பக்கம் எண் :

முதலாவது பாலை81

தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும்" (1) "அன்பின தகலமு மகற்சிய தருமையும்"(2) கூறிச் செலவழுங்குவித்தது.

இதன் பொருள்.

கட்டுமுள்ளால் இடும் நெடியவேலிபோலக் கொலைத் தொழிலையுடைய வேடர் வில்லாலே கொல்லப்பட்டவருடைய உடலம் மறையவிட்ட இலைக்குவை நிரைத்துக் கிடக்கின்ற கடியகுற்றம் நிறைந்த வழியில் நீர் அறுங்கடுஞ்சுனையைச் சூழ்ந்து தண்ணீருண்டலை விரும்பிய உடம்பு வருந்தின யனைகள் தாஞ் சேரப்பதிந்து அவ்விடத்துக் கைகள் சுடப்பட்டு ஒழுங்குபட்ட திரள்கள் வெவ்வேறாம்படி மலைச்சாரல் தோறும் ஓடுகையினாலே பழைய வழிகள் மயங்கப்பட்ட தொலையாத நீண்ட காட்டைப், பண்டு துயில் கொள்ளுங் காலத்தின் மிகச் சிறிது பொழுது தாழ்த்துத் துயில் கொண்டெழுந்திருப்பினும் இதுவும் ஒன்றுடைத்தென்று அஞ்சும் நறிய நுதலையுடையாளைக் கைவிட்டுப் பொருளிடத்தே வேட்கை நிகழ்ந்து போகின்றவனே, நீதான் வலியுடைத்தாகிய மனத்தையுடையை; தேடும் பொருளைத் தேடிமுடித்த செல்வத்தாலே உண்டாகும் 1பொருடான் இவ்வின்பமென்று கூறுகின்றவனே, நீ அப்பொருளைத் தேடிவரக் குறித்த காலத்தளவும் இளமையுங் காமமும் நின் கையிடத்து நில்லாவாய் நாடோறுங் கழியும்; அதுவே அன்றி இறக்கும் நாள் இதுவென்று உலகத்திலே அறிந்தவர்களும் இல்லை ; 2ஆதலான் முலையிடையிற் கோதை குழையும்படி முயங்கு முறைமையினையுடைய நாள்கள் 3இளமைப்பயனின்றிப் போதலுறாமையை நெஞ்சாலே காண்பாய்; 4காமதன்மங் குற்றப்படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு பொருளிடத்தே வேட்கை நிகழ்ந்து போகின்றவனே, பெருமா, நீ தமக்கு வருகின்ற கூற்றத்தையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதாருடனே 5ஒரு படிப்பட்ட மாறுபாட்டினைக்கொண்ட, நன்மக்கள் நிற்கின்ற வழியினை நினக்கு வழியாகப்பேணாய்; எ - று.

முதுவேனிற் காலங்களெல்லாம் நீர் அறுதலின் அறுசுனையென (3) நிகழ் காலத்தாற் கூறினார். கடுமை ஈண்டு வெம்மை மேற்று. இனி, கடுந் (4) தாகமென வடமொழித் திரிபாக்கி விகாரமாய் நின்றதென்பாரும் உளர். தாகத்தாலே பதிபென்க.


1, 2. தொல். அகத். சூ. 41.

3. தொல்.

4. தாகமென்பது தாமெனத் திரிந்து வழங்குதலை. (அ) "பேஎய் வெண்டேர் பெயல்செத் தோடித், தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை" (ஆ) "தாஅம் படுநாக்குத் தண்ணீ ருளகொல்லோ" (இ) "தாம்படு மாந்தர்க்குத் தண்ணீர் போலுங், காம்படு தோளியொடு கலந்து மகிழ்வெய்திய" என்பவற்றாலும் அறிக.

(பிரதிபேதம்) 1 பொருள்காண் இவ், 2 காதலான், 3 இன்னும் அப்பய, 4 காமவின்பங் குற்றப், 5 ஒரு வழிப்படுமாறு பாட்டினை.