| வாடினும்; வானுள் எரி மிகத் தோன்றினும் - வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும்; குளமீனொடு தாள் புகையினும் - குளமீனும் தாள்மீனுமாகிய விண்மீன்கள் புகைந்து தோன்றுமாயினும்; பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்-பெரிய வயலிடத்து விளைந்த நெல்லினுடைய கொக்கின் நகம் போலும் சோற்றை; பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி-பசிய துண்டகளாகிய பொரிக்கறியும் சூட்டிறைச்சியுடனும் உண்டு; விளைவு ஒன்று வெள்ளம் கொள்க என - விளைத்த ஒன்று வெள்ளமென்னும் அளவிற்றாக விளையக்கொள்க என்று சான்றோர் வாழ்த்துமாறு ; ஆங்கு - அவ்விடத்தே; உள்ளதும் இல்லது அறியாது - உள்ளதிதுவென்றும் இல்லாததிதுவென்றும் பாராது; அமைந்தன்று தாள் - வரையாது கொடுத்தலிலே யமைந்தது அவனது தாளாண்மை; வாழ்க - அது வாழ்வதாக; எ - று.
மென்புலத்து நன்செய் வயல்களை யுழுத எருதுகளை அண்மையிலுள்ள வன்புலத்துவிடுநிலத்துப் படுபுன் மேயுமாறு விடுவது தோன்ற, வன்புலத்துப் பகடுவிட்டு என்றார். வன்புலத்துப்படுபுல் பகடுகட்கு மிக்க உரந்தரும் உணவாமென்பது இன்றைய ஆராய்ச்சி யாளர்க்கும் ஒப்ப முடிந்த வுண்மை: ஏனையவற்றின் இறைச்சி போலாது குறுமுயலின் இறைச்சி மிகக் குழைவுடையதென்றற்குச் குழைச்சூடு என்றார். உவியல்: அவியல்: சாந்த விறகின் உவித்த புன்கம் (புறம். 168) என்பது காண்க. புதற்றளவு புதலிடத்தே மலர்ந்த செம்முல்லை. நெற்சோற்றினின்றெடுக்கப்படும் அரியல், அவிழ்நெல்லினரியல் எனப்பட்டது. ஆரும்: ஆருந்தென உம்மை உந்தாயிற்று. பயிர், அழைப்புக்குரல். தழுதழுப்புடைமை தோன்றப் பைம்பயிர் என்றார். கோழியின் குரல் இரட்டையோசைத்தாகலின், கவர்குரல் எனப்பட்டது. சேற்றிற் படிந்து கிடக்கும் ஆரல் முதலிய மீன்களை யுண்ணும் நாரை முதலியவற்றைப் புள்ளெனப் பொதுப்படக் கூறினார். புலனணியும்பிடவூர், உறந்தைக்குணா அது பிடவூர்; அருங்கடிப்பிடவூர் என இயையும். சிறப்பினையும் யானையினையுமுடைய தித்தன் என்க. உறையூர் தித்தற்குரிய தென்பதைப் பிறரும். மாவண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை (புறம். 358) என்பது காணக். நெடுங்கை வேண்மான் என்பான் பிடவூரைக் காக்கும் கிழவன். சாத்தன் அவற்குப் புதல்வன். அறத்தாற்றில் ஈட்டிய புகழாளனாகலின் சாத்தனை, அறப்பெயர்ச் சாத்தன் என்றார், பெயர், ஈண்டுப் புகழ்குறித்து நின்றது. உலக வாழ்வின் முடிபொருளாக ஒருவன் செயற்பாலது புகழாதலின், புகழ் பெயரெனப்பட்டதாம். பெயர், பொருள், ஞாயிறு மேலைக்கடலை நெருங்குங் காலம் கதிர் நனி சென்ற மாலை யெனவும், அக்காலத்தே இருளும் உடன் பரவிச் செறிதலின், கனையிருள் - மாலை யெனவும் கூறப்பட்டது. கண்டவுடனே கொடைக் கடனிறுக்கத் தொடங்கின னென்பான், சிறிது நில்லான் பெரிதுங் கூறான் என்றார். நிற்றலும் பெரிதும் பேசுதலும் இரப்போர்க்கு வாட்டந்தருஞ் செயல்ககளாதலின், அவற்றின்மையை யெடுத்தோதினான். அருளினன்: முற்றெச்சம் பெருஞ்சாத்தனது அன்பின் பெருமையை விளக்குவார். அவன் தன் மனைக்குக் காட்டிச் செய்த தலையளியை விதந்தோதினான், யான் நல்லுணவுண்டு இனிது வாழவேண்டுமென நயந்து பேணுமாறு போல. |