(விரி.) வானம் - இடவாகுபெயர். என்பாரும் - உம்மை இறந்தது தழுவியது. பணைத்தோளி - உவமைத்தொகையன் மொழி ; அண்மைவிளி கொண்டுள்ளது. (16) தண்ணறுங் கோட றுடுப்பெடுப்பக் காரெதிரி விண்ணுயர் வானத் துருமுரற்றத் - திண்ணிதிற் புல்லுந ரில்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும்.
[இதுவு மது.]
(பத.) சிறுமாலை - சிறு பொழுதாகிய அந்திவேளை, தண் - குளிர்ந்த, நறும் - மணத்தினையுடைய, கோடல் - வெண்காந்தளானது, துடுப்பு - துடுப்பினைப் போன்ற அரும்புக்குலைகளை, எடுப்ப - ஏந்திக்கொண்டு நிற்க, கார் - கார்காலத்தை, எதிரி - எதிர்கொண்டு, விண் உயர் - விண் வெளியிலே உயர்ந்து திரியும்படியான, வானத்து - முகில்களிடத்திலேயுள்ள, உரும் - இடிகள், உரற்ற - இடித்தொலிக்க, திண்ணிதின் - நன்றாக, புல்லுநர் - தழுவிக் கொள்பவர்களாகிய காதலரை, இல்லார் - பிரிந்தவர்களாகிய காதலிமார்கள், நடுங்க - (துன்பமிகுதியாற் றுயருற்று) நடுங்கும்படியாக, கொல்லுநர் போல - கொலையாளிகளைப் போன்று, வரும் - வாராநின்றது. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) குளிர்ந்த நறுங்கோடல் துடுப்புப்போலப் பூங்குலைகளை யேந்த, கார்காலத்தை ஏன்றுகொண்டு முகில்கள் மிக்க வானத்தின்கண் உருமேறு ஒலிப்ப, திண்ணிதாக முயங்குவாரை யில்லாதார் நடுங்கும் வகை துன்பத்தைச் செய்யுமாலை கொல்வாரைப் போல வாராநின்றது. (விரி.) துடுப்பு - உவமையாகுபெயர். தலைமகள் தலைமகனைச் சார்ந்து தழுவலிற் பெரிதுங் கருத்துடையாள் என்பார், “திண்ணிதிற் புல்லுநரில்லார்,” என்றார். (17)
|