எ - து: அகன்ற ஊரிடத்தேயிருந்து களவின்கண் அவனோடு கூடி இன்புற்ற காலத்து (1) இராக்காலத்து இருணீங்க விளங்கின அணிநிலாவையுடைய மதியம்போலேவிளக்கம் அமைந்து அவன்நீங்கின பின்பு பகற்பொழுதிடத்து ஒளி பாழ்பட்ட மதிபோலே ஒளிகெட்டு நன்றாகிய நுதலினின்றும் போன 1திலகத்தையுடையளாய் (2) நீலமணியைத் தானொளிவிட்டு மாறுபடும் பசிய பொன்னொளிகொல்லோ! மாவீன்ற பசிய 2கொழுந்தின்மேலே கோங்கம் பூவிற்றாதுபரந்த ஒளிகொல்லோ! என்று பிறர்கூறுந் தன்னணி தன்னிடத்தினின்றும் போம்படி தன்மேனியைமறைத்த பசலையளாய் அமையாமை தன்னெஞ்சம் இன்பத்தைத் தரும் பொருள்களோடே 3வெருவி அவ்வின்பங் கழிந்தபடியைநினைத்து (3) நாணாற் பிறரெதிர்முகநோக்காது நிலத்தைநோக்கி அந்நாண் மேற்போகின்றதற்கு அஞ்சி அழுது அழாதே பலவுஞ் சொல்லித் தன்குறை கூறி இவளொருத்தி என்ன வருத்தமுற்றாள் கொல்லோ என்று கூறுகின்றவர்களே! யான் பொன்செய்தேன்; யானுற்றதனைக் கேட்பீராக என்று கூறினான். எ - று. 10 | மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைகொன்று மற்றத னாருயி ரெஞ்சப் |
1. (அ) ‘‘நண்பகன் மதியம்போ னலஞ்சாய்ந்த வணியாட்கு’’ கலி. 121 : 18. (ஆ) ‘‘மாலை மணந்து காலைப் பிரியுங், காதல ருடையையோ கறைநீங்கு மதிய, மிரவே யாயி னல்லை பகலே, மெல்லியற் கொடிச்சி நுதலினும், புல்லென றனையா னோகா யானே’’ தமிழ்நெறி. மேற். (இ) ‘‘பார்குலாமுழுவெண்டிங்கள் பகல்வந்த படிவம்போலு, மேர்குலா முகத்தி னாளை’’ கம்ப. கிட்கிந்தைப் 51. (ஈ) ‘‘விரிகதிர்ப் பரிதி முன்னர் வெண்மதி மழுங்கும்’’ நைடத. போர்புரி. 2. 2. ‘‘நிறந்திகழ் பாசிழையென்றது தன்னின் அழுத்திய மணியினும் தன்னிறந்திகழும் பசும்பொன்னிழை யென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு, ‘‘நிறந்திகழ் பாசிழை’ என்று பெயராயிற்று’’ என்பது, பதிற். 73. உரை. 3. (அ) ‘‘நீயுந் தாயை யிவற்கென யான்றற், கரையவந்து விரைவனென்கவைஇக், களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா, நாணி நின்றோணிலை கண்டு’’ அகம். 16 : 13 - 16. (ஆ) ‘‘காணும் பொழுதி னோக்கல் செல்லாது, நாணி யிறைஞ்சும்’’ கலி. 49 : 8 - 9. (இ) ‘‘அன்மை கண்டு நாணிச், சோலை நோக்கி நடக்கும்’’ சீவக. 919. (ஈ) ‘‘மாதிர மெவையு நோக்கான் வளநகர் நோக்கான் வந்த, காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ் சேனை நோக்கான், றாதவிழ் கூந்தன் மாதர் தனித்தனி நோக்கத் தானப், பூதல மென்னு மங்கை தன்னையே நோக்கிப் புக்கான்’’ கம்ப. கும்ப. 3. (பிரதிபேதம்)1திலதத்தை, 2கொம்பின்மேலே, 3வெருவியவின்பம்.
|