| தோன்றல், நின்னுள்ளிவந்த பரிசிலேனாகிய நான் கூற, நின் உள்ளியது செய்தாயாதலான், வருத்தம் கூறி ஏத்தித் தொழுத னென் பழிச்சி, வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனோடு தொலைந்திருந்த என் வாணுதலை நினைந்து செல்வல் யானெனக்கூட்டி வினைமுடிவு செய்க. நாணக்கூறி யென்றதன் பின்னே ஏத்திப் பழிச்சிச் செல்வல் என்றமை யான் அவை குறிப்பு மொழி வரைப்பின் மனை யென இயையும்.
வள்ளியனாகலின் வணங்குவன் இவனென என்று பாடமாயின், வண்மையை யுடையனாதலால் இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதி யென்க. வள்ளியை யாதலின் வணங்கு வனிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற என்றதற்கு வள்ளியை யாதலின் இவனை வணங்குவே னென நினைந்து வணங்க அது பாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர் நினது கொடுமை...
தூவவெறியு மென்பது தூவெறியுமென வகரங்கெட முடிதல் புறநடையாற் கொள்க. விகாரமெனினு மமையும். தூவவெறியும் என்பதூஉம்பாடம். புறநிலை யென்பதற்குப் புறங்கடை நின்றநிலை யென்றுமாம். இல்லெலி மடிந்த தொல்சுவர் என்பதற்கு இல்லெலிதான் தொழில் மடிந்த தொல் சுவர் என்று உரைப்பினு மமையும். நின்னைக் கொடுமைகூற வென்றுரைப்பினு மமையும்.
விளக்கம்: புறநிலை வருத்தம் - புற நிலைமைக்கு யான் வருந்திய வருத்தம். புறநிலைமை, அன்புகண் மாறிய நிலைமை; அகநிலைமை யன்பாதலின், அதற்கு மாறாய் மறுக்கும் நிலைமை புறநிலைமையாயிற்று. ஆராய்ச்சியது நுணுக்கம், அதனை யுரைக்கும் நாவின்மேல் ஏற்றப்பட்டது. இனி, ஏத்துதல்வேண்டா வென்னும் நாநோவ ஏத்தினமை குறிப்பார், செந்நா அணங்க ஏத்தி யென்றார். நாவின் செம்மை ஏத்துதல்; அணங்குதல் தீது என்பது குறிப்பு. நாணுமாறு கூறியவர் பின்பு ஏத்துதலும் பழிச்சுதலும் பிறவும் செய்தல் அந் நாணத்தை மிகுதிப் படுத்துவதனால், அவை ஏத்துதல் முதலியன ஆகாது பழிப்பாதல் பற்றிக் குறிப்புமொழி யென்றார்.வள்ளியை யாகலின் என்ற பாடத்தைக் கொள்ளாது வள்ளியனாகலின் என்ற பாடங்கொள்வது முண்டென்றும், அவ்வாறு கொண்டால், வள்ளியை யாகலின்... பெறாத மாந்தர் கொடுமைகூற... என்று உரைகூறிக் கொள்க என்றார். புறநடை, எழுத்ததிகாரத்திறுதியிற் கூறிய, கிளந்தவல்ல செய்யுளுள் திரிநவும், வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும், விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின், வழங்கியன் மருங்கின் உணர்ந்தன ரொழுக்கல், நன்மதி நாட்டத் தென்மனார் புலவர் (எழுத்து. 483) என்ற புறநடை, புறநிலை யென்பதற்குப் புறங்கடை நின்றநிலையென்று பொருள் கூறினும் பொருந்தும் என்றார்; புறங்கடை நின்றார் ஒன்று ஈத்தல் இல்லை யாதல் பற்றி. இல்லெலிதான் மாறிமாறிப் பலவிடங்களை யகழ்ந்தும் பயன் இல்லாமையால் மடிகொண்ட தென்றதற்கு வேறாக, இல்லெலியும் தொழிலின்றி மடிந்த தொல்சுவர் என்று உரைப்பினும் பொருந்தும் என்றார். இல்லெலி பலவிடங்களில் அகழ்ந்தும் பயன் பெறாது மடி கொண்டாற் போல, புதல்வனும் தாய் முலையைப் பன்முறை சுவைத்தும் பாலின்மையால், பாலுண்டலையே வெறுத் தொதுங்கினான். தொலைவு பொருட்குறைவாதலின், தொநை்திருந்த என்றதற்கு வறுமையுற்றிருந்த என்று உரை கூறினார். --- |