இரண்டாவது - முல்லை. செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினாற் பைங்கொடி முல்லை மணங்கமழ - வண்டிமிரக் காரோ டலமருங் கார்வானங் காண்டொறு நீரோ டலமருங் கண். [பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.] (பத.) செம் கதிர் - செம்மையாகிய கதிர்களையே, செல்வன் - செல்வமாகக் கொண்ட கதிரவன், சினம் - தனது சீற்றமாகிய வெப்பத்தை, கரந்த போழ்தினால் - மறைத்துக் கொண்ட மாலைப் பொழுதின்கண், பை கொடி - பசிய கொடிகளையுடைய, முல்லை - முல்லைச் செடிகள், மணம் கமழ - (பூத்து) மணத்தை வீசுதலானே, வண்டு இமிர - வண்டுகள் சூழ்ந்து ஒலிக்க, (வந்த,) கார் ஓடு - கார் காலத்துடனே, அலமரும் - சுழன்று காணும்படியான, கார் - முகில்களையுடைய, வானம் - விசும்பினை, காண்தொறும் - காணுகின்ற வேளைகளிலெல்லாம், கண் - என் கண்கள், நீர் ஓடு - நீரினோடுங்கூட, அலமரும் - தடுமாறி வருந்தாநின்றன. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) செய்ய கதிரினையுடைய செல்வன் சீற்றமடங்கிய காலத்தின்கண் பசுங்கொடியையுடைய முல்லைகள் பூத்து மணங்கமழ்தலான் வண்டுகள் ஒலிக்கக் கார்ப்பருவத்தோடு தடுமாறுகின்ற முகில்களையுடைய வானங் காணுந்தோறும் நீரோடுங்கூடத் தடுமாறாநின்றன கண்கள். (விரி.) பருவம் - கார் காலம். முல்லைக்கு மாலையாகிய சிறுபொழுது சிறந்து, முல்லை பூக்க வருதலின், “செல்வன் சினங்கரந்த போழ்து,” என்பதனை மாலையெனக் கொள்ளலாயிற்றென்க.
|