1
 

ஐந்திணை யெழுபது

விளக்கவுரை பழைய பொழிப்புடையுடன்.

கடவுள் வாழ்த்து.

எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்து நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தா னண்டத்தான் மூலத்தா னாலஞ்சேர்
கண்டத்தா னீன்ற களிறு.

(பதவுரை)கண் நுதலின் - கண்ணை நெற்றியிலுடைய, முண்டத்தான் - தலையினையுடையவனும்., அண்டத்தான் - இவ்வுலகமாகிய அண்டத்தினைத் தனது வடிவமாகக் கொண்டவனும், மூலத்தான் - எல்லாவற்றிற்கும் முதற் காரணனாய் உள்ளவனும், ஆலம் சேர் - ஆலகால விஷமாகிய நஞ்சு பொருந்தியிருக்கும்படியான, கண்டத்தான் - கழுத்தையுடையவனுமான சிவபெருமான், ஈன்ற - பெற்றெடுத்த, களிறு - யானைமுகக் கடவுள், எண்ணும் - யாம் விரும்பும், பொருள் - பொருள்கள், எல்லாம் - எல்லாவற்றையும், இனிது - நன்றாக, முடித்து - முடிவுபெறச் செய்து, எமக்கு - எங்களுக்கு, நண்ணும் - (இவ்வுலகத்தே) பொருந்தியுள்ள, கலை - கல்விப்பொருள்கள், அனைத்தும் - எல்லாவற்றையும், நல்கும் - கொடுக்கும்.

(விரிவுரை) ஏ - இசைநிறை. ஆல் - அசைநிலை. “களிறு எல்லாம் முடித்து, அனைத்தும் நல்கும்,” என முடிக்க. “நல்குவான்,” எனவும் பாடம். இச் செய்யுளின் போக்கும் பொருளும் இதனைப் புதியதாய் இடைச்செருகலென எண்ண இடமளிக்கின்றன.