புணர்ச்சி நீட்டித்து இடையே பிரிந்தீர்! கூடுதலைத் தருமினென்று கூறுவன போல, கரியவாகிய குயில்கள் அரும்பு அவிழ்ந்த பூக்களையுடைய கொம்புகடோறும் இருந்து அமையாமற் பெடையை அழைக்கும் இளவேனிற்பொழுதின் கண்ணே காமற்கு விருந்திடுதலை மேவுதல்வர எதிர்கொண்டு கூடலின் மகளிரும் அவர் கணவரும் தேனினம் ஒலிக்குங் காவிலே கூடியிருந்து விளையாட வேண்டி அமையாத விருப்பத்தோடே அணிகளை அணிவார்; ஆதலாற் பிரிதலும் புணர்தலுமாகிய கூற்றாலே யான்கண்ட கனவு நன்றாகிய உண்மையாம்படி நெஞ்சாலே (1) கருதுவாயென்றான். எ - று. கனவு(2)செய்யுண்முடிவு. (3)நான்கு மாடங் கூடலின், நான்மாட கூடலென்றாயிற்று; அவை; திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்.
1. காணுதல், கருதுதலென்னும் பொருளிலும் வருதல்: கலி. 90: 23. 2. தொல். உயிர்மயங்கியல். சூ. 32. 3. (அ) "நான்மாடக் கூட லெதிர்கொள்ள" பரி. ‘வானாரெழிலி’ 3. (ஆ) "தென்னவ, னான்மாடக் கூட னகர்" பரி: உலகம்: 3 - 4. (இ) "உம்பரு நாக ருலகந் தானு மொலிகடல் சூழ்ந்த வுலகத் தோரு, மம்புத நால்களா னீடுங் கூட லாலவா யின்க ணமர்ந்த வாறே" தே. (ஈ) "நன்றறிவார் வீற்றிருக்கு நான்மாடக் கூடல்வள நகரி யாளும்வென்றிபுனைவடிசுடர்வேன் மீனவனை" வில்லி. அருச்சுனன்றீர்த்த. 21. (உ) "வியந்தநான் மேகக் கூடல் விளங்கு நான் மாடக் கூடல்" (ஊ) "வாடுவோர் தம்மைப் போற்ற வயங்கொளி மாநகர்க்கட், கூடருமேக நான்கு மாடமாக் கூடலாலே, நாடவ ரதிசயிப்ப நான் மாடக் கூட லென்று, பீடுடை நகர்க்கு நாம மெங்கணும் பிறங்கிற் றன்றே" திருவால. திருநகர. 9. நான்மாடக் கூடலான: 12. (எ) "முன்னவன் முன்போ னான்கு முகிலையு, நோக்கி யின்ன, தொன்னக ரெல்லை நான்குஞ் சூழ்ந்துநான் மாட மாகி, வின்னெடு மாரியேழும் விலக்குமி னெனவி டுத்தான்”, “வந்துநான் மாட மாகி வளைந்துநாற் றிசையுஞ் சூழ்ந்து, சந்துவாய் தெரியா தொன்றித் தானொரு குடிலாய் மாடப், பந்திகோ புரஞ்செய் குன்றங் கால்கள் போற் பரிப்பப் போர்த்த, விந்துவார் சடையோ னேய வெழிலிமா நகரமெங்கும்”, “அன்னநான் மாடத் துள்ளு நகருளா ரமைச்சர் வேந்தன், றன்ன நாற் கருவித் தானை சராசரம் பிறவுந் தாழ்ந்து, முன்னை நா டனினு மின்ப மூழ்கிநன் கிருந்தார்” திருவிளை. நான்மாடக் கூடலான. 14 - 16. என்பவைகளும் (ஏ) ”மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்.....................மதுரை” (மது. 429-699) என்பதற்கு, ‘நான் மாடத்தாலே மலிந்த புகழைக் கூடுதலையுடைய மதுரை’ என்று இவர் எழுதியிருக்கும் உரையும் (ஐ) "இந்நூற்பக்கம் 194: 2-ஆம் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.
|