18
 

போழ்தினால் வேற்றுமை மயக்கம். கார் - முல்லைக்குரிய பெரும்பொழுது. அலமரும் - அலமா முதனிலை.

(15)

தடமென் பணைத்தோளி ! நீத்தாரோ வாரார்
மடநடை மஞ்ஞை யகவக் - கடன்முகந்து
மின்னோடு வந்த தெழில்வானம் வந்தென்னை
யென்னாதி யென்பாரு மில்.


[இதுவுமது.]

(பத.) தடம் - பெரிய, மெல் - மெல்லியவாகிய, பணை - மூங்கிலினை யொத்த, தோளி - தோள்களையுடைய தோழியே ! நீத்தாரோ - (நம்மைப்) பிரிந்து சென்றவராகிய தலைவரோ, வாரார் - (இப்பொழுது) வருகின்றவராகத் தோன்றவில்லை, (ஆனால்) எழில் வானம் - அழகிய முகிலோ, மடம் நடை- மெதுவான நடையினையுடைய, மஞ்ஞை - மயில்கள், அகவ - களித்துக் கூப்பிட, கடல் முகந்து - கடனீரைக் குடித்து, மின் ஓடு - மின்னல்களுடனே, வந்தது - வந்துவிட்டது, வந்து என்னை - என் பக்கலிற் சேர்ந்து என்னை நோக்கி, என் ஆதி - நீ எங்ஙனம் வாழ்கின்றனை ? உன்னிலை யாது ? என்பாரும் - என்று என்பால் இரங்கி என் செழுமையை வினவுகின்றவரும், இல் - இல்லாது தனியே வருந்துகின்றனன். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) பெரியவாய் மெல்லியவாகிய மூங்கில்போன்றிருந்த தோளினையுடையாய் ! நம்மைத் துறந்தார் இக்காலத்து வருகின்றிலர் ; மெல்லிய நடையினையுடைய மயில்கள் அழைக்கக் கடன் முகந்து மின்னுடனே வந்தது, எழிலினையுடைய வானம் ; ஆதலால், பின்னையும் என்னை வந்து, “நீ என் செய்யக் கடவாய் !” என்றிரங்கி ஒன்றைச் சொல்லுவாருமில்லை.