ஐந்திணையைம்பது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன். பாயிரம் பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர். (பதவுரை) வண்மை - மெய்யம்மையான, புள்ளி - இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள, மாறன் பொறையன் - மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், பண்பு - மக்கட் பண்புகளை, உள்ளி நின்ற - ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, பெரியார் - உயர்ந்தோராகிய உலகமக்கள், பயன் - நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, தெரிய - நன்குணரும்படியாக, புணர்த்து - அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, யாத்த - செய்யுள் வடிவமாக இயற்றிய, ஐந்திணை ஐம்பதும் - முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், ஆர்வத்தின் - விருப்பத்துடன், ஓதாதார் - படித்து அறியாத மக்கள், செந்தமிழ் - செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, சேராதவர் - அடையப்பெறாதவர்களாவார்கள். (விரிவுரை) பாயிரம் - முகவுரை, “ஆயிரமுகத்தான் அகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே,” என்றாராகலின், முதற்கட் பாயிரங் கூறப்பட்டதென்க. “மாறன் பொறையன்,” என்றதனால் ஆக்கியோன் பெயரும், “ஐந்திணை,” என்றதனால் அகப்பொருணூலாகிய வழியும், அகமாகியநுதலியபொருளும், “செந்தமிழ்” என்ற
|