பக்கம் எண் :

864கலித்தொகை

(1) சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
(2) பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி (3) யறனறிதல்
சான்றவர்க் கெல்லாங் கடனானா (4) லிவ்விருந்த
சான்றீ ருமக்கொன் றறிவுறுப்பேன் மான்ற
துளியிடை (5) மின்னுப்போற் றோன்றி யொருத்தி 
யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென்
னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே
னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து (6) மணியார்ப்ப
10வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய்
தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக
வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது
(7) பாடுவேன் பாய்மா நிறுத்து

எ - து: நற்குணங்கள் எல்லாம் அமைந்தீர்! நற்குணங்களெல்லாம் அமைந்தீர்! நீர் வாழ்வீராக! பிறருடைய நோயும் தம்முடைய நோய்போலே எந்நாளும் பேணி அதனாற் பெறும் அறனை அறிந்து போதுதல் உலகத்துள்ள சான்றவர்க்கெல்லாம் 1முறைமையானால், நுமக்கும் அது முறைமையென்று கருதி நுமக்கொரு காரியத்தினைக் கூறுவேன்; 


1. ‘‘சான்றவிர் வாழியோ சான்றவிரென்னும்’’ என்பது கண்டோர் கேட்பாராகத் தலைமகன் கூற்று நிகழ்ந்ததற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 196. பேர், நச்.

2. ‘‘அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய், தந்நோய்போற் போற்றாக் கடை’’ குறள். 315. 

3. ‘‘தோன்றிமாய்ந் துலக மூன்றிற் றுயரெய்து முயிர்க டம்மை, யின்றதாய் போல வோம்பி யின்பத்து ளிருத்தி நாதன், மூன்றுலகிற்கு மாக்கி முடிவிலாத் தன்மை நல்கு, மான்றநல் லறத்தைப்போலு மரியதொன் றில்லை கண்டாய்’’

4. ‘‘அவ்வெதிர்’’ (கலி. 90 : 13) என்பதும் அதன் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன.

5. கலி. 138 : 5 - 11 -ஆம் அடிகள் ஒப்புநோக்குக.

6. ‘‘பனைபடு கலிமாப், பூண்மணி கறங்க வேறி’’ குறுந். 173.

7. இந்நூற்பக்கம் 858 : 2-ஆம் குறிப்பில் (ஆ) முதலியவை பார்க்க.

(பிரதிபேதம்)1முறைமையானாலும்.