும்  அரசியலால்  கடலும்  கானமும்  பயன்  பலவும்  உதவுவன
வாயின வென்றதற்கு, “கடலும் கானமும் பலபயம் உதவ” என்றார்.

கடலும் கானமு மொழிந்த நாட்டிடத்து நலம் கூறுதலுற்ற ஆசிரியர்,
நாட்டு  மக்களின்  செயல்நலம்  காட்டுவாராய், “பிறர் பிறர் நலியாது”
என்பது முதலியன கூறினார். நன்று மிகப் புரியும்  அரசியல் நலத்தால்
நாட்டில்  வளம்  மிகுதலின்,  செல்வக் களிப்பால்  மையலுற்றுப் பிறர்
பிறரை    வருத்தியும்,     பிறர்க்குரிய    பொருளை    வெஃகியும்
நெறி     பிறழும் ஏனை நாட்டவர் போலாது, தெளிந்த     அறிவும்
செவ்விய   நடையு   மேற்கொண்டு   இன்புற்  றொழுகினரென்றற்கு,
“பிறர்பிறர்   நலியாது  வேற்றுப்பொருள்  வெஃகாது, மையிலறிவினர்
செவ்வதினடந்து” என்றார்.  நலியாமைக் கேது வெஃகாமையும், அதற்
கேதுமையில்   அறிவுடைமையுமா   மெனக்  கொள்க. அறிவுடைமை
சொல்லானும்  செயலானும்  வெளிப்படுமாயினும், சொல்லினும் செயல்
சிறந்து  தோன்றலின்  அதன்மேல்  வைத்துச்  “செவ்விதின் நடந்து”
என்றார்.

ஓதல்,     தூது, ஆள்வினை, நாடுகாவல், பொருள் என்ற  இவை
குறித்துப்  பிரிவதல்லது  தம்மை  விரும்பி  யுறையும் துணைவியராய
மகளிரை  அன்பு  கண்ணறப்  பிரிதல்  அந்  நாட்டவர்பால் இல்லை
யென்பதற்கு,  “தம்  அமர்துணைப்  பிரியாது”  என்றார். பரத்தையிற்
பிரிவு   இவ்வாசிரியர்  காலத்தே  பிரிவாகக்  கருதப்படுவ  தன்றென்
றுணர்க.  “ஓதல்  பகையே  தூதிவை பிரிவே”    (தொல். அகத். 25) என               ஆசிரியர்              தொல்காப்பியனாரும்
பரத்தையிற்   பிரிவை   இவற்றோடு  கூறாமை  யறிக.  பொருண்மிக
வுடைமையின், பொருள் வயிற் பிரிவும், பகையின்மையின், தூதிற்பிரிவு
ஆள்வினைப்     பிரிவு     நாடு     காவற்பிரிவு    முதலியனவும்,
மையிலறிவினராதலின்,  ஓதற் பிரிவும் இல்லா தொழிதலின் “பிரியாது”
என்றார். இன்ப வொழுக்கத்துக் காமஞ் சிறப்பது குறித்துப் பரத்தையிற்
பிரிதல் பிரிவாகாதாயினும், அதுதானும் செய்திலரென்றற்கு, “தம் அமர்
துணைப் பிரியாது” என வற்புறுத்தினார். 

“பகுத்துண்டு     பல்லுயி ரோம்புதல்   இல்வாழ்வார் யாவர்க்கும்
தலையாய  கடனாதலின்  “பாத்துண்”  டென்றார்.  உண்ண வென்பது
உண்டெனத்   திரிந்துநின்றது.  இசையாகிய  பயனின்றிக்  கொன்னே
மூத்து  விளியும்  யாக்கை  யென்றற்கு  மூத்த யாக்கையென வாளாது
கூறினார்.  “இசையிலா  யாக்கை”  (குறள்.  229)  என்று  சான்றோர்
கூறுவது  காண்க.  பிணியிலா வாழ்க்கை, வாழ்விற் பெறும் பேறுகளுள்
சிறந்த பேறாதலின், “பிணியின்று கழிய” வென்றார்; “நோயின் றியன்ற
யாக்கையர்”  (முருகு.  143)  என  நக்கீரனார்  பிணியிலா வுடம்பைப்
பாராட்டி   யுரைப்பது   காண்க.  இத்தகைய  சிறப்புடைய  மக்களை
“மாக்கள்”  என்றார்,  இன்பமும்  துன்பமும்  விரவிய வாழ்க்கையில்,
இன்பமல்லது  காணாமையின்.  இனி  மக்களெனற்பாலது விகாரத்தால்
நீண்டதெனக்   கோடலு   மொன்று.   இவ்  வாழ்க்கை  இத்துணைச்
சிறப்புற்று  விளங்குதற்கேது,  கோடா அரசியலேயென வறிக. “யாண்டு
பலவாகியும்  நரையில்லை  யாலோ”  என்று  வினவிய சான்றோர்க்கு,
ஆசிரியர் பிசிராந்தையார் “வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்”
(புறம். 191) என்றது ஈண்டுக் கருதத்தக்கது.

இங்ஙனம்     சீரிய முறையில்   அரசு  முறை நடாத்துவோர்க்கு
இன்றியமையாது   வேண்டப்படுவது   சிறந்த   அறிவு  காரணமாகப்
பிறக்கும்  மனத்திண்மை  யாதலின், அதனை யுடையோர் என்றற்கு “
ஊழி  யுய்த்த உரவோர்” என்றார். உம்பல், வழித்தோன்றல். உரவோர்
ஊழி  யுய்த்த நலத்தால், கடலும் கானமும் பல்பயம் உதவலும், நாட்டு
மக்கள்  இசையின்றிக்  கொன்னே  மூத்து விளிதல் பிணியுடையராதல்
இன்றி    மேம்படுதலுமுளவாயின   .என்பார், “பல்   பயம்   உதவ”
என்றும்,  “மூத்த  யாக்கையொடு   பிணியின்று    கழிய” வென்றும் 
பிரித்துக் கூறினார்.

12 - 16. பொன்செய்..............தோன்றல்.

உரை : பொன் செய் கணிச்சி - இரும்பினாற் செய்த  கோடரியால்;
திண்   பிணியுடைத்து   -   திண்ணிய   வன்னிலத்தை  யுடைத்துத்
தோண்டப்பட்டபடியால்;   சிரறு   சில   ஊறிய   நீர்  வாய்ப்பத்தல்
சிதறுண்டு சிறிதே யூறிய நீர் பொருந்திய கிணறுகளில்;

கயிறு   குறு முகவை - நீண்ட கயிறு கட்டிச் சேந்தப்படும் குறுகிய
முகவைகளை;  மூயின  மொய்க்கும்  -  நெருங்கச் சூழ்ந்து மொய்த்து
நிற்கும்; ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த - ஆனிரைகளையுடைய
கொங்கரது  நாட்டைவென்று  தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட;
வேல்கெழு  தானை  வெருவரு தோன்றல் - வேலேந்திய தானையால்
பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே எ - று. 

பொன்     னென்றது ஈண்டு இரும்பினை. இரும்பைக் கரும்பொன்
என்றும்   வழங்குப.   கருங்கல்  நிறைந்த  வலிய  நிலமாதல்  பற்றி,
வன்னிலத்தைத்    “திண்பிணி”   யென்றார்.   மண்ணுங்   கருங்கற்
பாறைகளும் கொண்டு இறுகப் பிணித்தது போறலின், வன்னிலம் பிணி
யெனப்பட்டதெனினு    மமையும்.    இந்நிலத்தை    நீர்   வேண்டி
யகழுமிடத்து,  கற்பாறைகள்  ஒழுங்கின்றிப் பல்லாறாக உடைந்து சிதறி
நீர்  மிக  வூறும்  வாய்ப்பின்றி  யிருப்பது தோன்ற, “சிரறுசில வூறிய
நீர்வாய்ப்   பத்தல்”   என்றும்,   நீர்   வாயாதவழிப்  பத்தலிடத்தே
முகவைகள்   உளவாகா  வாதலின்,  “நீர்  வாய்ப்  பத்த”  லென்றும்
கூறினார்.  சிரறுதல், ஒழுங்கின்றிச் சிதறுதல், “சிரறுபு சீறச் சிவந்தநின்
மார்பு”  (கலி.  88)  என்றாற்  போலச் சிரறுதல் வேறாத லென்றுமாம்.
வேறாதல், பிளந்து வேறாதல், “சிரறுதல் சிதறுத” லென்றும், “சிலவூறிய
வென்றது  பல்லூற்றொழியச் சில்லூற்றாக வூறிய வென்றவா” றென்றும்
பழையவுரைகாரர்  கூறுவர்.  “கணிச்சியிற்  குழித்த  கூவல்  நண்ணி,
ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல்” (நற். 240) என்பதனால், பத்தல்
உட்கிண றென்றும் கொள்ளப்படும். மேலே அகலமாக அகழ்வது கூவ
லென்றும்,    அதனுள்ளே   குறுகிய   வாயுடைத்தாய   ஆழமாய்த்
தோண்டப்படுவது பத்த லென்றும் கொள்க. இப் பத்தலைப் பிள்ளைக்
கிணறு  என்றும்  கொங்கு  நாட்டவர்  கூறுப. முகவை, நீர் முகக்கும்
கருவி; இது மரத்தாற் செய்யப்படுவது. நீரின் சின்மை குறித்தும் நீரும்
மிக்க  ஆழத்திலிருப்பது  பற்றியும்  குறு  முகவை கொள்ளப்பட்டது.
பத்தல்    இயல்பாகவே    மிக    ஆழ்ந்திருப்பதுடன்   நாடோறும்
சுரண்டுதலால்  அவ் வாழம் மிகுந்தவண்ண மிருப்பதால், நீண்ட கயிறு
கொண்டு  முகத்தலல்லது இறங்கி முகந்து கோடல் கூடாமையின் கயிறு
குறுமுகவை  யென்றதற்கு,  நீண்ட  கயிறுகொண்டு  நீர் சேந்தப்படும்
குறுமுகவை  யெனப் பொருள் கூறப்பட்டது. முகவையைக் குறுமுகவை
யெனவே,   கயிற்றையும்   நீண்ட   கயிறெனக்  கோடல்  வேண்டிற்
றென்றுமாம்.   குறுமை,   சிறுமை  குறித்து  நின்றது.  நீர்  கிடைத்த
லருமையால்  வேட்கை கொண்டலையும் ஆனிரைகள், முகவைகளைக்
கண்ட  மாத்திரையே  அவற்றின் குறுமையும் நீரின்மையும் நோக்காது
மொய்க்கின்றன       வென்பார்,     “மூயின        மொய்க்கும்”
என்றார்.        அவ்வாறு       மொய்ப்பனவற்றிற்குக்   கொங்கர்
நீர்   முகந்  துண்பிப்பரென்ற  கருத்தால்  முகவைகள்  கயிற்றோடே
கட்டிவைக்கப்   பெற்றுள்ளனவென்பது  இதனாற்  பெறப்படும்.  இப்
பொருட்சிறப்புப்பற்றி,  இப்  பாட்டும் இத்  தொடராற்  பெயர்பெறுவ
தாயிற்றென வறிக.

இனிப்   பழையவுரைகாரர், “தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித்
தன்  கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை யென்றவா” றென்றும்,
“இச்  சிறப்பானே  இதற்குக்  கயிறுகுறு முகவை யென்று பெயராயிற்”
றென்றும்  கூறுவர்  என்றது  நீர்  முகப்பது கருதியிடப்பட்ட முகவை
நீரை முகவாது இட்ட கயிற்றையே முகக்கும் என்றும், இவ்வாறு கூறிய
சிறப்புக்  கருதியே  இப் பாட்டு இத் தொடராற் பெயரெய்திற்றென்றும்
கூறியவாறாம்.

இனி,     கொங்கர் என்பவர் கொங்கு நாட்டவர்; இவரை “ஒளிறு
வாட்கொங்கர்”  (குறுந்.  393)  என்றும், “ஈரம்படைக் கொங்கர்”(பதிற்.
73) என்றும்சான்றோர் கூறுதலால், இவர்  படை வன்மையாற் புலவர்
பாடும் புகழ்  பெற்றவ  ரென்பது  விளங்கும். இவர் வாழும் நாட்டின்
பெரும் பகுதி  மென்புல  வைப்பின் நீர்நா டன்மையின்,   இவர்பால்
ஆனிரை வளர்க்கும் தொழில்  மிக்குநின்றது. அதனால், இவரை “ஆ
கெழு கொங்கர்”  என்றார்.  “கொங்கர்   படுமணி   யாயம்  நீர்க்கு
நிமிர்ந்து செல்லும், சேதா வெடுத்த செந்நிலப்   பெருந்துகள்” (அகம்.
79)  என்றுபிறரும்    கூறுதல்    காண்க.    இவரது   கொங்குநாடு
சேரநாட்டைச் சேர விருத்தலின், பலகாலும் சேரர் இவர்களை வென்று
இவர்     நாட்டைத்    தம்        நாட்டொடு      அகப்படுத்திக்
கொண்டுள்ளனர்.  அதுபற்றியே    சேரமன்னர்கள்,  “நாரரி  நறவின்
கொங்கர் கோ” (பதிற். 87) என்றும், “கட்டிப்    புழுக்கிற்   கொங்கர்
கோ”   (பதிற்.   90)       என்றும்     பாராட்டப்படுவர்.     இக்
கொங்குநாட்டைத்   தாம்   கோடல்  வேண்டிச்  சோழ   வேந்தரும்
பாண்டி     வேந்தரும்    போருடற்றி    யிருக்கின்றனர்.   சோழன்
குராப்பள்ளித்  துஞ்சிய  கிள்ளிவளவன் கொங்கரை வென்ற  திறத்தை,
“மைந்த    ராடிய   மயங்குபெருந்  தானைக்,  கொங்கு புறம் பெற்ற
கொற்ற வேந்தே” (புறம் 373) என்றும், பசும்பூண் பாண்டியன் வென்ற
செய்தியை, “வாடாப் பூவின் கொங்க ரோட்டி, நாடுபல தந்த பசும்பூண்
பாண்டியன்”   (அகம்.   253) என்றும்    சான்றோர்  கூறியிருத்தல்
காண்க.   இவ்வாறு முடிவேந்தரே  யன்றிக் குறுநில மன்னரும்   இக்
கொங்கரை  வென்று  கொள்ள  முயன்றுள்ளனர்.  ஆஅய்  அண்டிர
னென்பான்   இம்    முயற்சியிலீடுபட்ட    திறத்தை    “கொங்கர்க்
குடகடலோட்டிய  ஞான்றை” (புறம். 130) என்று சான்றோர்  குறிப்பது
காண்க.    முடிவேந்தர்    மூவர்க்கும்   குறுமன்னர்க்கும்   விழைவு
தோற்றுவித்துப்   போருடற்றுதற்   கேதுவாகிய  நலம்  பல  வுடைய
கொங்கர்,  எக்காலத்தும்  போரை யெதிர்நோக்கி, அதற்கேற்ற போர்ப்
பயிற்சி  யுடையராயிருந்தமையின், அவரை முற்றவும் வென்று கோடல்
அரிதென்பது  தமிழக  முழுவதும்  அறிந்த செய்தியாயிற்று. ஆகவே,
அக் கொங்கரை வென்று அவர் தம் நாட்டை யகப்படுத்தற்குத் துணை
செய்த  தானையை, “வேல்கெழு தானை” யென்றும், இச் சேரமான்பல்
யானைச்   செல்கெழு  குட்டுவன்  அத்  தானையையுடையனாதலால்,
ஏனை     வேந்தர்க்கு     இவன்பால்   அச்சமுண்டாயிற்றென்பார்,
“வெருவரு தோன்றல்” என்றும் கூறினார். 

கணிச்சியால்     திண்பிணி யுடைத்துச் செய்த பத்தற்  கரைகளில்
மூயினவாய்  மொய்க்கும்  ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல்
கெழுதானையால் வெருவரு தோன்றல் என இயைத்து முடிக்க.

17 - 27. உளை...........குட்டுவ.

உரை : உளைப் பொலிந்த மா -  தலையாட்டத்தை     யணிந்து
விளங்கும்  குதிரைகளும்;  இழைப் பொலிந்த களிறு - இழை யணிந்து
விளங்கும்  யானைகளும்;  வம்பு  பரந்த  தேர் - தேர்ச் சீலைகளால்
விரிந்து  தோன்றும் தேர்களும்; அமர்க் கெதிர்ந்த புகல் மறவரொடு -
போருடற்றற்கென   முற்பட்ட   போரை   விரும்பும் வீரர்களுமாகிய
நால்வகைப்படையுடன் சென்று; மலர் அதன் பறந்தலை - பரந்தகன்ற
செண்டு     வெளியின்    எதிரே    நிற்கும்;      துஞ்சு    மரம்
துவன்றிய      ஓங்கு      நிலை      வாயில்   -   கணையமரம்
செறிக்கப்பட்ட    உயரிய   நிலையினையுடைய மதில் வாயிலிடத்தே;
தூங்குபு  தகைத்த  - தூங்குமாறு கட்டிய; வில் விசை மாட்டிய விழுச்
சீர்  ஐயவி - வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய
விழுமிய  சிறப்புடைய  ஐயவித்  துலாமும்; கடிமிளை - காவற் காடும்;
குண்டு கிடங்கின் - ஆழ்ந்த கிடங்கும்; நெடுமதில் நிரைப் பதணத்து -
நெடிய   மதிலிடத்தே  நிரல்படவமைத்த  பதணமும்  உடைமையால்;
அண்ணல்  அம்பெருங்கோட்டு  அகப்பா  எறிந்த  -  பகைவருடைய
தலைமையும்  பெருமையும்  பொருந்திய உயர்ந்த அகப்பா வென்னும்
அரணை  யெறிந்து வென்றி கொண்டதனால்; பொன் புனை உழிஞை -
பொன்னாற்  செய்த  உழிஞை  மாலை  சூடிய; வெல்போர்க்குட்டுவ -
வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே எ - று. 

மாவும்    களிறும் தேரும் மறவரும் என்ற நாற்படையுடன் சென்று
பறந்தலை  கடந்து  அகப்பா  வெறிந்த  வெல்போர்க் குட்டுவன் என
இயையும்.  ஒடு,  எண்ணொடு, உளை, தலையாட்டம்; குதிரையின் இரு
செவிகட்குமிடையே   நெற்றியிற்  கிடந்து  அழகு  செய்வது.  உளை
யென்பது பிடரிமயிருக்கும் பெயராய் வழங்கும்; “விரியுளைக்  கலிமான்
தேரொடு  வந்த  விருந்து”(கலி.  75)  என்பதன் உரை காண்க. இழை
யென்றது  பொன்னரி மாலையும் ஓடையுங் கிம்புரியும்  பிறவுமாயினும்,
சிறப்புடைய   பொன்னரி   மாலையே  ஈண்டு   இழையெனப்பட்டது.
இவ்வாறு  குதிரைக்கு உளையும் களிற்றுக்கு இழையும் அழகு செய்தல்
பற்றி,   “உளைப்  பொலிந்தமா  இழைப்  பொலிந்த  களிறு”  எனச்
சிறப்பித்தார்    வம்பு,    தேர்ச்சீலை.   அமர்க்கெதிர்ந்த   வழியும்,
ஆடவர்க்கு   அவ்   வமரின்பால்  உள்ளம்  செல்லாதாயின்,  உயிர்
காத்தலொன்றே  பொருளாகக் கொண்டு மறம் வாடுவராதலால், ‘அமர்க்
கெதிர்ந்த’  வென்றதனோ டமையாது “புகல் மறவரொடு” என்றார். ஒடு,
உயர்பின்   வழிவந்த   ஒருவினை   யொடு.  அமரெனின்  அதனை
ஆர்வத்தோடு ஏற்று ஆற்றுதற்குச் செல்லும் அவரது விரைவு தோன்ற,
“எதிர்ந்த” வென இறந்த காலத்தாற் கூறினார்.

இனி,  குட்டுவன் அகப்பாவை யெறிந்த செய்தி கூறலுற்ற ஆசிரியர்,
அதன் அமைதியினைத்  தெரித்து மொழிகின்றார். அகமதிலைப் பற்றச்
செல்வோர்  அதன்  எதிரேயுள்ள  செண்டு  வெளியில்  காத்தூன்றும்
பகைவீரரை   வென்றுகொண்  டேக  வேண்டுதலின்  அங்கே  போர்
நிகழ்வது  கண்டு,  அதன்   பரப்பும்  விளங்க  “மலரகன் பறந்தலை”
யென்றார்.   மலரகல்  என்பது  மீமிசை  போல  ஒரு  பொருள்மேல்
நின்றது.    கோயிலிடத்தேயுள்ள   முரசு   முழங்கும்   முற்றம்போல
அகமதிலின்  புறத்தே  அதற்கு  முற்றமாய் மூலப் படையிருந்து போர்
முரசு  முழக்கும் வெளியைச் செண்டுவெளி யென்ப. செண்டாட்டயரும்
இடமாதலின் இதனைச் செண்டுவெளி  யென்பது வழக்கு. அகமதிலைக்
கொள்வோரும்  காப்போரும்  கலந்து  போர் செய்தலின், இதனையும்
பறந்தலை  யென்றாரென வறிக. இவ் வெளி அகமதிற்கும் புறமதிற்கும்
இடையே அகழியை யணைந்து கிடக்கும் வெளியிடம்.

துஞ்சுமரம், கணையமரம், “துஞ்சு  மரக்குழாம் துவன்றி” (பதிற். 16)
என்புழியும், “மதில் வாயிலில் தூங்கம் கணையமரம்” என்பர்  பழைய
வுரைகாரர்.     இதனைக்   கழுக்கோ  லென்றும்  கூறுப. யானையும்
தேரும்  வருத்தமின்றிச்  செல்லுமாறு  அகற்சியும்  உயர்ச்சியுமுடைய
வாயி  லென்றற்கு  “ஓங்கு  நிலை  வாயில்” என்றார். ஐயவித்துலாம்,
மதிலிடத்தே   நிறுத்தப்படும்   ஒருவகைப்  போர்ப்பொறி.  இதனை
வாயிலிடத்தே  தூங்குமாறு கட்டி, கதவை முருக்கிப் புகும் களிறுகளை
இதனால்  தாக்குவரென்பது  தோன்ற,  “  வாயில்  தூங்குபு தகைத்த
ஐயவி”   யென்றார்.  மேலும்,  இதனைப்  பகைவர்மேல்  விசையம்பு
செலுத்தும்   விற்பொறியோடு   பொருந்த  வைத்திருப்ப  ரென்றற்கு,
“வில்விசை  மாட்டிய  விழுச்சீ  ரையவி”  யென்று  கூறினார். இனிப்
பழையவுரைகாரர்,  “தூங்குபு  வென்பதனைத் தூங்க வெனத் திரித்துக்
காலவழுவமைதி    யெனக்    கொள்க”    வென்றும்.   “தகைத்தல்,
கட்டுத”லென்றும்  கூறுவர்.  விசைவில்  லென மாறி யியைக்க. தானே
வளைந்து  அம்புகளைச்  சொரியும்  விசையையுடைய  வில்.  விசை
வில்லாகிய  பொறியென  வுணர்க  இனி, “வில்விசை மாட்டிய விழுச்சீ
ரையவி”   யென்பதற்கு  விசையையுடைய  வில்லாற்  செலுத்தப்படும்
வலிய அம்புகளாலும் வீழ்க்க மாட்டாமையால், விசைவலி யழிந்து வில்
கெடுமாறு   பண்ணிய   விழுச்சீர்  ஐயவித்  துலாம்  என்றுரைப்பினு
மமையும்.  விசையுடைய  வில்லாலும்  துளை  யுருவ எய்ய முடியாத
மிக்க  கனத்தையுடைய  “ஐயவித்  துலாம்” என்பர் பழையவுரைகாரர்.
அவ்வாறு   கொள்ளுமிடத்து   மாட்டிய   வென்பதற்கு   மாள்வித்த
வென்பது பொருளாகக் கொள்க. 

மிளை,     காடு,  கரந்திருந்து  தாக்கும்  மறவரும்   பல்வகைப்
பொறிகளும்  உடைய  காடாதலின்,  “கடிமிளை” என்றும், இடங்கரும்
கராமும்   முதலையும்   சுறவும்   பிறவும்   இனிது   வாழ்தற்கேற்ற
ஆழமுடைமைபற்றிக்   “குண்டுகிடங்”   கென்றும்   விதந்தோதினார்.
கவணும்   கூடையும்  தூண்டிலும்  துடக்கும்  ஆண்டலை  யடுப்பும்
சென்றெறி  சிரலும்  நூற்றுவரைக்  கொல்லியும்,  தள்ளி  வெட்டியும்,
அரிநூலும்,       பிறவும்       கொண்டு,                ஏனை
வீரரால்     காவல் வேண்டப்படாத நொச்சி மதில்  “நிரைப்பதணம்”
எனப்பட்டது.  அகப்பா  வென்பது சீரிய அரணமைந்ததோ ரிடமாகும்
இஃது உம்பற்காட்டைச் சேர்ந்தது. குட்டுவன் உம்பற் காட்டை வென்று
கொண்ட  காலத்து  இங்கேயிருந்து,  தன்னை  யெதிர்த்த  பகைவரை
வென்று    இதனைத்    தனக்குரித்தாகக்கொண்டான்.   இதுபற்றியே
“அண்ணலம்   பெருங்கோட்டகப்பா   வெறிந்த   குட்டுவ”  என்றார்.
இவனது     இச்     செயலையே,    “மிகப்பெருந்    தானையொடு
இருஞ்செருவோட்டி,  அகப்பா வெறிந்த அருந் திறல்” (சிலப். 28, 143
-4)   என  இளங்கோவடிகளும்  கூறினர்  ஐயவித்  துலாம்  முதலிய
பொறிகளாலும்  மிளை,  கிடங்கு,  மதில்,  பதணம் முதலியவற்றாலும்
தலைமையமைத்தது   பற்றி,   “அண்ணல்”   என்றும்  புறத்தோரால்
எளிதில்  தோண்டப்படாத  அடியகலமும், ஏணிக் கெட்டாத உயரமும்,
பற்றற்காகாக்   காவற்பெருமையும்   உடைமைபற்றிப்   “பெருங்கோட்
டகப்பா”   வென்றும்  சிறப்பித்தார்.  இவை  அகப்பாவின்  அருமை
தோன்ற  நின்றனவாயினும் குட்டுவனுடைய போர்நலமும்  வன்மையும்
விளக்குதல்  காண்க.  பெருங்கோட்டகப்பா  வென்பதனால்,  இதனை
மலைமேலரணாகக் கொள்ளற்கும் இடமுண்டு.

குட்டுவற்     குரித்தாகிய   இவ்   வகப்பா       பிற்காலத்தே
செம்பியனொருவனால்  இவனிடமிருந்து  வென்று கொள்ளப்பட்டதாக
மாமூலனார்,“குட்டுவன்    அகப்பா    வழிய    நூறிச் செம்பியன்,
பகற்றீ வேட்டஞாட்பு” (நற். 14) என்று குறிக்கின்றார்.
 

“சுற்றம   ரொழிய வென்று கைக்கொண்டு, முற்றிய முதிர்” (தொல்.
பொ.  68) வாகிய  உழிஞைப்போ ராதலால், இவனது உழிஞை பொன்
புனை   யுழிஞை”  யெனப்படுவதாயிற்று.  பொன்னாற்  செய்யப்பட்ட
உழிஞையென்றுமாம்.  உழிஞையைக்  கொற்றா னென்றும், அது குட்ட
நட்டார் வழக்கென்றும் புறநானூற்றுரைகாரர் (புறம். 50) கூறுவர். இஃது
ஒருவகைக்  கொடி; “நெடுங்கொடி யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று
சான்றோர்   கூறுப.   இது   பொற்   கொற்றான்,   கருங்கொற்றான்,
முடக்கொற்றான்   எனப்  பலவகைப்படும்.  இவற்றுள்  பொற்கொற்றா
னென்பதே உழிஞை யென்று சிறப்பிக்கப்படுவது இதன் தளிரும் பூவும்
பொன்னிறமுடைய  வாதலால்,  “பொலங்குழை  யுழிஞை”  (புறம். 50)
பொன்புனை   யுழிஞை   யென   ஈண்டுக்   கூறியது   பொன்னாற்
செய்யப்பட்ட தென்றற்கு.

முழுமுத  லரணம் முற்றலும் கோடலும் செய்யும் வேந்தருள், மதில்
கொள்வோரும்   காப்போரும்   என   வரும்   இருவரில்,  முற்றிய
புறத்தோரை வென்று பெறும் வெற்றியினும், காத்துநின்ற அகத்தோரை
வென்று  பெறும்  வெற்றியே  சிறந்ததாகலின், “வெல்போர்க் குட்டுவ”
வென்றார்.

28 - 38. போர்த்து..............தாமே.

உரை : போர்த் தெறிந்த பறையால் புனல் செறுக்கு நரும்  தோல்
போர்த்துள்ள    பறையை   உழவரை   வருவித்து   மிக்கு   வரும்
புனலையடைப்பவரும்;     நீர்த்      தரு      பூசலின     அம்பு
அழிக்குநரும்     -     நீர்       விளையாட்டின்கண்      எழும்
ஆரவாரத்தால்  அம்பும்  வில்லும்  கொண்டு  விற்பயிற்சி செய்வாரது
ஆரவாரத்தையடக்குபவரும்;    ஒலித்தலைவிழாவின்    மலியும்   -
பேராரவாரத்தையுடைய  பல  விழாக்களிலே  திரண்டு  கூடி மகிழும்;
யாணர் நாடு தண் பணை புதுமையினையுடைய பகைவர் நாட்டு மருத
நிலங்கள்;    சீறினை    யாதலின்    -   அப்   பகைவர்பால்   நீ
சினங்கொண்டனையாதலால்; குட திசை மாய்ந்து குண முதல் தோன்றி
-   மாலையில்   மேற்றிசையின்  மறைந்து  காலையில்  கீழ்த்திசையி
லெழுந்து   தோன்றி;   பாயிருள்   அகற்றும்   -   தான்  மறைந்து
தோன்றுதற்கிடையே  நிலவுலகிற்  பரந்த  இருளைப் போக்கும்; பயம்
கெழு  பண்பின்  -  பயன்  பொருந்திய  பண்பினையுடைய; ஞாயிறு
கோடா  நன்பக லமையத்து - ஞாயிறு ஒரு பக்கமும் சாயாமல் நிற்கும்
உச்சிப்  போதாகிய நண்பகற் காலத்தே; கவலை வெண்ணரி கூஉமுறை
பயிற்றி  - பசியால் வருந்துதலையுடைய குறுநரிகள் முழலொலி போல
ஊளையிட்டுக்  கூவுதலை  முறையே  செய்ய; கழல்கண் கூகை குழறு
குரல்  பாணி - பிதுங்கியன போன்ற கண்களையுடைய கோட்டான்கள்
செய்யும்  குழறு  குரலின்  தாளத்துக்கேற்ப;  கருங்கண்  பேய் மகள்
வழங்கும் - பெரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்;   பெரும்
பாழாகும்  பெரிய  பாழ்நிலமாய்  விடும்; தாம் அளிய - அவை தாம்
அளிக்கத்தக்கன எ - று. 

புதுப்புனல்     மிக்குக் கரையை  யுடைத்துப்  பெருகி வருங்கால்,
உடைமடையைக்   கட்டுதற்குப்   பறையை   யறைந்து  கடையரைத்
தருவித்துத்  தொகுத்தல் பண்டையோர் மரபாதலால், “போர்த்தெறிந்த
பறையால்  புனல் செறுக்குநரும்” என்றார்.  புனலடைக்கும் குறிப்பைத்
தன்னோசையால்  தெரிவித்தற்குப் பறையே யேற்ற தாதலால் அதனை
விதந்தோதினார்;   “ஓர்த்த   திசைக்கும்  பறை”  (கலி.  92)  எனச்
சான்றோர்  கூறுவது  காண்க.  “போர்த்தெறிந்த பறை” யென்றதனால்,
பழைய தோலை நீக்கிப் புதுத்தோல் போர்த்து முழக்கினமை பெற்றாம்.
நீர்த்தரு  பூசல்  - நீர் விளையாட்டின்கண் எழும் ஆரவாரம்.  அம்பு,
ஆகுபெயரால்  அம்பும்  வில்லும்  கொண்டு  விற்பயிற்சி செய்வாரின்
பூசலுக்காயிற்று.  புனல் செறுக்குநரும், புனல் விளையாட்  டயர்வாரும்
தம்மில்   ஒருங்குகூடி   மகிழ்தற்கு   இடம்  கூறுவார்,  “ஒலித்தலை
விழாவின்  மலியு”  மென்றார்.  புனல்  செறுக்குநர்  உழவ  ரென்றும்,
புனல்     விளையாட்    டயர்வோர்    உழுவிப்போரும்    ஏனைச்
செல்வருமென்றும் கொள்க. இருதிறத்தோரும் வேற்றுமையின்றிக்   கூடி
மகிழும் இடம் விழாவாயிற்று. இனி, “நீர்த்தருபூச லினம்பழிக்  குநரும்”
என்றுகொண்டு,  நீர் விளையாட் டயர்வார் வில்லும் அம்பும் கொண்டு
போருடற்றும்  மன்னர்  போலத் தம்முள் அணிவகுத்து நின்று சிவிறி
கொண்டு    நீரெறிந்து    பொரும்    விளையாட்டில்   ஒருதிறத்தார்
மறுதிறத்தாரைப்     பழிப்பவரும்    என்றும்,    நீர்    கொணரும்
ஆரவாரத்தின்கண்    விரையக்கூடிச்    செய்வன    செய்யாதாரைத்
தெழித்தும்  உரப்பியும்  வினைசெய்விப்போரும்  என்றும்  உரைத்தலு
முண்டு.  பறையினை  யெடுத்து  மொழிந்தாரேனும்  ஏனைப்  பம்பை
முதலிய    பிற   இசைக்கருவிகளும்   கொள்ளப்படும்;   “தழங்குரற்
பம்பையி்ற்   சாற்றி   நாடெலாம்,   முழங்குதீம்   புனலகம்   முரிய
மொய்த்தவே”  (சீவக.  40) என்று சான்றோரோதுதல் காண்க; நாளும்
புதுமை  விருப்பமுடைய ராதலின்,  “யாணர் நாடு” என்றார்; “நாளும்
புதுவோர் மேலவன்”(ஐங்.  17)  எனச்  சான்றோர்  கூறுவது  காண்க.
யாணர்,  புதுமை.ஆகுபெயரால் புது வருவா யெனினுமமையும்.

“நாடு  கெழு  தண்பணை  பெரும்பா    ழாகுமன்” என்பதனால்,
அந்நாடு பகைவர் நாடாயிற்று. அது பாழாகு மென ஆசிரியர் இரங்கிக்
கூறுதற்  கேது,  குட்டுவன்  அப்  பகைவர்பால்  கொண்ட  பகைமை
காரணமாகப்  பிறந்த  செற்றமாதலின்,  “சீறினை  யாதலின்” என்றார்.
நாடு  பாழாகு  மென்னாது,  “தண்பணை” யெனச் சிறப்புறக் கூறியது,
ஏனை  நாடுகளை  நோக்கச்  சேரநாட்டில் தண்பணை  அரிதென்றும்,
அஃது  அழியற்பால தன்றென்றும், அரசரது பகைமை அவர் நாட்டை
யழிக்கின்றதென்றும்  ஆசிரியர்  உள்ளக்குறிப்பைப் புலப்படுத்துகிறது.
மாய்தல்,  மறைதல்  ஞாயிறு  குடபான்  மறைந்ததும், உலகில் இருள்
பரந்து, பயன்படும் வினை நிகழாவாறு மறைத்து விடுதலாலும், கீழ்பால்
ஞாயிறு  தோன்றித்  தன்  வெயி  லொளியை  உமிழ்தலுறின், வினை
பலவும்    இனிது    நிகழ்தலாற்   பயனுறுவித்தலாலும்   ஞாயிற்றை,
“பயங்கெழு பண்பின் ஞாயிறு” என்றார்.    இக்        காலத்திலும்
ஆராய்ச்சியாளர் ஞாயிற்றின் பயன்களை மிகவிரித்துக் கூறுவர்.  இனி,
பயங்கெழு   பண்பின் ஞாயிறு என்றோதி, அது  குடதிசை மாய்தலும்
குணமுதல்  தோன்றலும்  கூறியதனால்,  அம்  மாய்தலும்   பாயிருள்
பரவுதலும்   பயன்   குறித்து  நிகழ்வனவே  யென்பதும்  கருத்தாகக்
கொள்க.  பகற்காலத்தே  வினைவழி  யுழந்தோயும்  உயிர்கட்குத் தன்
மறைவால்  இரவுப்போதெய்துவித்து உறக்கமென்னும் உயிர் மருந்தால்
ஓய்வகற்றி    யூக்கம்    கிளர்வித்தலின்    ஞாயிற்றின்   மறைவும்
பயனுடைத்தாதல்    உணரப்படும்.   இவ்வாறு  கொண்டுரையாக்கால்
குடதிசை  மாய்தலும்  குணமுதல்  தோன்றலும் கூறியது சொற்பல்குத
லென்னும் குற்றமா மென வறிக.

ஒருமருங்கும்     சாயாமல் வான நடுவே ஞாயிறு   நிற்ப.  அதன்
ஒளிக்கதிர்   செவ்வே   யொழுக  விளங்கும்  நண்பகற்   போதினை,
“ஞாயிறு”  கோடா  நன்பகல்”  என்றார். தனக்கு வேண்டும் இரையை
முயன்று   தேடும்  மதுகையில்லாத  குறுநரி  பசிப்பிணியாற்  கவலை
யெய்தும் இயல்பிற்றாதலின், “கவலை வெண்ணரி” என்றும், அந்நரியும்
தனித்தின்றிப்  பலவாய்க்  கூடி யாமத்திற் கொருமுறை கூவுதல் என்ற
முறைமைப்படியே  கூவும்  என்றற்கு, “கூழூஉமுறை பயிற்றி”  என்றும்
கூறினார்.  பயிற்றி  என்பதனைப்  பயிற்றவெனத்  திரிக்க.  வெண்மை,
நிறஞ்  சுட்டாது  குறுமையும் வலியின்மையும் சுட்டிநின்றது;  செவ்விய
அறிவிலாரை  வெள்ளறிவினர் என்பது போல. கண்கள் பிதுங்கி வெளி
வருவது  போறலின்,  “கழல்கட் கூகை” என்றார்; நக்கீரரும், “கழல்கட்
கூகை”(முருகு.  49)  என்பர். வெண்ணரி முறை பயிற்றி முழவு போல்
கூவும்  கூக்குரற்  கேற்பக்  கூகை  குழறுதலால் அதன் குரல் தாளங்
கொட்டுவது  போல  வுளதென்பார், “குழறு குரல் பாணிக்கு” என்றார்.
நரியின் குரல் முழவு போலு மென்பதனை, “வெவ்வா யோரி முழவாக”
(சீவக.  309)  என்பதனா  லறிக.  நரியின்  முழவோசையும் கூகையின்
குரற்   பாணியும்  கேட்டதும்  பேய்மகள்   கூத்தாடுகின்றாளென்பார்,
“கருங்கட்  பேய்மகள்  வழங்கும்”  என்றார். கருங்கண், பெரிய கண்,
பழையவுரைகாரர்   கொடிய   கண்ணென்பர்.   அவர்   “வழங்குதல்
ஆடுதல்” என்றும் கூறுவர். இங்கே கூறப்பட்ட கருத்தே,   “வேறுபடு
குரல     வெவ்வாய்க் கூகையொடு, பிணந்தின்  குறுநரி  நிணந்திகழ்
பல்ல,   பேஎய்   மகளிர்   பிணந்  தழூஉப்  பற்றி,  விளரூன்தின்ற
வெம்புலான் மெய்யர், களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி” (புறம். 359)
என்று பிறரும் கூறுதல் காண்க.

மருதத்  தண்பணைக்கண் நண்பகற் போதில் வெண்ணரி கூவுதலும்
கூகை  குழறுதலும் பேய்மகள் ஆடுதலும் நிகழா வாகலி்ன்,  பாழ்பட்ட
நிலத்திற்   குரிமை   கூறுவார்,   “பேய்மகள்  வழங்கும்  பெரும்பா
ழாகுமன்”  னென்றார்;  “சிறுவெள்  ளென்பின்  நெடுவெண் களரின்,
வாய்வன்  காக்கை  கூகையொடு கூடிப், பகலுங் கூவு மகலுள்” (புறம்.
362)  எனச்  சான்றோர்  கூறுதல் காண்க. பெரும்பாழாகுமன் என்றது,
மீளவும்  பண்படுத்திச்  சீர்  செய்யலாகாமை  தோன்றநின்றது.  மன்,
இரக்கப்   பொருட்டு,   விரைவிற்   பாழ்பட   விருப்பது  நினைந்து
கூறுதலின்,   “அளிய”  என்றார்.  தாமென்பது  கட்டுரைச்  சுவைபட
நின்றதாம்.

தீது     சேணிகந்து, நன்றுமிகப் புரிந்து மக்கள் பிணியின்று கழிய,
ஊழி   யுய்த்த   உரவோ   ரும்பல்,  கொங்கர்  நாடு  அடிப்படுத்த
வேல்கெழுதானைத்  தோன்றல்,  அண்ணலம்  பெருங்கோட்  டகப்பா
வெறிந்த    வெல்போர்க்    குட்டுவ,   நீ   நாடுகெழு   தண்பணை
சீறினையாதலின், இனி அவை பேய்மகள் வழங்கும்   பெரும்பாழாகும்;
அவை     அளிய  என்பதாம்; பழையவுரைகாரர், “உரவோ  ரும்பல்,
தோன்றல்,   குட்டுவ,  நீ   சீறினையாதலின்,  நாடுகெழு  தண்பணை
அளிய தாம் பெரும்பாழாகும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். 

“இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்  கூறியவாறாயிற்று”.

சீறினை   யாதலின் நாடுகெழு தண்பணை பாழாகு மென எடுத்துச்
செலவினை   மேலிட்டுக்   கூறினமையால்  வஞ்சித்துறைப்  பாடாண்
பாட்டாயிற்று.    உளைப்   பொலிந்த   மா   வென்பது   முதலாய
நான்கடிகளும்   கடிமிளை   யென்பது   முதலாய   இரண்டடிகளும்
வஞ்சியடியாகலின்,    வஞ்சித்தூக்கும்,    ஏனைய    நேரடியாகலின்
செந்தூக்கு   மாகலின்,  இதற்குத்  தூக்கு  வகுத்தோர்  செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும்  என்றார். புகலென அடியிடையும் ஓடுவென அடியின்
இறுதியும் வந்தன கூன்.


 மேல்மூலம்