பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்797

முன்னடிப்பணிவான் போலவும் அலைப்பேன்போலவும் என்றாள்; முன்னே தன் மனத்தின் அது நிகழ்தலுடைமையின். இதுவும், “மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு, நினையுங் காலைப் புலவியு ளுரிய” (1) என்பதனாற்கொள்க.

ஆங்கு, அசை.

23

கனவினாற் கண்டேன் றோழி காண்டகக்
(2) கனவின் வந்த கானலஞ் சேர்ப்ப
னனவின் வருதலு முண்டென
(3) 1வனைவரை நின்றதென் னரும்பெற லுயிரே

எ - து: தோழீ! கனவிடத்தே கண்டேன்; அதனாலே என்னுடைய பெறுதற்கரிய உயிர் எனக்குக் 2காட்சி தகும்படி கனவிலே வந்த கானலையுடைய அழகிய சேர்ப்பன் (4) வெளியிலே வந்துகூடுதலும் உண்டென்றுகருதி அவன் அருளும் எல்லைக்கண்ணே அது நசையாக நின்றதுகாணெனக் கனவில் நிகழ்ந்தது கூறினாள். எ - று.


1. தொல். பொருளி. சூ. 33. இச்சூத்திரவுரையிலும் இவர் “வலையுறு..............அலைப்பேன் போலவும்” என்னும் பகுதிகளை மேற்கோள் காட்டி, ‘இது முன்னே தலைவி மனத்து நிகழ்தலுண்மையிற் கனவிலுங் கண்டாளென்றுணர்க’ என்று குறிப்பும் எழுதியிருக்கிறார்.

2. (அ) “நனவினா னல்கா தவரைக் கனவினாற், காண்டலி னுண்டென்னுயிர்” (ஆ) “கனவினா னுண்டாகுங் காம நனவினா, னல்காரை நாடித் தரற்கு” குறள். 1213 - 1214.

3. (அ) “அனைமது கையர் கொல்” (ஆ) “அனைத்தானு, மான்ற பெருமை தரும்” குறள். 416.

4. (அ) “வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினுங், குரூஉமயிர்ப் புருவையாசையி னல்கும் (ஐங். 238.) என்பதற்கு, ‘வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் பின்பு வரக்கூடுமென்னும் ஆசையாலே புருவை தங்குமென்றது, இவளும் இவ்வாறே நின்னைக் காணலாமென்னும் ஆசையாலே உயிரோடு வாழாநின்றாளென்பதாம்’ என்றெழுதியிருக்குமுரையும் (ஆ) “பொறையிருந் தாற்றியென் னுயிரும் போற்றினே, னறையிருங் கழலவற்காணு மாசையால்" (இ) "புண்ணிய மூர்த்திதன்னைக், காணலா மின்னுமென்னுங் காதலாலிருந்தேன் கண்டாய்” (ஈ) “என்றன் பொருசிலை மேகந்தன்னைக், காணலாமென்னு மாசைகடுக்க வென்னாவிகாத்தே, னேணிலா வுடலினீங்க லெளிதெனக் கெனவுஞ் சொன்னாள்” கம்ப. உரூக்காட்டு. 11. மாயாசனக. 22, சீதைகளங். 31. என்பவைகளும் இங்கே ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1தரும்படி, 2அவன்வரை.