பக்கம் எண் :

716கலித்தொகை

அமைத்தலறியாயாய்த் தன் சுற்றத்தார் எடுத்த இல்லிலே இவளிருக்க யாம்பெற்றேமென்று நினைத்திருக்குமவன் நீ; ஆதலால், உறுதியாக நீ உலகியலிற்கற்றதொன்றும் இல்லைக்காணென்றேன்; 1அதன்பின்புமுற்றிழாய் ! கட்டினமாலையை நினக்குத் தாதுசூழ்ந்தகூந்தலிலே அழகு பெறப் புனைவேனோ என்றான்; யான் 2அதற்கு ஏடா ! நீ வரைந்து கொண்டு, விடாமற் கோதை புனைதல் அறியாயாய், (1) எஞ் சுற்றத்தார் மிகக் கொண்டுவந்து சூட்டின பூவை மிகப் பூவென்றுகொள்ளுமவன் நீ; 3ஆதலால் உலகில் உறுதியாகப் பெரிதும் பேதைத்தன்மையையுடையை என்றேன்; அதன்பின்பு 4மாதராய் ! வியக்கத்தக்க சிதறின சுணங்கு அணிந்த மெல்லிய (2)முலைமேலே தொய்யில் எழுதுங் குழம்பால் எழுதுவேனோ என்றான்; யான் அதற்கு நீ வரைந்துகொண்டு வெளியாக எழுதுதல் நின் மனத்து இல்லை, யாம் எப்பொழுதும் (3) என்சுற்றத்தார் கோலஞ்செய்து எழுதுங்காலம் பார்த் 5திருப்பேமோ? இனி இங்ஙனம் இருத்தலாற்றேம், 6இங்ஙனங்கூறுதலின் நீ பெரிதும் மயக்கத்தையுடைய, இங்ஙனம் 7அன்புள்ளார்போலக் கூறுகின்றாய், அவற்றைத்தவிர் என்று கூறினேன்; தையலாய்! அவற்றின் பின்னர் அவன் சொன்ன நெறிகளெல்லாவற்றையும் 8இங்ஙனம் மாறாய் மாறாய் யான் மறுக்க, 9இனிக் களவு நிகழாதென்று(4) 10அலமந்தான் போலே மீண்டு போயினான்; அவனை நீ ஆயர்மகளிரை 11வரைந்துகொள்ளும் இலக்கணத்தை அறிவித்து, பின்னர் என்னுடைய தந்தையும் (5) யாயும் இக்களவொழுக்கம் அறியும்படி அறத்தொடு 12நிலைவகையால் உரைப்பை


1. "பண்ணித்தமர்தந் தொருபுறந் தைஇய, கண்ணி" கலி. 109 : 9 - 10

2. "இளமுலைமேற், றொய்யி லெழுதவும் வல்லன்" கலி. 143 : 32 - 33.

3. "என்றோண்மேற், கரும்பெழுது தொய்யிற்கு" (கலி. 63 : 6 - 7.) என்பதனுரையால் மகளிர்க்கு அவர்கணவரேயன்றிச் சுற்றத்தாரும் கோலஞ்செய்தலுண்டென்பது அறியலாகும்

4. அலமருதல் - சுழலுதல்; என்றது, மனமயங்குதலை. இப்பொருளில் அல்லாத்தலென்னுஞ்சொல் வருதலை
(அ) "அல்லாந்தர ரலவுற" (கலி. 29 : 2) (ஆ) "அல்லாந் தவணடுங்க" (இ) "அல்லாந் தகன் கோயி லாழ்கடல்போ லாயிற்றே" (ஈ) "அலறி யல்லாப்ப போன்றாரே" (சீவக. 2963, 2964, 2966) என்பவற்றின் உரையாலும் அறிக. (உ) "அல்லாப்புற் றஞ்சினேன்" (சீவக. 3017) என்புழி, அல்லாப்பென்பதற்கு, வருத்தமென்னும் பொருளும் காணப்படுகின்றது.

5. யாய் - என் தாய் (அ) "யாயு ஞாயும் யாரா கியரோ" குறுந். 40. (ஆ) "யாயேகண்ணினுங் கடுங்காதலளே" அகம். 12: 1; (இ) "நீனின்ற

(பிரதிபேதம்)1அதன்பின்பு கட்டினமாலையை நினக்கு முற்றினதாது, 2அதற்குவரைந்து, 3ஆதலாலுறுதியாக, 4ஆயிழாய், 5இருப்போமோ, 6அங்ஙனம், 7அன்புள்ளாரைப்போல, 8இங்ஙனமாறாயான், 9இக்களவு, 10அலமாந்தான், 11வந்துகொள்ளும், 12நிலைவகையாயுரைப்பையாயின்.