கண் நிறுத்த அதனாலே,)தெளி - விளக்கமாக, திகழ் - விளங்கா நின்ற, கா - சோலைகளையுடைய, நாடன் - நாட்டிற்குரிய தலைமகனது, கேண்மையே - நட்பொன்றினையே, ஆர்வத்தின் - காதலுடனே, ஆர - மிகுதியும், முயங்கினேன் - மேற்கொண்டனன், (அதனால், என் மேனியிற் சிறிது மாற்ற முண்டாயது ; உண்டாகவே, அது தெய்வத்தானாயது என்று கருதி,) வேலனும் - (வெறி யாடுபவனாகிய) வேல் கைக்கொண்ட தேவராளனும், மறி - ஆட்டுக் குட்டியினை, ஈர - (முருகற்குப்) பலியாகக் கொடுத்து வெறியாட, வலித்தான் - துணிந்துவிட்டான். (ஆகலின், நீ சென்று உண்மையை யுரைத்து அதனை விலக்குவாயாக, என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) நீண்ட கதிரினையுடைய பசுந்தினையை வளைவாய்க் கிளியினம் கவரும் நீரானே தெளிந்து திகழாநின்ற சோலைகளையுடைய மலைநாடன் கேண்மையைக் காதலினாலே நிரம்ப மேவினேன் ; பிரிதலாற்றேனாயினேன் ; அவ்வாற்றாமை தெய்வத்தினாயது என்று முருகற்கு மறியையறுக்கத் துணிந்தான் வேலோன் ; தோழி ! இதனை விலக்குவாயாக.
(விரி.) வெறியாட் டெடுத்தல் - வேலற்கு பூசையிடல். அறத்தொடு நிற்றல் - உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழ வொட்டாது நடத்தல். கிளை = கிள்ளை - கிளி : இடைக்குறை விகாரம். ஏகாரம் - பிரிநிலை. வேலனும் - உம்மை உயர்வு சிறப்புப் பொருளது. (13) குறையொன் றுடையேன்மற் றோழி ! நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே யராவழங்கு நீள்சோலை நாடனை நம்மி லிராவார லென்ப துரை.
|