பக்கம் எண் :

101

பெய்யுங்காலத்துப் பெய்யா தொழியினும்; வாரி குன்றினும் - விளைவு
குறையினும்; இயற்கை யல்லன செய்கையில் தோன்றினும் -
இயல்பல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினும்; காவலர்ப்
பழிக்கும் - காவலரைப் பழித்துரைக்கும்; இக்கண்ணகன் ஞாலம் -
இவ்விடமகன்ற உலகம்; அது நற்கு அறிந்தனை யாயின் - அதனை
நன்றாக அறிந்தனை யாயின்; நீயும் நொதுமலாளர் பொது மொழி
கொள்ளாது - நீயும் குறளை கூறுவாரது உறுதியில்லாத வார்த்தையை
உட்கொள்ளாது; பகடு புறந் தருநர் பாரம் ஓம்பி - ஏரைப்
பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து; குடிபுறந் தருகுவையாயின் -
அக்காவலாலே ஏனைக் குடிகளையும் பாது காப்பாயாயின்; நின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோர் - நின் அடியைப் போற்றுவர் நின்
பகைவர் எ-று.

     வளியிடை வழங்கா மண்டிணி கிடக்கை யென இயையும்; அன்றி,
வாயு பதத்துக்கு மேலான வானமெனக் கிடந்தவாறே உரைப்பினுமமையும்.
அரசென்றது, அரசர் தன்மையை. முறைவேண்டுபொழுதிற் பதன் எளியோர்
ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரென்ற கருத்து, நீயும்
பதனெளியை யாதல் வேண்டும், அவ்வாறு பெயல் பெறுதற்கென்றவாறாம்;
அன்றி, இதற்கு முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரோ டொப்பரென் றுரைப்பாரு
முளர். அத்தையும் ஆங்கவும் மதியும் அசைநிலை. நினவ எனவ வென
ஈற்று நின்ற அகரங்கள் செய்யுள் நோக்கி விரிக்கப்பட்டன.

நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தனே, நினவ கூறுவல் எனவ
கேண்மதி; குடை வருந்திய குடி மறைப்பதுவாகும்; கூர் வேல் வளவ,
பதினெளியோர் உறை வேண்டுபொழுதிற் பெயல் பெற்றோராவர்;
ஆகையால், நீயும் அவ்வாறு காலம் எளியையாய்க் கொற்றமும் ஈன்றதன்
பயனென்று கருதிக் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலமென்று
கொண்டு நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பாரமோம்பிப்
புறந்தருகுவையாயின், நின்னடி புறந்தருகுவர் அடங்காதோ ரென்றமையால்
செவியறிவுறூஉ வாயிற்று.

     விளக்கம்: “நளியென் கிளவி செறிவு மாகும்” (தொல். உரி: 25)
என்பதனால், “நீர் செறிந்த கடல்” என்றுரை கூறினார். அலங்குதல்,
விளங்குதல். காவிரி கவர்பு ஊட்டலாவது; காவிரியாறு பல கால்களாய்ப்
பிரிந்தோடி நீரை யுண்பித்தல். அறம் புரிந் தன்ன முறை - அறக்கடவுளே
அரச ருருவிற் போந்து முறைமையினை விரும்பிச் செய்தாற்போலும் முறை.
செங்கோல் நாட்டம் - செங்கோலா னாராயும் ஆராய்ச்சி; செவ்விய கோல்
போறலின், முறைமையைச் செங்கோல் என்றார். முறை வேண்டி
வருவார்க்குச் செவ்வியெளியனாகிய வழி, அவ்வெளிமை மழை
வேண்டினார்க்கு அம் மழை யெய்தினாற்போலும் என்பதுபட “பதன்
எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோர்” என்றார்.
செவ்வி யெளியோர் - செவ்வி யெளிதாகப் பெற்றோர். கோடு - பக்கம்.