பக்கம் எண் :

430கலித்தொகை

13 (1) மடுத்தவன் புகுவழி மறையேனென் றியாழொடு
மெடுத்துச்சூள் பலவுற்ற பாணன்வந் தீயான்கொ
லடுத்துத்தன் பொய்யுண்டார்ப் புணர்ந்தநின் னெருத்தின்க
ணெடுத்துக்கொள் வதுபோலுந் (2) தொடிவடுக் காணிய

எ - து: அப்பரத்தையர் உடன்பா டின்றித் தானே செல்லுமிடத்து நின்னை மறையேனென்று கூறி யாழாகிய தெய்வத்தோடும் பல தெய்வங்களையுங் கூட்டிப் பலசூளுஞ் சூளுற்ற பாணன் வாரானோ? இவன்செய்தி பொய்யென்று அறிந்துவைத்தும் மருண்டு அப்பொய்யைப் பலகாலும் அனுபவித்தவர்களைக் கூடின நின் கழுத்தின்கண்ணே அள்ளிக்கொள்ளலாவ தொன்றுபோலும் மறையாமற் கிடக்கின்ற தொடித்தழும்பைக் காண்டற்கு. எ - று.

17 தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின்
குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல்
(3) கணங்குழை நல்லவர் (4) கதுப்பற லணைத்துஞ்சி
(5) யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய

எ - து: நின் தீயகுணங்களை உணர்ந்திருக்கின்ற எமக்கு நீ எங்களை நீங்கினாயென்று பிறர்கூறக் கேட்டிருந்து நின் தவறுகளை ஓராதே நினக்கு நற்குணங்கள் உளவாகக் கொண்டாடுந் தோழன் வாரானோ? திரட்சியுடைத்தாகிய குழையினையுடைய மகளிருடைய புணர்ச்சியாற் குலைந்து வீழ்ந்த அறலையுடைய கதுப்பாகிய அணையிலே துஞ்சுகையினாலே தெய்வம்போல மணக்கும் நின் அலர்ந்த மார்பைக் காண்டற்கு. எ - று.

இது நாற்றச்செவ்வி குலையாமல் வந்தமைகூறலின் (6) மருதத்து விடியற்காலங் கூறிற்றாம்.


1. (அ) "ஈனாத்தாயா மடுப்பவு முண்ணாள்" அகம். 105 : 6 (ஆ) "மடுத்தவா யெல்லாம்" குறள். 624.

2. (அ) "தொடியுற்ற வடுக்காட்டி" (ஆ) "தொடியு முகிரும்படையாக நுந்தை, கடியுடைமார்பிற் சிறுகண்ணுமுட்காள், வடுவுங்குறித்தாங்கே செய்யும்" (இ) "செறிதொடியுற்ற வடுவும்" கலி. 78 : 22, 82 : 28 - 30, 91 : 11.

3. "கணங்குழை" என்பதற்கு, ‘பலவாய்த் திரண்ட குழை’ என்று பொருள் கூறுவர், பிறர்; குறள். 1081. பரி. உரைபார்க்க.

4. "கூந்தற் றுயில்பெறும்" கலி: 104 : 20; என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

5. "மணங்கமழ் தெய்வத் திளநலம்" முருகு. 260.

6. "மருதத்துக் காலைவந்ததற்கு, "தணந்தனை..............மார்பு காணிய" என்பது (தொல். அகத். சூ. 8. நச். உரையிலும்) மேற்கோள்.