பக்கம் எண் :

400கலித்தொகை

கணவரைக் கூடின மகளிருடைய தேன் நாறுகின்ற மயிரினுள்ளே கிடந்து அரும்பாந்தன்மை முற்றி விரிந்த நறிதாகிய முல்லைகளைப் பாய்ந்து நுகர்ந்து வேறுசில பூக்களை 1நுகரவேண்டுமென்னும் நினைவின்றிப் பண்டுதாம் விரும்பின பூக்களையுடைய பொய்கையை மறந்து அதனை ஒரு காலத்தும் நினையாத புனல் அணிந்த நல்ல ஊரனே: எ - று.

கடாம் - மதம்படுதுளை; ஆகுபெயர், வீங்கிறை, பிரிந்து வருந்தாமையின் மெலியாவிறை.

(1) வீங்குநீர் பரத்தையர்சேரியாகவும், அதன்கணவிழ்ந்தநீலம் காமச்செவ்வி நிகழ்ந்த பரத்தையராகவும், பகர்பவர் பரத்தையரைத்தேரேற்றிக் கொண்டுவரும் பாணர்முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்த வண்டிற்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத்தலைவனை 2நுகர்வித்தலாகவும், கங்குலில் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவுதுயிலுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும் பொருள் தந்து ஆண்டுப் புலப்படக்கூறிய கருப்பொருள்கள் புலப்படக்கூறாத மருதத்திணைப்பொருட்கு உள்ளுறையுவமமாய்வாறுகாண்க, இது "கிழவோட்குவம (2) மீரிடத்துரித்தே" (3) என்பதனான் மருதத்துக்கண் உவமப்போலி 3கூறினான்.

இது சீர்வகைக்கலியாகலின் வரிவண் டோங்குயரென நேரீற்றியற் சீரும் வந்தது.

9 (4) அணைமென்றோள் யாம்வாட வமர்துணைப் புணர்ந்துநீ
மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ
பொதுக்கொண்ட 4கவ்வையிற் பூவணிப் பொலிந்தநின்
வதுவையங் கமழ்நாற்றம் 5வைகறைப் பெற்றதை

1. தொல். அகத். 48 - ஆம் சூத்திரத்தினுரையில் இவ்வுரையாசிரியர் உள்ளுறை யுவமத்திற்கு 'வீங்குநீர்.............................நல்லுார்' என்னும் பகுதியை மேற்கோள் காட்டி, இக்குறிப்பையும் சிறிது வேறுபடக் குறித்துள்ளார். இ-வி.சூ. 586. உரையில் இ-வி. உரைகாரரும் அதனையே எழுதினர்.

2. ஈரிடம் - மருதமும் நெய்தலும்.

3. தொல். உவம. சூ. 29.

4. (அ) "அணைமென்றோள்" (கலி 1: 9. 30; 9; 124; 12.) (ஆ) "அணைமென்றோளாய்" (கலி. 91: 6 )
(இ) "அணைத்தோளாய்" (கலி. 543. 87: 9) என்பவைகளும் (ஈ) இந்நுாற்பக்கம் 343: 4 - ஆம் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1நுகரவேனு மென்னும், 2நுகர்வித்த தாகவும் 3கூறியது இது; 4கல்லையுள், 5வைகறைபெற்றதை.