கொடி மயங்கு கொடிகள் கலந்து படர்ந்துள்ள, முல்லை - முல்லைச் செடிகள், தளிர்ப்ப - தழைக்கவும், யானும் - நானும், அவரும் - (என்னைப் பிரிந்து தங்கியுள்ள) என் காதலரும், வருந்த - துன்புறும்படியாகவும், சிறு மாலை - சிறு பொழுதாகிய மாலைவேளையானது, இடி மயங்கி - இடித்தலோடு கூடி, தானும் புயலும் - தானும் முகிலுமாக, வரும் - வாராநிற்கும். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) இனங்களையுடைய கலைகள் களித்து மிக, புனங்களிலுள்ள கொடிமிடைந்த முல்லை தளிர்ப்ப, இடியோடே கூட மிடைந்து, யானும் என் காதலரும் வருந்த, துன்பத்தைச் செய்யும்மாலை தானும் மழைப்பெயலும் எம்மேல் வாராநின்றன. (விரி.) கலை பொங்க, முல்லை தளிர்ப்ப, யானும் அவரும் வருந்த, சிறுமாலை மயங்கி, வரும் என முடிக்க. இனத்த புனத்த - குறிப்புப் பெயரெச்சங்கள். (20) காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன் கார்கொடி முல்லை யெயிறீனக் - காரோ டுடன்பட்டு வந்தலைக்கு மாலைக்கோ வெம்மின் மடம்பட்டு வாழ்கிற்பா ரில். [இதுவு மது.]
(பத.) துறந்தாரும் - நம்மைப் பிரிந்துசென்ற தலைவரும், வாராமுன் - வருவதற்கு முன்பே, கார் - மழையினாலே செழித்த, கொடி - கொடிகளையுடைய, முல்லை - முல்லைச் செடியானது, எயிறு - நம் பற்கள் போன்ற முல்லை முகைகளை, ஈன - தோற்றுவிக்க (அதனாலே,) காரிகை - நமது அழகு, வாட - குறைந்து போகும்படி, கார் ஓடு - கார்காலத்துடனே, உடன்பட்டு - ஒன்று கூடி, வந்து
|