பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்945

மறாஅ 1வரைசநின் மாலையும் வந்தன்
றறாஅ தணிகவிந் நோய்
46தன்னெஞ் சொருவற் கினைவித்தல் யாவர்க்கு
மன்னவோ காம நின் 2னம்பு

எ - து: உலகத்தார் வேண்டிக்கொண்ட காரியங்களை மறாத ஞாயிறே! என் கையினின்று நீங்குதலின்றாய் ஐதாகிய மயிரினையுடைய என் முன் கையிலேகிடந்து சுழலும் வளையிடத்தைப் பிடித்துத் தெளிவித்துக் கூடினவன், பாற்பயன் கோடற்குச் சிலகாட்டிக் கறக்கப்படாத காட்டெருமைகளை யுடைய வாகிய காட்டைக் கடந்துபோயினானோ? அன்றியே என்னோடு அன் புறாத தோர் தகைமையை எனக்குச் செய்து இவ்வூரிடத்தே இருந்தானோ? இரண்டும் அறிகின்றிலேன்; 3அவனைக் கூடப்பெறாதே நோவா நின்றேன்; அதற்குமேலே நீ உண்டாக்கும் மாலைக்காலமும் வந்தது; இனி இந்நோய் என்னிடத்தினின்று நீங்காது; அவன் இவ்விடத்துளனாயின் அவனை எனக்குக் காட்டுவாய்; காட்டி னால் அவனைக் கோபியாதே மனத்தாலே கைக்கொள்வேன் என்றாள்; அது காட்டாமற்படுதலின் அதனைக்கைவிட்டு (1) நடுவுநிலைமை செய்தலன்றி ஒரு பாலுறாத கூற்றமே! சுறாக்கொடியையுடைய இக்காமன் செய்கின்ற கொடுமை களை நீயும் நின் ஒலையிடத்தே 4எழுதிவைத்துக்கொண்டு தண்டிப்பை; அவன் 5எமக்கு (2) வழிபடுதெய்வமாதலின் அவனைத் தண்டியாமற்றணிவாயாக என்று கூறினாள்; அங்ஙனங் கூறி, காமனை எதிர்பெய்து கொண்டு, காமா ! நின்னுடைய அம்புகள் தனக்கு உரியதாகிய நெஞ்சினைத் தன்மேல் அன்பிலாதானொருவன் பொருட்டு வருத்துவித்தல் சிலர்க்கேயன்றி எல்லார்க்கு 6மாந் தன்மையையுடையவோ அல்லவோ? என்றுங் கூறினாள். எ-று. 


1. இந்நூற் பக்கம் 614 : 2-ஆம் குறிப்புப் பார்க்க.

2. (அ) நாலாயிர். நாச்சியார் திருமொழி. 1 - ஆவது ‘தையொரு திங்கள்’ என்பதிலுள்ள 10 பாசுரங்களும் (ஆ) "காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு, தாமின் புறுவர்’’ சிலப். 9 : 60 - 61; (இ) "தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியக் குழையினாயோர், காமமிங் குடையேன் காளை சீவக னகலஞ் சேர்த்தின், மாமணி மகர மம்புவண் சிலைக் கரும்பு மான்றேர், பூமலி மார்ப வீவ லூரொடும் பொலிய வென்றாள்" சீவக. 2057 (ஈ) "பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள், கன்னி யாயந் துன்னுபுசூழ, மதிற்புறங் கவைஇய புதுப்பூங் காவின், மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு, நகரங் கொண்ட நாளணி விழவினு, ளெழுநா டோறுங் கழுமிய காதலொடு, வழிபாடாற்றிய போதரும்’’ பெருங். (3) 5 : 27 - 33 என்பவைகளும் இங்கே அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1அரைசாநின், 2மார்பு, 3யான் அவனைக், 4எழுதிக்கொண்டு வைத்துத் தண்டிப்பை, 5நமக்கு வழி, 6அத்தன்மையை.