பக்கம் எண் :

155

     

ஆறாம்பத்தைப் பாடிக் கலன்களுக்கென ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம்
காணமும் பெற்று, அதிகமான்நெடுமான்  அஞ்சிபால்  ஒளவையார்
இருந்தாற்போல அவன் பக்கத்துப் புலவராகும் சிறப்பும் பெற்றாரென்ப.
ஒருகால் ஒரு மறவன் போரில் பகைவர் வாளால் வெட்டுண்டிறந்தான்;அவன்
பீடுடைய போருடற்றியதனால் அவன் உடல் துணிபட்டுச் சிதைந்து வேறு
வேறாய்க் கிடப்பதாயிற்று. அதனையறியாத பலர், போர் முடிவில் ஊர்க்குப்
போந்து அவன் தாயைக் கண்டு “நின் மகன் பகைவர்க்கு முதுகு காட்டி
மாண்டான்” என்று பொய்யாகக் கூறினர். அவள் அப்போது மிக்க
முதுமையெய்தியிருந்தாளாயினும் அச்சொல் தனது மறக்குடி மாண்புக்கு
இழுக்காதலை யெண்ணினாள்; கண்களைத் தீயெழத் திறந்து நோக்கி, “என்
மகன் இவ்வாறு மாண்டானாயின், அவன் வாய் வைத்துண்ட என் மார்பை
அறுத்தெறிவேன்” என வஞ்சினம் கூறிக் கைவாளொன்றை எடுத்துக்
கொண்டு போர்க்களத்துக்குச் சென்றாள். அங்கே மறவர் பிணங்கள்
மலிந்து முழுவதும் பிணங்களைப் புரட்டிப் பார்த்தாள்.முடிவில் ஓரிடத்தில்
வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் அவன் உடலைக் கண்டாள்; வேறு வேறாகக்
கிடந்த துண்டங்களைத் தொகுத்து ஒழுங்குற அமைத்து நோக்கினாள்;அவன்
முகத்தினும் மார்பினும் விழுப்புண் பட்டு வீழ்ந்தானேயன்றிப்
புறப்புண்ணுற்று உயிர் போயிற்றிலன்” எனத் தெரிந்தாள். அக்காலை
அவள் உள்ளத்தில் நிலவிய வெம்மை நீங்கிற்று; குடிப்பெருமையை
நிறுவினானென உண்டாகிய உவகை மிகுந்தது. அதுதானும் அவனை
அவள் பெற்றகாலையிற் பிறந்த உவகையினும் பெரிதாயிருந்தது. இது
காக்கைபாடினியார்க்குப் பெருவியப்பை விளைத்தது. அதுவே காரணமாக
இப்பாட்டினைப் பாடுவாராயினர்.

 நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
5முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்
 கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.

   திணையும் துறையு மவை. காக்கையாடினியார் நச்செள்ளையார்
பாடியது.

     உரை: நரம்பு எழுந்த உலறிய நிரம்பா மென்றோள் - நரம்பு தோன்றி
வற்றிய நிரம்பாத மெல்லிய தோள்களையும்; முளரி மருங்கின் முதியோள் -
தாமரையிலைபோன்ற அடிவயிற்றினையுமுடைய முதியவள் ஒருத்தி; சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற - நின் மகன் பகைவர் படை
கண்டு அஞ்சிப் புறங்கொடுத்து மாண்டான் என்று அறியாதார் பலர் வந்து
சொல்ல; மண்டமர்க்கு உடைந்தனனாயின் - நெருங்கிச் செய்யும் போர்