தோன்றி, அலைக்கும் - நம்மை வருத்தும், மாலைக்கு - மாலையின் பொருட்டாக, எம் இன் - நம்மைப் போல, மடம்பட்டு - அறியாமையால் துன்புற்று, வாழ்கிற்பார் - உயிர்வாழ் உரனுள்ளவர்கள், இல் - இல்லை (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) எம்மழகு சுருங்க எம்மை நீங்கினாரும் வருவதற்கு முன்னே கருங்கொடியையுடையமுல்லைகள் நல்லார் எயிறு போல அரும்பக் காரோடு உடனே யுளதாய் வந்து எம்மை நலிகின்ற மாலைக்கு எம்மைப்போல வலியிழந்து மெலிவாற்றி யிருந்து உயிர்வாழ்வார் இல்லை. (விரி.) ஓ - அசைநிலை. கில் - ஆற்றலிடைநிலை. எம்மின் - இன் ஒப்புப் பொருளது. (21) கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னிரைத்துக் கன்றம ராயம் புகுதர - வின்று வழங்கிய வந்தன்று மாலையாங் காண முழங்கிவிற் கோலிற்று வான். [இதுவு மது.]
(பத.) கோவலர் - இடையர்கள், கொன்றை குழல் - கொன்றைப்பழத்தைத் துருவித் துளைத்துச் செய்த குழலினை, ஊதி - ஒலித்துக் கொண்டு, பின் - பின்னாக, நிரைத்து - வரிசையாக நின்று செல்ல, கன்று - தங்கன்றுகளை, அமர் - விரும்பிய, ஆயம் - பசுக்கூட்டங்கள், புகுதர - ஊர்க்கண்ணே புகுந்து செல்ல, மாலை - அந்தி வேளையானது, இன்று - இப்பொழுது, வழங்கிய - (தன்னரசினைச்) செலுத்தும் பொருட்டு, வந்தன்று - வந்தது, வான் - முகிலும், யாம் - நாம், காண - கண்டு வருந்தும்படி, முழங்கி - ஆரவாரித்து, வில் - வானவில்லினாலே, கோலிற்று - (பெய்யவேண்டிய இடத்தை) வளைத்துக்கொண்டு பெய்யத் தொடங்கிற்று. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
|