எ - து: தோழியர் தோள்களில் அழகுபெற்ற இயற்கை நலத்தையும் இப்பொழுது இழுந்து, நீ அணிதலாற் பெற்ற செயற்கை நலத்தையும் இழந்த தன்னுடைய அணைபோன்ற மெல்லியதோ ளல்லாத இடத்து, தம்மிற்கூடி இவ்வூரிலுள்ளார் அலர் தூற்றும்படி இவள் வருத்தத்தை நீ அறியாயாய் நீ துறக்கையினாலே 1உண்டான தனக்கு உவமை கூறவொண்ணாத வருத்தத்தையுடைய காமநோயை என்னையும் உட்பட மறைத்தாள்; அதனாற் பெற்றதென்? தோள் புலப்படுத்தா நின்றதே. எ - று. 13 | இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல னிழந்தினி 2நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங் (1) க ணல்லாக்கால் |
எ - து: வென்றவேலினது முனையையொக்கும் வெற்றியினையுடைய நலத்தை இப்பொழுது இழந்து நீர் நின்று உகும்படியாக அழுத நெடிய பெரியகண் அல்லாத இடத்து, இன்று இவ்வூரிலுள்ளார் அலர் தூற்றும்படி இவள் வருத்தத்தை அறியாயாய் நீ துறக்கையினாலே தன்னிடத்தே நின்ற எவ்வநோயை என்னையும் உட்பட மறைத்தாள்; அதனாற் பெற்றதென்; கண் புலப்படுத்தாநின்றதே. எ - று. 17 | அதனால் | | பிரிவில்லாய் 3போலநீ தெய்வத்திற் றெளித்தக்கா லரிதென்னா டுணிந்தவ (2) ளாய்நலம் பெயர்தரப் புரியுளைக் 4கலிமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே |
எ - து: அலர்ந்த குளிர்ந்த மாலையினையுடைய அகற்சியையுடைய மார்பனே! அவ்வருத்தத்தாலே பிரிவில்லாதாரைப்போலே நீ இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்த் தெய்வத்தாலே பிரியேனென்று தெளிவிக்க, அப்பிரிவின்மை அரிதென்றுகருதாளாய் அதனை உண்மை என்று துணிந்தவளுடைய கெட்ட நலம் பண்டுபோலே நன்றாம்படி நின்னெஞ்சிலே புரிந்த உளையினையுடைய கலிமாப்பூண்ட தேரைச்செலுத்தாநின்று எம்மனையிடத்துச் செல்லும் நின் செலவை விரைவாயாகவென வரைவுகடாயினாள். எ - று.
1. “கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க, ணுரைக்கலுறுவதொன்றுண்டு” குறள், 1271. 2. “மாணிழை யரிவை காணிய வொருநாட், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்” பதிற். 81 : 31 - 32. (பிரதிபேதம்) 1உண்டானதுக்கு உவமை, 2நின்றநீ ருகக்கவிழும், 3போலத்தெய்வத் திற்றெளித்தசொல், 4பரிமான், வயமான், நெடுமான்.
|