பக்கம் எண் :

318கலித்தொகை

நீ வருவையாயின் நின்னைக் கண்டு விலங்கு முதலியன வெருவி ஓடுகின்ற ஓசையாலே 1மிளகு வளர்ந்த மலையிலே உலாவுதலை அமையாத புலியென்று இந்தச் செருக்குப் பொருந்தின ஊர் ஓராநிற்கும்; எ - று.

எனவாங்கு, அசை.

20விலங்கோரார் மெய்யோர்ப்பி னிவள்வாழா ளிவளன்றிப்
புலம்புக 2ழொருவ யானும் வாழேன்

அதனாற்,

(1) 3பாதியவிழ், (2)வைகறை வந்துநீ குறைகூறி
(3)

வதுவை யயர்தல் வேண்டுவ லாங்குப்
புதுவை போலுநின் வரவுமிவள்
வதுவைநா ணொடுக்கமுங் காண்குவல் யானே

எ - து: யாவரும் அறிவைப் புகழப்படும் ஒப்பில்லாதவனே அங்ஙனம் அவர் வேறாக ஓராராய் மெய்யாக ஓர்ப்பராயின் இக்களவொழுக்கம் அறிந்தாரென்று இவள் உயிர்கொண்டிராள்; இவளையொழிந்து யான் உயிர்வாழேன்; ஆகையினாலே நீ நின் காரியத்தினைப் பலர்க்குக் கூறி அவர் உடன்பட்ட பின்பு (4) பூக்கள் அலர்கின்ற விடியற்காலத்திலே வந்து வரைந்துகொள்ளுதலை விரும்பாநின்றேன்; அதற்குக் காரணம் என்னெனில், அப்பொழுது நீ புதியாய்போல வரும் நின் வரவையும் இவள் 4கலியாணத்திற்றோன்றிய நாணால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் யான் காண்பேனாதலாலென்றாள்; எ - று.

ஏகாரம் பிரிநிலை.


1. “கமலப், பொதியினை நகுவன புணர்முலை” கம்ப. நாட்டு. 44.

2. “விடியல்வைகறை” தொல். அகத். சூ. 8. மேற்.கந்த. இந்திரனரு. 29. 3. (அ) ”வரையி னெவனோ வான்றோய் வெற்ப, கணக்கலை யிகுக்குங் கறியிவர் சிலம்பின், மணப்பருங் காமம் புணர்ந்தமை யறியார், தொன்றியன் மரபின் மன்ற லயரப், பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி, நொதுமல் விருந்தினம் போலவிவள், புதுநா ணொடுக்கமுங் காண்குவம் யாமே” அகம். 112; 13 -19; (ஆ) “நலந்துறை போகிய நனிநாணொடுக்கத்து” (இ) “தத்தரி நெடுங்கண் டகைவிரல் புதைஇப், புதுமண மகளிரிற் கதுமெனத் தோன்று, மதுர மழலை மடவோர்க் காண்மின்” (ஈ) “வதுவைக் கோலத்து வாசவதத்தை, புதுமைக் காரிகை புதுநாண் டிளைப்ப” பெருங். (1) 33. 115. 40 : 308 - 10; (2) 7 : 164 - 5. என்பவைகளும் (உ) “வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய, மாதர்கொண் மானோக்கின் மடந்தை” கலி. 69 : 3 - 4. என்பதும் அதன் குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் ”நாணொடுக்கம்” சிறுபஞ்ச. 45. என்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.

4. “பூநாறு வைகறை” அகம். 3 7 4 : 10.

(பிரதிபேதம்)1கறிவளர்ந்த, 2 ஒருவன் யானும், 3போதவிழ், 4கல்லியாணம்