பக்கம் எண் :

452

     

“திறந்துமறந்தகூ” டென்றார். இதனால் வாட்டாற் றெழினியாதனது
வள்ளன்மை யுணர்த்தியவாறு. ஆக்கக் கங்கு, ஆக்கத்துக்குக் கங்கு என
விரியும். கங்கு-எல்லை. பாடுவார்க்கருளும் வள்ளலாதலின், எழினியாதன்
செல்வத்தைப் “பாடல் சால் வளன்” என்றார்.வழங்கும் பூக்கும் முதலியவாக
அடுக்கிநின்ற உம்மீற்றுப்பெயலெச்சங்கள் உந்தாயின. வழங்கும், பூக்கும்,
ஒப்பும், இரியும், தாங்கும் வாட்டாற்று எழனியாதனாகிய வேள்வலியாகுவன்,
கேளாகுவன்; அவன் கிணையேம், பெரும, சூடென்கோ, மட்டென்கோ,
சோறென்கோ, உணவென்கோ; அன்னவை பலபல வருந்திய ஒக்கல்
ஆர்ந்து எஞ்சிய, அழித்து உவப்ப ஈத்தான் எந்தை; கங்கு இல்லை;
நல்லிசை விளங்கித் தோன்றுக; வளன்சிறக்க எனக்கூட்டி வினைமுடிவு
செய்க.

     விளக்கம்: வாட்டாற்று எழினியாதன் தன்தந்தையாகிய எழினியொடு
பொருது  அவனை  வென்று  கொண்டவனாகிய  தலையாலங்கானத்துச்
செருவென்ற  நெடுஞ்செழியனைப்   பெருங்காஞ்சி  பாடிச்  சிறப்புற்ற
மாங்குடிகிழார், தன் வள்ளன்மையை நயந்து பாடிவரக்கண்டு மகிழ்ச்சியுடன்
அவரை வரவேற்றுப் பரிசில் பல நல்கிச் சிறப்பித்த திறத்தை இப் பாட்டில்
அம் மாங்குடிகிழார் அழகொழுகப் பாடியுள்ளார். இதன் இடையே சில
அடிகள் சிதைந்திருப்பது அந்த அழகை நாம் முழுதும் கண்டு இன்புறுதற்
கிடையூறு செய்கிறது. எனினும் பாட்டின் நலம் தன்பாலுள்ள இன்பச்
சுவையைக் குறையாவண்ணம் காட்டிநிற்பது காணத்தக்கது. வாட்டாற்று
நாடு கடற்கரைகாறும் பரந்து கிடப்பதாகலின், அதன் நெய்தல்வளமும்
கூறப்படுகிறது. கழனிகள் நீர் நிறைந்திருப்பதால், நீர்மேல் பூக்கள்
பூத்திருப்பதும், கீழ்நீர் மீன்கள் வழங்குவதும் இனிய காட்சி வழங்குகின்றன.
விளைந்து முற்றிய நெல் வயல்களில் புள்ளினம் படிந்துண்ணாவாறு உழவர்
அரிப்பறை முழங்குவதும், மணல்பரந்த தண்கானத்தில் புள்ளினம் நீங்கிப்
போவதும், கள் நிறைந்த மனைகளில் கோசர்கள் கள்ளுண்டு மகிழ்ந்து
குரவையாடி இன்புறுவதும் வாட்டாற்று நாட்டிற் காணப்படும் நிகழ்ச்சிகளாகும்.
வேளிர் அனைவரும் குறுநிலமன்னராதலின், எழினியாதனை, “வென்வேல்
வேள்”     என்றார்.     ஆதனுடைய    தனிச்சிறப்பை,    “உள்ளி
லோர்க்கு.....எழினியாதன்”  என்று   சிறப்பிக்கின்றார்.  கிணைவனுக்கு
எழினியாதன்  தந்த  உணவும்  பொருளும்  கூறுவார், “கொழுந்தடிய
சூடென்கோ.....அன்னவை பலபல” என்றார். என்றவர், வறுமையால் வாடிய
இரவலர் வெறுப்பவுண்டு அளப்பரும் பொருள் மீளமீளப் பெற்று உவமை
மிக   வெய்துமாறு   அவன்  கொடைநலம்  திகழ்ந்தது  என்பதனை,
“வருந்திய.....ஈத்தோன்” என்பதனால் விளக்கினார். சுருங்கச்சொல்லுவாராய்,
“எம்மோர்  ஆக்கக்கங்குண்டே”  என்றார்.  முடிவில்  எழினியாதனை
வாழ்த்தலுற்ற  மாங்குடிகிழார்,  ஆதனது  நல்லிசை “வெண்டிங்களின்
விளங்கித் தோன்றுக” என்றார். அவன் பகைப்புலத்துப்பெற்ற செல்வ
முழுதையும் கிணைவரும் பிறரும் நாடோறும் வாழ்த்தியதற்குப் பரிசாக
நல்குவனெனவும், அதனால், அச்செல்வம் புலவர் பாடும் புகழ் பெற்ற
தெனவும் கூறுவார் “உரை செலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே”
என்றார்.மென்பறையாற் புள்ளிரியுந்து என்பதற்கு வேறு பொருளுண்டாகக்
கூறுவாருமுளர். ஆக்கக் கங்குண்டே யென்பதற்கு வேறு பொருளும்
கருதுவர்.