| ஏறைக்கோனைத் தலைவனாகக் கொண்ட குறமக்களுள் ஒருவராதலின், இளவெயினியார் குறமகள் இளவெயினியார் எனக் குறிக்கப்படுகின்றார். முதுவெயினியா ரல்லரென்பது தோன்ற, இளவெயினியென்ற பெயர் சிறந்து நிற்கிறது. நும்மோர்க்குத் தகுவனவல்லஎன்றும், எம் ஏறைக்குத் தகும் என்றும் இவர் கூறுவன இவரது உள்ளத்தின் இளமைப் பண்பை வற்புறுத்துகின்றன. இளவெயினனார் என்னும் சான்றோர் ஒருவரும் குறமகள் குறி யெயினியார் என்னும் சான்றோர் ஒருவரும் நற்றிணைப் புலவர் வரிசையுட் காணப்படுகின்றனர். இவ் விளவெயினியாரே நற்றிணையில் வரும் குறியெயினியாராகலாம் என்றும், இப் புறப்பாட்டு இளமைக் காலத்தும், நற்றிணைப் பாட்டுப் பிற்காலத்தும் பாடப் பட்டிருக்கலாமென்றும், நற்றிணைப் பாட்டில், இவர் நின்குறிப் பெவனோ தோழியென் குறிப்பு, என்னொடு நிலையா தாயினும் என்றும், நெஞ்சு வடுப்படுத்துக் கெடவறியாதே(நற்.357) என்று பாடிய சிறப்பால் குறிப்பெயினியார் என்று பெயர் பெற்றிருக்க வேண்டுமென்றும், அப் பெயர் ஏடெழுதினோரால் குறியெயினியாரென வெழுதப்பட்டிருக்க வேண்டுமென்றும் நற்றிணை யுரைகாரர் கூறுகின்றார்.
| தமர்தற் றப்பி னதுநோன் றல்லும் பிறர்கை யறவு தானா ணுதலும் படைப்பழி தாரா மைந்தின னாகலும் வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும் | 5 | நும்மோர்க்குத் தகுவன வல்ல வெம்மோன் | | சிலைசெல மலர்ந்த மார்பிற் கொலைவேற் கோடற் கண்ணிக் குறவர் பெருமகன் ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை எற்படு பொழுதி னினந்தலை மயங்கிக் | 10 | கட்சி காணாக் கடமா னல்லேறு | | மடமா னாகுபிணை பயிரின் விடர்முழை இரும்புலிப் புகர்ப்போத் தோர்க்கும் பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே. (157) |
திணையுந் துறையு மவை. ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினியார் பாடியது.
உரை: தமர் தன் தப்பின் அது நோன்றலும் - தனக்குச் சிறந்தார் தன்னைப் பிழைப்பின் அது பொறுத்தலும்; பிறர் கையறவு தான் நாணுதலும் - பிறருடைய மிடிமைக்குத் தான் நாணுதலும்; படைப் பழி தாராமைந்தின னாகலும் - படையிடத்துப் பிறர் பழிக்கப்படாத வலியையுடையனாதலும்; வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும் - அரசுடைத்தாகிய அவைக்களத்தின்கண் மேம்பட்டு நடத்தலும்; |