விளங்கிய சுடரையுடைய ஞாயிறு நான்கு திக்கினும் தோன்றினும்; இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் - விளங்கிய கதிரையுடைய வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும்; அந் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட - அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல காலாய் ஓடி ஊட்ட; தோடு கொள் வேலின் தோற்றம் போல - தொகுதி கொண்ட வேலினது காட்சியை யொப்ப; ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் - அசைந்த கண்ணினையுடைய கரும்பினது வெளிய பூ அசையும்; நாடெனப் படுவது நினதே - நாடென்று சொல்லப்படுவது நின்னுடைய நாடே; நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே - அந் நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தே; நினவ கூறுவல் - நின்னுடையன சில காரியஞ் சொல்லுவேன்; எனவ கேண்மதி - என்னுடையன சில வார்த்தையைக் கேட்பாயாக; அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் - அறக் கடவுள் மேவி ஆராய்ந்தாற் போன்ற செங்கோலா னாராயும் ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து; பதன் எளியோர் - செவ்வி யெளியோர்; ஈண்டு உறை வேண்டுபொழுதில் பெயல் பெற்றோர் - இவ்விடத்துத் துளிவேண்டுங் காலத்து மழை பெற்றவரே; ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ - ஞாயிற்றைத் தன்மேற் கொண்ட பக்கந் திரண்ட முகில்! மாக விசும்பின் நடுவு நின் றாங்கு - மாகமாகிய உயர்ந்த வானத்தினது நடுவு நின்று அதன் வெயிலை மறைத்தாற் போல; கண் பொர விளங்கும் - கண்ணொளியோடு மாறுபட விளங்குகின்ற; நின் விண் பொரு வியன் குடை - நினது வானை முட்டிய பரந்த வெண்கொற்றக் குடை; வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே - வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ வெனின் அன்று; வருந்திய குடி மறைப்பது - வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது; கூர் வேல் வளவ - கூரிய வேலினையுடைய வளவ; வெளிற்றுப் பனந்துணியின் - இளைய பனையினது துண்டம் போல; வீற்று வீற்றுக் கிடப்ப - வேறு வேறு கிடப்ப; களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை - களிற்றுத் திரளைப் பொருத இடமகன்ற போர்க்களத்தின்கண்; வரு படை தாங்கிப் பெயர் புறத் தார்த்து - வருகின்ற படையை யெதிர்நின்று பொறுத்து அது சரிந்து மீளும் புறக்கொடை கண்டு ஆர்த்துக்கொண்டு; பொருபடை தரூஉம் கொற்றமும் - நின் போர் செய்யும் படை தரும் வெற்றியும்; உழு படை யூன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயன் - உழுகின்ற கலப்பை நிலத்தின் கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்; மாரி பொய்ப்பினும் - மழை
|