(1) வாடுபு வனப்போடி வயக்குறா மணிபோன்றா ணீடிறை நெடுமென்றோ ணிரைவளை நெகிழ்ந்ததை எ - து. அழகு வாடிக்கெட்டு நெடுங்காலம் விளக்கமுறுத்தாத மணியை ஒத்தவளுடைய (2) திரண்ட நெடியமென்றோளின் நிரைத்த வளைகழன்றது, பல மலர்களையுடைய நறும்பொழிலிலே குற்றமின்றாக அவளைப் புணர்ந்திருக்க, சிலவான மொழியினையுடையாய்! நின்னை யான்பிரியேன் இதனைத்தெளிவாயாக என்று தெளிவித்ததனால் உள்ள சிறப்பன்றோ? எ - று. 16 அடும்பிவ ரணியெக்க ராடிநீ மணந்தக்காற் கொடுங்குழாய் தெளியெனக் கொண்டதன் (3) கொளையன்றோ பொறையாற்றா நுசுப்பினாற் (4)பூ (5)வீந்த கொடிபோன்றாண் (6)மறைபிற ரறியாமை (7)மாணாநோ 1யுழந்ததை எ - து: தன் மென்மையால் அணிகளைப் பொறுத்தலாற்றாத இடையாலே அணிகலங்கள் அணியாமற் பூமாறின கொடியையொத்தவள் பிறர் இக்களவொழுக்கத்தையறியாமல் மறைந்து மருந்தால் மாட்சிமைப்படாத காமநோயிலே அழுந்தியது, 2அடும்பங்கொடிபரந்த இடுமணலிலே கூடவிளையாடி நீபுணர, கொடுங்குழாய் ! நின்னையான்பிரியேன் இதனைத்தெளிவாயாக என்று கூற அதனை மெய்யென்று உட்கொண்டதனுடைய கோட்பாடன்றோ? எ - று. எனவாங்கு, அசை, 21 வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட் கழியுநோய் கைம்மிக வணங்காகி யதுபோலப் பழிபரந் தலர்தூற்ற வென்றோழி யழிபட ரலைப்ப வகறலோ கொடிதே
1. ‘‘வாடுபு வனப்போடி’’ கலி. 16 : 2 என்பதும் அதன்குறிப்பும் பார்க்க. 2. இறையென்பதற்கு, இப்பொருள் வேறெங்கும் காணப்படவில்லை. 3. ‘‘கொளை’’ கலி. 9 : 4. 4. ‘‘பூவீ கொடியிற் புல்லெனப் போகி’’ அகம். 19 : 16. 5. ‘‘பீர்வீய’’ (கலி. 31 : 4) என்பதற்கு எழுதியிருக்கும் உரைபார்க்க. 6. மறையென்பது களவொழுக்கமென்னும் பொருளில்வருதலை, (அ) ‘‘மறையிற்றான் மருவுற’’ (ஆ) ‘‘மறையினின் மணந்தாங்கே’’ (கலி. 45 : 22, 53 : 8) என்பவற்றாலும் அறிக. 7. ‘‘மாணாநோய்’’ கலி. 123 : 7. (பிரதிபேதம்)1உழப்பதை, 2அடம்பங்.
|