வாயாவ தாயிற் றலைப்பட்டாம் பொய்யாயிற் (1)சாயலின் மார்பிற் கமழ்(2) தார் 1குழைத்தநின் னாயித ழுண்கண் பசப்பத் தடமென்றோள் சாயினு மேஎ ருடைத்து |
எ - து: அதுகேட்டவன் யான் நின்னை விடேன்; கரிய கூந்தலை யுடையாய்! யான் கூறிய கூற்றை நீ பொய்யாகக் குறித்ததென்? யான் பொய்கூறிற்றிலேன்; அது நிற்க, நின் சுற்றத்தார் நின்னை என்முன்னே நின்று சில சொல்லுதலைப் பாதுகாத்துக் கொள்ளெனச் சொன்னமையன்றி அவனை நீ புல்லுதலைப் பாதுகாத்துக்கொள்ளென்ற வார்த்தையை அவர் உடையரோ? இல்லையன்றே! ஆதலால் நீ மெத்தென முயங்குவாய், அப்பொழுது யான் நின் கூரிய (3) எயிற்றை உண்பேனென்றான்; அதுகேட்டவள், இவன் கூறியது எத்தன்மைத்தோவென நெஞ்சொடு உசாவி, பின்னும் தன்னெஞ்சை நோக்கி, பொய்யை வல்ல பொதுவன் கூறிய கூற்றெல்லாம் மெய்யாயிருப்பதோர் வார்த்தை யாயில் அவனிடத்து 2மனைவாழ்க்கையிலே பட்டேமாகின்றேம்; அன்றி அது பொய்யாயிற்றேல் மென்மை இனிதாகிய மார்பிற் கமழ்கின்ற மாலையை வருத்தின நின்னுடைய அழகிய இதழ்போலுங் (4) கண்கள் பசலைநிறங் கொள்ளப் 3பெருமையையுடைய மெல்லியதோள் பின்னர் மெலியினும் நின் மேனி இப்பொழுது பெறுகின்ற அழகையுடைத்துக் காண் எனக் கூட்டத்திற்கு உடம்பட்டுக் கூறினாள். எ-று. குழைத்த என்னும் பெயரெச்சம் நின் என்னும் பெயரொடு முடிந்தது. கன்று மேய்ப்பாய் போ லென்பதனால், வினைவல பாங்காயிற்று. "நோயு
1. (அ) "ஊரன் மார்பே,.......................................இன்சா யற்றே" (ஐங். 14.) என்பதும் (ஆ) "இன்சாயன் மார்பன்" (கலி. 65 : 5.) என்பதும் அதன் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன. 2. தார்குழைதலைக்குறித்து, சீவக. 2034 ; 2062 பு - வெ. பெருந். 12 : இவற்றில் வருபவையும் "குழைந்தநின் றாரும்" (கலி. 91 : 11 - 12.) என்பதும் அதன் குறிப்பும் இங்கே நோக்கற்பாலன. 3. (அ) "கரும்பின், காலரி கடிகைக் கண்ணயின் றன்ன, வாலெயி றூறிய வசையி றீநீர்" குறுந். 267. (ஆ) "முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக், கள்ளினு மகிழ்செய்யுமெனவுரைத்தும்" கலி. 4 : 13 - 14. (இ) "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்" குறள். 1121. என்பவையும் (ஈ) இந்நூற்பக்கம் 33 : 1 - ஆங்குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் அப்பக்கம் 3 - ஆங் குறிப்பும் பார்க்க. 4. இந்நூற்பக்கம் 276 : 5 - ஆம் குறிப்புப் பார்க்க. (பிரதிபேதம்)1குழைத்தவென், 2மனைவாட்கையிலே, 3பெருமையையுடைய தோள்.
|