| | ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்கவல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை இன்னா துற்ற வறனில் கூற்றே | 5 | நிரைவளை முன்கை பற்றி | | வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. |
திணையும் துறையு மவை........வன்பரணர் பாடியது.
உரை: ஐயோ எனின் - ஐயோவென்று அரற்றுவேனாயின்; யான் புலிஅஞ்சுவல் - அவ்வுரைவழியே வந்து நின் உடம்பாயினும் யான் காணப்பெறாமல் ஏதஞ்செய்யுமோவென்று புலியை யஞ்சுவேன்; அணைத்தனன் கொளின் - இவ்விடத்தி னின்றும் எடுத்துக் கொண்டு போவேனென்று நினைப்பின்; அகல்மார்பு எடுக்கவல்லேன் - நினது அகலிய மார்பை எடுக்கமாட்டேன்; என்போல் பெருவிதிர்ப்பு உறுக - என்னை யொப்பப் பெரிய நடுக்கத்தை உறுவதாக; நின்னை இன்னாதுற்ற அறனில் கூற்று - உன்னை யிறந்துபடும் பரிசு வந்து தாக்கிய அறமில்லாத கூற்று; வரை நிழல் சேர்கம் - யாம் மலையினது நிழற்கண்ணே அடைவேமாக; நிரைவளை முன்கை பற்றிச் சிறிதுநடத்திசின் - எனது நிரைத்த வளையையுடைய முன்கையைப்பிடித்து மெல்ல நடப்பாயாக; எ - று.
நடவாயென்னும் முன்னிலை வினைச்சொல் சின்னென்னும் இடைச்சொல்லான் அசைக்கப்பட்டு நின்றது.
விளக்கம்: யான் காண இருப்பது நின் உடம்பேயாயினும், அதனையும் யான் காண இயலாது போகுமேயென்று அஞ்சுகின்றே னென்பாள் புலியஞ்சுவல் என்றாள். இன்னாது, இறந்துபாடு. இன்னுயிர் கழிவினும் நனியின்னாது (நற். 227) என்றும், சாதலின் இன்னாத தில்லை(குறள். 230) என்றும் சான்றோர்விதந்தோதுதலின், சாக்காடு ஈண்டு இன்னாது எனப்பட்டது. உற்ற என்பது உறுவித்த என்னும் பொருளது. இறந்த உடம்புகண்டு மயங்கிக் கூறுகின்றாளாதலால் சிறிது நடத்திசின் என்று சொல்லுகின்றாள். எனவே, அவனை அவள் மெல்லச் சுமந்து கொண்டு செல்லுமாறு பெற்றாம். நடத்திசின் என்பதில் சின்முன்னிலையசை; எஞ்சி நிற்கும் நடத்தி யென்பது நடவாய் எனனும்பொருட்டு. இகுமுஞ் சின்னும் ஏனையிடத்தொடுந், தகுநிலையுடைய என்மனார் புலவர் (தொல். இடை 27) என்றுஆசிரியர் கூறுதல் காண்க. அவல மிகுதியாற் பிறக்கும் அரற்றாதலின் இரண்டாமடி நீண்டு நெடிலடியாமாறு காண்க. |