பக்கம் எண் :

141

பன ரென அறியலாம். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் இவராற்
பாடப்பட்டுள்ளனர். சோழர்கட்குத் தானைத் தலைவராகிய சோழிய வேனாதி
திருக்குட்டுவனையும் ஏனாதி திருக் கிள்ளியையும் இவர் பாராட்டிப்
பாடியிருக்கின்றார். இவர், கேட்போர் மனமகிழத்தக்க இனிய சொல்
லமையப் பாடல் வல்லவர். பெருந்திருமா வளவன் ஒரு கால் பரிசில்
நீட்டித்தானாக, இக் குமரனார், வெண்குடைச் செல்வமுடைய,
வேந்தராயினும், சீறூர் மன்னராயினும் எம்மால் வியக்கப்படுவோர்,
“எம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பினோரே” என்றும், “மிகப்பே ரெவ்வ
முறினும் எனைத்தும், உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்,
நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும்” என்றும் இவர் கூறுவது இவருடைய
உயர்ந்த மனமாண்பைப் புலப்படுத்துகிறது. சேரமான் குட்டுவன்
கோதையினுடைய கொடை நலனும், காவற்சிறப்பும், பிறர்க்கு அறிவுறுத்தும்
கருத்தால் மதுரைக் குமரனார், இப் பாட்டின்கண், “ஓரூரையுடைய தலைவன்
ஒருவன் அதனுட் செம்மாந்து புகுவது போல, சேரமான் குட்டுவன்
கோதையின் அவைக்களத்துட் செம்மாந்து செல்வது எம்போல்வார்க்கு
எளிது; அவனைப் பகைத்துப் போரெதிரக் கருதும் வேந்தர்க்கு, இடையன்
தன் ஆட்டு நிரையுடன் புகுதற்கஞ்சும் புலி துஞ்சும் காடு போலப் பேரச்சம்
விளைப்பதாகையால், புகுவதென்பது அரிது” என்று சிறப்பித்துக்
கூறுகின்றார்.

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
5. இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிதை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
10. பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே (54)

     திணையும் துறையு மவை. சேரமான் குட்டுவன் கோதையைக்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

     உரை: எங்கோன் இருந்த கம்பலை மூதூர் - எம்முடைய
இறைவன் இருந்த ஓசையையுடைய பழைய வூரிடத்து; உடையோர்
போல இடை யின்று குறுகி - அதனை யுடையவர்களைப் போலக்
காலம் பாராதே யணுகி; செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் -
தலைமையுடைய