| விசும்பின் நடுவே ஞாயிறு நிற்ப, அக்காலத் தவ்விடத்தே முில் நின்றால் அதனால் ஞாயிற்றி னொளி மறைக்கப்படுமாகலின், நின்றாங்கு என்பதற்கு நின்று வெயிலை மறைத்தாற்போல என்று உரை கூறினார். கண்ணொளியின் அளவிறந்து விளங்குவதால், கண் பொர விளங்கும் என்றார். வெளிற்றுப் பனந் துணி - உள்ளே வயிரமில்லாத பனந் துண்டம்; முற்றிய பனையே வயிரமுடைய தாகையால், அஃதில்லாத பனந்துணி இளையதாதல்பற்றி, இளைய பனையினது துண்டம் என்றார். ஈன்றதன் பயன், வித்திய நெல்லது விளைபயன். செயற்கை - தொழில். கை: விகுதிமேல் விகுதி. நொதுமலாளர் - குறளை கூறுபவர். பொதுமொழி - உறுதியில்லாத மொழி. புறந் தருதல், ஈண்டு வழிபடுதல் மேற்று. நின, என என்பன, அகரம் விரிந்து நினவ, எனவ என வந்தமையின், இவை செய்யுள் நோக்கி விரிக்கப் பட்டன வென்றார். 36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இப் பாட்டின்கண் ஆலத்தூர் கிழார், கிள்ளி வளவன் கருவூரை முற்றியிருந்தானாக, அடைப்பட்டிருந்த, கருவூர் மன்னன், சோழனுடைய வீரர் தன் நகர்ப்புறத்துக் காவிலுள்ள காவல் மரங்களை வெட்டுதலா லுண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சி மடிந்து கிடப்பது கண்டு, சோழனை நோக்கி, வேந்தே, காக்கள் தோறுங் கடி மரம் தடியும் ஓசை தானுறையும் அரண்மனைக்கண் இயம்பக் கேட்டும் ஆங்கு இனிதிருந்த வேந்தனுடன் பொருவது தூய வீரர்க்கு நாணுத் தருவதாகும்; ஆதலால், இது கேட்டு விடுவதோ அடுவதோ செய்க; அதனால் நினக்குப் புகழுண்டாகா தென்பதை நீ நன்கு அறிகுவாய் என்று கூறிப் போரை விலக்குகின்றார். | அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை வார்கோல் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் | 5. | தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் | | கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரந் தடியு மோசை தன்னூர் | 10. | நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப | | ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. (36) |
திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
|