பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி315

எ - து: (1) முறம்போலுஞ் செவியாகிய (2) மறைப்பிடமாகவந்து பாய்ந்து மாறுபாடுசெய்த புலியைக் கோபித்து, மறத்தைத் தம்மிடத்தே கொண்ட நூற்றுவர்க்குத் தலைவனாகிய துரியோதனனைக் குறங்கில் உயிரைப் போக்குகின்ற பீமசேனனைப்போலே தன்னுடைய நீண்ட கோட்டினுடைய கூரிய முனையாலே குத்திப் புலியினது மருமத்தைத் திறந்து மாறுபாடு தீர்ந்த அழகினையுடைய யானை, (3) மல்லரை மறத்தைக்கெடுத்த (4) திருமால்போலே கல்லுயர்ந்த அகற்சியையுடைய சாரலிற் றன் சுற்றத்திற்கு நடுவே கூடித் (5) திரியும் நாடனே! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக;
எ-று.

(6)முறஞ்செவி..........செற்றென்பது உறுப்பறைபற்றிய வெகுளி. (7) மால்போலென்பது பெருமிதம்பற்றிய உவமம். செவிமறைப்பப் பாய்ந்த புலியைச் செற்றதன்மை தமது களவொழுக்கமிடமாக அலர்கூறிய அயலாரைக் கோபித்ததாகவும், அதனைக் குத்தி மாறுபாடு தீர்ந்த யானை தலைவன் வரைந்து 1கொண்டால் அயலாரைத்தாம்வென்ற தன்மையாகவும் யானை கிளைநாப்பட் 2கலந்தியலுதல் இனித்தலைவன் சுற்றத்தாரிடைப் பொருந்தியிருந்து இல்லறம் நிகழ்த்துந் தன்மையாகவும் உள்ளுறையுவமங் 3கொள்க. இது வினையுவமப் போலி. குறங்கறுத்திடுவான்போல் மால்போலென்பன ஏனையுவமம். அவையும் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து உள்ளுறையுவமம்போலத் திணையுணர்தலைத் தள்ளாவாய் நின்றன.


1. யானையின் செவிக்கு முறம் உவமை கூறப்படுதலை, "முறஞ்செவி வாரணம்" (கலி. 42. 2.) என்பதனாலும் அதன் குறிப்பாலும் அறிக.

2. புலி யானையைக்கொல்ல மறைந்துபாய்தல் : "களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி, னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல" (அகம். 22 : 14 - 15.) என்பதனாலும் அறியப்படும்.

3. தொல். வேற் - மயங்கு. சூ. 5. சே ; நச். உரைபார்க்க.

4. "காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப், பாம்பணைப்பள்ளி யமர்ந் தோன்" (பெரும்பாண். 372 - 3.) எனத் திருமாலுக்கு யானை உவமையாகக் கூறப்பட்டிருத்தலும் காண்க.

5. (அ) "மங்கல மழகளி றனைய செல்கையன்" (ஆ) "நாகமு நாண நடந்தான்" (இ) "நன்னெடுங் களிமால் யானை நாணுற நடந்து வந்தான்" எனவும் (ஈ) "ஏறுபோற் பீடுநடை" எனவும் இதற்கெதிராக ஆடவர் நடைக்கு யானை நடை உவமையாய் வருதலும் காண்க.

6. பேராசிரியரும் (தொல். மெய்ப். சூ. 10; ) இ - வி. நூலாரும் (இ - வி. சூ. 578.) உறுப்பறையான் வந்தவெகுளிக்கு இதனையே மேற்கோள் காட்டினர்.

7. இதன் பக்கம் 314: 2. (அ) குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்)1கொண்டலால், 2கலந்தியலுநீ தலைவன், 3 கொள்க குறங்கறுத்து.