பக்கம் எண் :

268

 

     பனுவலன்ன நிணமென இயையும். நிலங்கவர்யென்பது கவர வெனத்
திரிக்கப்பட்டது. எமது நிலத்தைக் கைக்கொண்டெனினு மமையும்.
தாளாற்றலாற் செய்த பொருளில் நல்லனவெல்லாம், பரிசிலர்க்கு வழங்கி
எஞ்சியது உண்டலான் “அழிதின் றாங்கு” என்றார். காண்கு வந்தென்பன,
ஒரு சென்னீர்மைப்பட்டு உண்குமென்பதற்கு முடிபாய் நின்றன.
உண்குமென்றது சுற்றத்தை உளப்படுத்தி நின்றமையின் பன்மை யொருமை
வழுவமைதியாய் நின்றது. மன்: கழிவின்கண் வந்தது.

     பெரும, சேஎய், வென்றோனும் வெலீஇயோன் இவனென நிற்கூறும்;
தோற்றோனும் தொலைஇயோன் இவனென நிற்கூறும்; அதனால் நிற்
பெற்றிசினோர்க்கு ஒரு நீ ஆயினையாதலால் நின் மகிழிருக்கைக் கண்ணே
உண்கும் காண்கு வந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு
நல்லமிழ்தாக வென மாறிக் கூட்டுக. நெருப்புச் சினந் தணிந்த நிணந்தயங்கு
கொழுங்குறை யென்பதற்கு எரியாது பூத்துக் கிடக்கின்ற தழல்போலும்
நிணந்தயங்கு கொழுங்குறை யெனினு மமையும். பரூஉக்கண் மண்டை
யென்பதற்கு கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை யெனினு மமையும்.

     விளக்கம்: கொட்டையும் கோதும் நீக்கி நூற்றற்கேற்பத் தூய்மை
செய்யப்பட்ட பஞ்சு போறலின் நிணத்தை, “பனுவ லன்ன நிணம்” என்றார்.
உரைகாரரும் “பனுவ லன்ன நிணமென வியையும்” என்றார். காண்கு
என்னும் செய்கென்னும் வினைமுற்று வேறு வினைகொண்டு முடியுமாதலின்
“காண்கு வந்திசின்” என்றார்; “செய்கென் கிளவி வினையொடு முடியினும்,
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்’ (சொல். வினை. 7) என்று ஆசிரியர்
கூறுதல் காண்க. இது பற்றியே உரைகாரரும், “காண்குவந்
தென்பன....நின்றன” என்றார். “பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி,
எண்ணியல் மருங்கிற் றிரிபவை யுளவே” (வினை. 12) என்றமையின்,
உண்குமென்பது சுற்றத்தை உளப்படுத்தி நின்ற தென்றார், உண்கும் என்பது
பன்மையும், காண்கு வந்திசின் என்பது ஒருமையுமாகலின் உளப்பாட்டுத்
தன்மைப் பன்மையாகிய உண்குமென்பது பன்மை யொருமை
வழுவமைதியாயிற்று. வென்றோன் நன்றி யறிவால் நின்னைப் பாராட்டுதல்
ஒருபுறமிருக்க, தோற்றோன் நின் பேராண்மையை வியந்து “நம்மைத்
தொலைவித்தவன் இவன்” என்று கூறுவன் என்பார், “தோற்றோன் தானும்
தொலைஇயோன் இவனென நிற்கூறும்” என்றார். இவ்வாறு வென்றோனும்
தோற்றோனும் ஆகிய இருவரும் ஒப்பப் பாராட்டுதல் பற்றி, “ஒருநீ யாயினை
பெரும” என்றார். நண்பரும் பகைவரும் ஒப்பப் பாராட்டும் சிறப்பு முருகற்
குரியதாகலின், “நிற் பெற்றிசினோர்க்குத் திருத்தகு சேஎய்” என்றார்.
பெற்றிசினோர் - நட்பாகவும் பகையாகவும் பெற்றோர். சேஎய்
மலைக்குரியனாகலின், “பெருமலைக்கு இருக்கை சான்ற உயர்மலை” யுடைய
சேய் என்றார்.