பக்கம் எண் :

428கலித்தொகை

(1) விரிகதிர் மண்டிலம் வியல்விசும் 1பூர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் 2வளங்கெழு பொய்கையுட்
டுனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார

5 வினிதமர் (2) காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு
நனி (3) விரைந் தளித்தலி னகுபவண் முகம்போலப்
பனியொரு திறம்வாரப் (4)பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉந் (5) தண்டுறை நல்லூர

எ - து: மேல் விரியுங் கதிரையுடைய இளஞாயிறு அகற்சியையுடைய விசும்பிலே பரவா நிற்க விடியற்காலத்தே இதழ்கள் முறுக்குண்ட தலைகள் அம்முறுக்கு நெகிழ்ந்த செவ்விப்பூவிடத்து அழகியதேனை (6) வரியினையுடைய வண்டுகள் அனைத்துங் கூடி நுகர்ந்து அதனாலும் அமையாது (7) பின்னும் நுகர்தற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து திரியுஞ் செல்வம் மிக்க 3பொய்கையிடத்தே (8) துனிமிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணினுடைய நீர் காமத்


1. "உள்ளுறையுவமம்" என்னும் தொல். அகத். 46-ஆம் சூத்திரவுரையில் "விரிகதிர்................நல்லூர" என்பதனை மேற்கோள்காட்டி, இதனிற் சிறிது வேறுபடப் பொழிப்புரையும் விசேடவுரையுமெழுதி இது சிறப்பென்னு முள்ளுறையுவமம் என்று கூறி, தொல். பொருளி. 48-ஆம் சூத்திரவுரையினும் "விரிகதிர் மண்டிலமென்னும் மருதக் கலியுட் சிறப்புக்கொடுத்து நின்றது காட்டினாம்" என வலியுறுத்தினார்; நச். காரிரத்ன கவிராயரும் "இச்சிறப்பென்ற உள்ளுறை, 'விரிகதிர் மண்டிலம்' என்னும் மருதக்கலியுள்ளும் வந்தமை காண்க" என்பர்; மாறனலங். 281. மேற்கோளுரை.

2. "மறங்கொள் வெங்கதிர் வேலவன் வார்கழல், கறங்க வேகித்தன் காதலி யூடலை, யுறைந்த வொண்மலர்ச் சென்னியி னீக்கினா, னிறைந்த தின்ப நெடுங்கணிக் கென்பவே" சீவக. 1034.

3. "துனிகொ டுயர்தீரக் காதலர் துனைதர" கலி. 120 : 21.

4. "பாசடைத் தாமரை" கலி. 59 : 1; 73 - 2; 78 : 1.

5. "தண்டுறை யூரன்" ஐங். 13, 21, 83, 88; கலி. 79 : 6.

6. ‘வரிவண்டு’ கலி. 66 : 2; 74 : 1; 92 : 29. முன்பு இத்தொடர் மொழியில் வரியென்பதற்குப் பாட்டென்று பொருள்கூறியுள்ளார்; கோடுகளுமாம்.

7. கலி. 74: தரவும், அதன் முதலாவது குறிப்பும் பார்க்க.

8. துனி - கையிகந்த வூடல்.

(பிரதிபேதம்) 1ஊர்தாமப்புரிதலை, 2வயங்கெழு, 3பொய்கையிடத்தே பசியவிலைக்குள்ளே.