பக்கம் எண் :

113

     

     விளக்கம்: சுரத்திடை யென்பது இடைச்சுரமென
முன்பின்னாகத்தொக்கது; ஈண்டிது போர்க்களத்தின்மேல் நின்றது. இறந்து
கிடந்தானாக அதனால் மயங்கிக் கூறுதலால், “எடுப்ப எழா அய்” என்றும்,
இறந்தானெனக் கூற விருப்பமின்மையின், “இன்ன னாயினன் இளையோன்”
என்றும் கூறினாள். உள்ளூரென்றாற்போல முன்னூரென்றார். தன்
கணவனையும் உளப்படுத்துமாறு தோன்ற, “எமக்கென” என்று தாய்
கூறுவள். நின் உயிரைப் பற்றுக் கோடாகக்கொண்டு வாழ்கின்றள் நின்
தாய்; அவள் இறந்துபடுதலும் ஒருதலை யென்றற்கு “அன்னையென்னா
குவள்கொல் அளியள்” என்றாள். அவனுயிரும் தன்னுயிரும் வேறொன்னாது
ஒன்றிய காதல ளாதலின், அவனுடைய அன்னையும் தனக்கு அன்னையாகக்
கோடலின், நாளும் ஆனாது புகழும் அன்னையென்னா குவள்
கொல்லெனப் பொதுப்படக் கூறினாள். காதலன் கைப் பற்றிய “அன்னையும்
அத்தனையும் அன்றே நீத்தாள்” (திருநா. 239:7) என்று சான்றோர்கள்
உரைப்பது பற்றியும் சங்க இலக்கியங்களிற் காணப்படும் வழக்கு நோக்கியும்
ஓர்ந்து கொள்க.

---

255. வன்பரணர்

     ஆசிரியரான வன்பரணர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள
நெடுங்களம் என்னும் ஊரினரான நெடுங்களத்துப் பரணரெனவும், இவர்
ஓரியின் வன்மையை அவன் வின்மேலேற்றி வல்விலோரியெனச்சிறப்பித்துப்
பாடியதனால் வன்பரணரென்று கூறப்படுவாராயினரெனவும் செந்தமிழ்ச்
செல்வியில் (சிலம்பு: 23.பரல்.12) ஆராய்ந்து காட்டினாம்.

     தலைமகனொருவன் போரில் புண்பட்டு வீழ்ந்து மாண்டான். அவன்
திரும்ப வாராமையால் பெருங்கலக்கமுற்ற அவன் மனைவி அவன் வீழ்ந்த
இடத்துக்குச் சென்றாள். அந்த இடம் புலி முதலியகொடிய விலங்குகள்
வாழும் காட்டருகே இருந்தது. கணவனைக் கண்டதும், அவளுக்குண்டான
கையறவு பெரிதாயிற்று. அவன் உடலைத் தழுவிக் கண்ணீர் சொரிந்து
கலங்கினாள். “அன்பே, நின்னைக் கண்டு வருந்தும் யான் ‘ஐயோ’ என
வாய்விட்டுக் கதறியழுவேன்; அந்த ஓசைகேட்டுக் காட்டிலுள்ள புலிகள்
வந்துநின் உடலைக் கொண்டுபோய்விடும்; பின்பு யான் அதனையுங்
காணப்பெறாது ஒழிவேன்; இந்த அச்சத்தால் கதறிப் புலம்புகின்றேனல்லேன்;
நின்னை எடுத்துக்கொண்டு போகலாமே யெனின், நினது அகன்ற மார்பு
பெரிதாகையால் என்னால் இயலாது; ஒரு தீங்கும் செய்தறியாத என்னை
இப்பெருந்துயரத்துள் அழுத்தி நடுக்கமுறுவிக்கும் கூற்றம் என்னைப்
போலப் பெருந்துன்பம் உறுவதாக; நீ என்னுடைய வளையணிந்த கைகளைப்
பற்றிக்கொண்டு மெல்ல நடந்து வருக; யாம் இம் மலையைின் நிழலை
யடையலாம்; வெயில் வெம்மை வருத்தாது” எனக் குழைந்து மொழிந்தாள்.
இக் காட்சி வன்பரணர் உள்ளத்தைக் குழைவித்தது. அக் குழைவின் வடிவே
இப்பாட்டு. இப்பாட்டுடைத்தலைமகன் பெயர் தெரிந்திலது.