| கண்டு அஞ்சி யிறந்தானென்பது உண்மையாயின்; உண்ட என் முலை யறுத்திடுவென் யான் எனச் சினைஇ - அவன் வாய் வைத்துண்ட என் முலையை யறுத்தெறிவேன் யான் என்று சினந்து சொல்லி; கொண்ட வாளொடு- சொல்லியவண்ணமே செய்தற்கு வாளைக் கையிலேந்திப் போர்க்களம் சென்று; படு பிணம் பெயரா - அங்கே இறந்து கிடக்கும் மறவர் பிணங்களைப்பெயர்த்துப் பெயர்த்துப் பார்த்துக் கொண்டே; செங்களம் துழவுவோள் - குருதி படிந்து சிவந்த போர்க்கள முற்றும் சுற்றி வருபவள்; சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ - விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறு வேறாகத் துணிபட்டுக் கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு; ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் அவனைப் பெற்ற நாளிற் கொண்ட உவகையினும் கொண்டாள்; எ - று.
முதியோள் கேட்டுச் சினைஇ, பெயரா, துழவுவோள், கிடக்கை காணூஉப் பெரிதுவந்தனள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முதுமையால் தோள் சரிந்தமையின், நிரம்பா மென்றோள் என்றார். நரம் பெழுந்து திரைந்து முளரியிலையின் அடிப்பகுதிபோல் பசுமையின்றி யிருத்தலின், முதியோளது அடிவயிற்றை முளரிமருங் கெனக் குறித்தார். படை யென்புழி நான்கனுருபு விரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிணமாக ஆராய்தின், துழவுவோள் என்றார். சிதைந்து வேறாகிய உடலைப் பொருந்த வைத்து விழுப்புண்பட்டு வீழ்ந்தமை கண்டு தெளிந்தமை தோன்ற, படுமகற் காணூஉ வென்னாது, படுமகன் கிடக்கை காணூஉ வென்றார். படுபிணம் பெயராச் செங்களமென இயைத்துப் படுபிணம் நீங்காத சிவந்த போர்க்களமென வுரைப்பாருமுளர்.
விளக்கம்: முதுமையால் மேனி பசுமை குன்றி நரம்பு மேலெழுந்து இனிது காணத்தோன்றுதலால் நரம்பெழுந்து உலறிய தோள் என்றார். பசுமையின்றி விளர்த்து நரம்பு தோன்றத் திரங்கி நி்ற்பதுபற்றி வயிற்றுக்கு முளரி யுவமமாயிற்று. நன்றெடுத்து மொழிவாரினும் தீதெடுத்து மொழிவார் உலகத்துப் பலராதலால், பலர் கூற என்றார். கூறுவோரது பன்மை கண்டாட்குத் தன் மகனது மறத்தின்கண் ஐயந்தோன்றவே, ஒரு தலையாகத் துணியமாட்டாளாய், மண்டமர்க் குடைந்தனனாயின் உண்ட வென்முலை யறுத்திடுவன் யான் எனச் சினந்துரைத்தாள். மகனது மாண்பை அவள் ஓரளவு அறிந்திருந்தமையின், உடைந்தனனாயின் எனக் கூனிறான். அறுத்திடுவென் என்ற சொல் வாயினின்று வெளிவரும் போதே அவள் கை தன் மறக்குடிக்குடைமையாகிய வாளைத் தேர்ந்து கொண்டமையின் கொண்ட வாள் எனப்பட்டது. பட்ட வீரர்களின் குருதி படிந்து போர்க்களம் சிவந்தமையின் செங்களம் என்றும், இனிது கண்டறியத் தக்க வகையில் அவள்மகன் கிடவாமையின், துழவிவோள் என்றும், சிதைந்து வேறாகிய மகனது உடம்பைக் கண்டதும் காதன் மிகுதியால் கட்டிய ழுதலின்றிப் பட்ட புண்ணைத் தேர்ந்து பழியின்மைகண்டு உவகையால் உள்ளம் வீங்குதலால், சிதைந்து வேறாகிய படுமகன் என்றும் விளங்க வுரைத்தார். சிதைந்து வேறாகிய மகனது கிடக்கை அவளது உள்ளத்தை யழித்திலது என்பது இதனால் வற்வுறுத்தப்பட்டது. விழுப்புண்பட்டு வீங்குபுகழ் பெற்றதோடு குடிப்பழியும் போக்கினமையின், உவகை பெரிதாயிற்றென வறிக. |