81.
|
உலகம் புரக்கு முருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து |
5
|
காலை
யிசைக்கும் பொழுதோடு புலம்புகொளக்
களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் |
10
|
மாயிருங்
கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ வேணி வியலறைக் கொட்ப |
15
|
நாடடிப்
படுத்தலிற் கொள்ளை மாற்றி
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் றானை யுதவி
வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல்
முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து |
20
|
சாறயர்ந்
தன்ன காரணி யாணர்த்
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயற் கொல்லிப் |
25 |
பெருவாய்
மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத்
தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கி னயவரப் |
30
|
பெருந்தகைக்
கமர்ந்த மென்சொற் றிருமுகத்து
மாணிழை யரிவை காணிய வொருநாட்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவின் மள்ளரொடு |
35
|
தொன்மருங் கறுத்த லஞ்சி யரண்கொண்டு
துஞ்சா வேந்தருந் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே. |
துறை
- முல்லை. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு -
செந்தூக்கு. பெயர் - நிழல்விடு கட்டி (16)
(ப
- ரை) 2. கமஞ்சூல் - மேகங்கள்; நிறைந்த
சூலுடைமையின் மேகங்கள் கமஞ்சூலெனப்பட்டன.
4. சிலையொடு
கழறியென ஒடு விரிக்க; சிலை - முழங்குதல்.
கழறல் - இடித்தல். நிவந்து விசும்பு அடையூவென மாறிக்கூட்டுக;
விசும்படைதல் - மலையிலே படிந்தவை எழுந்து விசும்பை அடைதல்.
5. காலை இசைக்கும்
பொழுதோடு புலம்புகொளவென்றது
மேகங்கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம்
கொள்ளா நிற்கவென்றவாறு.
புலம்புகொள (5)
வயவர் (9) வியலறைக் கொட்ப (14) என
முடிக்க.
9. வாயில் கொள்ளா
மைந்தினரென்றது தமக்குக் காவலடைத்த
இடங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினையுடையவரென்றவாறு.
ஈண்டு, வாயில்
- இடம்.
10. மா இருங்கங்குலென்றது
மிகவும் கரிய இராவென்றவாறு.
கங்குலினும் 10)
கொட்ப (14) என முடிக்க.
11. தோள்பிணி
மீ கையரென்றது குளிராலே தோளைப்பிணித்த
அத்தோள்மீது உளவாகிய கைகளையுடையாரென்றவாறு.
12. முடிதல்வேட்கையரென்றது
தாம் எடுத்துகெ்காண்ட போர்
முடிதலிலே வேட்கையையுடையாரென்றவாறு.
15. நாடு அடிப்படுத்தலிற்
கொள்ளை மாற்றியென்றது நாட்டை
அடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற
கொள்ளையை மாற்றியென்றவாறு.
16. அழல்வினையமைதல்
- ஓட்டறுதல்.
இவ்விடைச்சிறப்பானே
இதற்கு, ‘நிழல்விடு கட்டி’ என்று
பெயராயிற்று.
17. கட்டளைவலித்தல்
- இன்னார் இன்னதனைப் பெறுகவென்று
தரங்களை நிச்சயித்தல். தானைக்கு உதவியென விரிக்க.
சாறு அயர்ந்தன்ன
(20) தீம்பிழி (21) என முடித்து
விழாக்கொண்டாடினாலொத்த இனிய மதுவெனவுரைக்க.
காரணி யாணர்த்
(20) தூம்பு (21) என்றது கருமையைப்
பொருந்தின அழகிய மூங்கிற்குழாயென்றவாறு.
25. பெருவாய்மலர்
- 1இருவாட்சி. 2பசும்பிடி - பச்சிலை.
மகிழ்ந்து - விரும்பிச்சூடியென்றவாறு.
26. மின் உமிழ்ந்தன்ன
சுடர் இழையென்றது மேகம் மின்களை
உமிழ்ந்தாற் போன்ற சுடர்களையுடைய இழையென்றவாறு.
முனை கைவிட்டு
முன்னிலைச் செல்லாது (33) துஞ்சா (36)
என முடித்து, நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு
நின்முன்னே வந்து வழிபட்டு நிற்றலைச் செய்யமாட்டாமையால்
துஞ்சாதவெனவுரைக்க.
34. தூ எதிர்ந்து
பெறாஅத் தா இல் மள்ளரொடென்றது முன்பு
நின் வலியொடு எதிர்த்துப் பின் எதிர்க்கப்பெறாத வலியில்லாத
மள்ளரொடென்றவாறு.
மள்ளரொடு (34)
துஞ்சா (36) என முடிக்க.
அண்ணல் (18),
நின் அரிவை காணிய (31) நின்தேர் (32)
ஒருநாட் (31) புரவிபூண்பதாகவேண்டும் (32); அதுதான் நின்
அரிவைக்கே உடலாக வேண்டுவதில்லை; அதனானே
துஞ்சாவேந்தரும் துஞ்சுவார்களாக வேண்டும்; அதுதான் நின் (36)
பெருந்தோட்கு விருந்துமாக வேண்டும்; இவ்வாறு இரண்டொரு
காரியமாக இதனைச் செய்க (37) என வினைமுடிவு செய்க.
இதனாற்சொல்லியது
3காமவேட்கையிற்செல்லாத அவன் வென்றி
வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
இஃது அவனரிவை
4கற்புமுல்லையைப் பற்றி வந்தமையால்,
துறை முல்ையைாயிற்று.
(கு
- ரை) 1-5. மழைக் காலத்தின் இயல்பு.
1-2. உலகத்தைப்
பாதுகாக்கும் அச்சம் பொருந்திய
சிறப்பினையும், கரிய நிறத்தையும், மின் முதலான தொகுதியையும்
உடைய வளம் பொருந்திய நிறைந்த நீரையுடைய மேகங்கள்.
கமஞ்சூல் மேகத்திற் காயிற்று.
3-4. மற்ற நான்கு
பூதங்கள் அகலுதற்குக் காரணமான
பெரிய ஆகாயத்தில் அதிர்தற்குக் காரணமான சினம் மிக்கு மிக்க
முழக்கத்தோடு இடித்து, மலையிலே படிந்து பின் எழுந்து
ஆகாயத்தை அடைந்து. நிவந்து விசும்பு அடையூ என மாறிக்
கூட்டுக.
5. கார்காலத்தைத்
தெரிவிக்கும் பருவத்தால் வருத்தம்
கொள்ளா நிற்ப. 6. ஆண்யானைகள் பரவிச் செல்ல விரைந்த
கதியையுடைய குதிரைகளை மேலாட்கள் வேண்டிய அளவிலே
தடுத்துச் செலுத்த.
7. விளங்குகின்ற
கொடிகள் அசையும்படி தேர்கள் சுழன்று
திரிய.
6-7. மு.
பதிற். 49 : 4-5.
8. தம் பகைவர்க்கு
உதவியான அரசர் பக்கத்தே வந்து
தங்கினாலும் நெஞ்சில் நடுக்கம் இல்லாதவராகித் திரிந்து. இது
வயங்கலெய்திய பெருமையின்பாற்படும் (தொல்.
புறத். 8)
9-11. தமக்கு
வரையறுத்த இடங்களைக் காவல் கொள்ளாத
வன்மையுடையராகி வீரர்கள், மிகவும் கரிய இரவிலும் சிறந்த
வீரவளை ஒளிவிடும்படி, குளிராலே தோளைப்பிணித்த அத்தோள்
மீது உள்ள கைகளையுடையராகிப் போரில் விருப்பம் மிக்கு. மாயிரு :
ஒரு பொருட்பன்மொழி. இதிற் கூறப்பட்டது கூதிர் பாசறை.
11-2. நாள்தோறும்,
போர் விரைவில் முடிதலில்
விருப்பமுடையராய்த் தம் மேம்பாடுகளைக் கூறி, நெடிய மொழிதல்,
மாராயம்பெற்ற நெடுமொழியாதலின் இவ்வீரர் அரசனால் எட்டி,
காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் பெற்றோராவரென்றறிக.
“நெடிய மொழிதலுங் கடியவூர்தலும்” (நற்.
210 : 5)
13-4. கெடாத
நல்ல புகழையுடைய தங்குடியின் பெருமையை
நிலை நிறுத்தும்பொருட்டு. அளவிடப்படாத எல்லையையுடைய
அகன்ற பாசறையிலே சுழன்று திரிய. இடா ஏணி : பதிற்.
24 : 14,
உரை ; “இடாஅவேணிநின் பாசறை யானே” (பதிற்.
விடுபட்ட
பாடல், 4 : 10). பாசறை அறையென முதற்குறையாயிற்று (பதிற்.
24 : 14, உரை)
15. பகைவரது
நாட்டை அடிப்படுத்தினமையால், முன்பு
நிகழ்ந்த கொள்ளையை மாற்றி.
16-8. அழலிலே
உருக்கினமையால் குற்றமற்ற ஒளிவிடுகின்ற
பொற்கட்டிகளுள், இன்னவர் இன்னதனைப் பெறுவாரென்று அவரவர்
தரங்களை நிச்சயிக்க, நினது சேனையிலுள்ள வீரர்க்கு உதவி, வேற்று
நாட்டினிடத்தே சென்று தங்கிய வெல்லும் போரைச் செய்யும்
தலைவனே.
19. முழவைப்போல
வடிவம் அமைந்த பெரிய பலாப்பழத்தின்
சுளைகளை உண்டு; “கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்”
(புறநா. 236 : 1) ; “கானப் பலவின் முழவுமருள்
பெரும்பழம்”
(மலைபடு. 511)
20-21. விழாக்
கொண்டாடினாற் போன்ற, கருமையை அணிந்த
அழகிய மூங்கிற்குழாயினிடத்தே முதிர்ந்த இனிய கள்ளையுண்டு.
சாறயர்ந்தன்ன தீம்பிழி என இயைக்க. “சாறுபடு திருவி னனைமகி
ழானே” (பதிற். 65 : 17)
மூங்கிற் குழாயில்
தேனைவைத்து முதிரச் செய்தல் : முருகு.
195, ஒப்பு. ; புறநா. 129: 2.
22. காந்தட்
பூவாலாகிய கண்ணியை அணிந்த செல்வத்தையுடைய குடியிற் பிறந்த செல்வர். 23.
ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியையுடையவராகித் தம்பால்
வந்து இரப்போர்க்குக் கொடுக்கும்.
24-5. வண்டுகள்
ஒலிக்கின்ற சோலையையும் மிக்க
மழையையும் உடைய கொல்லிமலையில் உண்டான
இருவாட்சிமலரோடு பச்சிலையை விரும்பிச்சூடி.
26. மேகம் மின்னலை
உமிழ்ந்தாற் போன்ற ஒளிவிடுகின்ற
ஆபரணங்களை அணிந்த மகளிர் திரளையுடைய. கூந்தலுக்கு
மேகமும், இழைகளுக்கு மின்னலும் உவமையாகக் கொள்க.
27-8. தன்நிறம்
மறைதற்குக் காரணமான வண்டுகள்
ஒலிக்கின்ற கூந்தலையும் சுருளையும் உடைய ஒளிபொருந்திய நெற்றி
அழகு கொள்ளும்படி. 29 - 31. வளைந்த காதணியோடு போர் செய்த
பார்வையையும், இன்பம் வரும்படி தன்பெருங்குணங்களுக்கு ஏற்பப்
பொருந்திய மென்மையான சொல்லையும், அழகியமுகத்தையும்
உடைய, மாட்சிமைப்பட்ட இழைகளை அணிந்த நின் தேவி
காணும்படி, ஒரு நாளில்.
32. நின்னுடைய
குதிரைகள் நீண்ட தேரைப் பூண்பனவாகுக ;
மாள : முன்னிலையசைச் சொல் ; கலித்.
124 : 19; புறநா. 146 : 11.
33. போரைக்
கைவிட்டு நின்முன்னே செல்லாமல்.
34. முதலில்
நின் வலியோடு மாறுபட்டுப் பின்
எதிர்க்கப்பெறாத, வன்மையில்லாத வீரரோடு.
35. பழையதாகிய
குலத்தை நீ அழித்தலை அஞ்சித் தம்
அரண்களைப் பாதுகாப்பாக எண்ணிக்கொண்டு.
36-7. தூங்காத
பகையரசரும் தூங்குக; நின்னுடைய பெருந்
தோள்களுக்கு விருந்தும் ஆகுக.
துஞ்சாவேந்தர்
: “வலமுறை வருதலு முண்டென்றலமந்து,
நெஞ்சு நடுங் கவலம் பாயத், துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே”
(புறநா. 31 : 15 - 7)
செல்லாது (33)
மள்ளரொடு (34) துஞ்சா (36) என இயையும்.
(பி
- ம்) 7. நுடங்கல. 22, காந்தட்கண்ணி. 27. வண்டுபடு
துப்பின். 32. புனைவினை நெடுந்தேர். 34. தூவின்மள்ளரொடு.
(1)
1குறிஞ்சிப்.
94, ந.
2குறிஞ்சிப்.
70, ந.
3பதிற்.
50, உரை.
4பு. வெ.
283. |