பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்823

போலே விரவுதலையுடைய பலவடிவினையுடையவாய் இரையைத் தேடித்தின்று இளைப்பாறும்புள்ளினங்கள், தாம் விரும்பினபேடுகள் தமக்குத் துணையாக வலியினையுடைய 1கடலினது திரை வந்துபொரும்படி உயர்ந்த இடுமணலின்மேலே தங்குதல்கொள்ள, தாம்சென்ற இடத்துத் தமக்கொரு கேடின்றித் தாம்போன காரியம் வாய்த்துவந்து தலைமைபெற்றுத் துறையிடத்தனவாகிய மரக்கலங்கள் இடத்தைச் சூழ்ந்து நிற்கும் தெளிந்த கடலையுடைய 2சேர்ப்பனே! எ - று.

முரசு மூன்றாவன:- வீரமுரசு தியாகமுரசு நியாயமுரசென்பன; தன்முரசும் சேரன்முரசும் சோழன்முரசுமென மூன்று என்றலுமாம்.

பாசறைபோலே என்ற ஏனையுவமம் மேல் வருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. பறவைகள் ஏனைப்படைக்கும் மரக்கலங்கள் இடைநின்ற யானைக்கும் உவமை.

கரைக்குச் சிறந்தனவாகிய, இரைகவர்ந்து துணைபுணர்ந்த பறவைகளும் வினைவாய்த்து நின்றமரக்கலங்களும் 3பகைவர்க்கு வருத்தஞ் செய்யும் பாசறை போலத்தோன்றும் என்றதனால், இல்லறம் நிகழ்த்தித் துணையொடு புணர்ந்தவர்களும் வினைவாய்த்துச் செல்வச் செருக்குடையவர்களும் தமக்கு வருத்தத்தைத் தருகின்றாரென உள்ளுறைதந்தவாறு காண்க; அவரைப்போல யாமும் துணைபுணர்ந்து இல்லறநிகழ்த்திச் செல்வம் உண்டாயிருக்கப் பெற்றிலேமென்னும் வருத்தத்தை அவர்கொடுத்தலின்.

8 புன்னைய நறும்பொழிற் புணர்ந்தனை யிருந்தக்கா
னன்னுதா (1) லஞ்சலோம் பென்றதன் பயனன்றோ
பாயின பசலையாற் பகற்கொண்ட சுடர்போன்றாண்
மாவின தளிர்போலு மாணல மிழந்ததை

எ - து. பரந்த பசலைநிறத்தாலே பகற்பொழுது எடுத்த விளக்குப்போல் ஒளிகெட்டவள் மாவின் கண்ணவாகிய தளிரை ஒக்கும் மாட்சிமையையுடைய நலத்தைஇழந்தது, புன்னையையுடையவாகிய நறியதாகிய பொழிலிலே இவளைப் புணர்ந்திருக்க, நன்னுதால்! நீ யான் பிரிவேனென்று அஞ்சுதலைப் 4பாதுகாத்துக்கொள் என்று தெளிவித்ததனால் உள்ள பயனல்லவோ? எ - று.

12 பன்மலர் நறும்பொழிற் பழியின்றிப் புணர்ந்தக்காற்
(3) சின்மொழி தெளியெனத் தேற்றிய சிறப்பன்றோ


1. இந்நூற்பக்கம் 120 : 2, 244 : 5-ஆம் குறிப்புக்கள் பார்க்க.

2. (அ) ‘‘பகலெரி சுடரின் மேனி சாயவும்’’ நற். 128 : 1.(ஆ) ‘‘வெயிலிடைத் தந்த விளக்கென வொளியிலா மெய்யாள்’’ கம்ப. காட்சி. 4.

3. ‘‘சின்மொழி’’(கலி. 29 : 10) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

(பிரதிபேதம்)1கடலிற்றிரை, 2சேர்ப்பனேபறவைகளேனைஇ 3பகைவர்புக்கு, 4நீபாதுகாத்து.