(ப-ரை.) கொன்றை யென்னாநின்ற குழலூதிக் கோவலர் பின்னே நிரைத்து நிற்க, கன்றை விரும்பிய நிரையாயங்கள் ஊர்தோறும் புக, இவ்விடத்தின்கண் வழங்கவேண்டி வந்தது மாலை ; யாம் இறந்துபடாதிருந்து காணும்படி முழங்கி வில்லைக் கோலிற்று மழை. (விரி.) நிரைத்து - நிரைக்க : எச்சத்திரிபு. வந்தன்று - அன்சாரியை பெற்று வந்த இறந்த கால வினைமுற்று. இன்று - காலப் பொருள் தருமிடைச்சொல் ; அன்றி இடப்பொருள் கருதியதுமாம். பழையவுரையில், “நிற்க,” என்ற மொழி ஏட்டுப் பிரதியின் சிதைவாற் காணப்பெறாது போகப் புதிதாய்க் கருதிக் கொண்டதாம். (22) தேரைத் தழங்குகுரற் றார்மணி வாயதிர்ப்ப வார்கலி வானம் பெயறோடங்கிக் - கார்கொள வின்றாற்ற வாரா விடுவார்கொல் காதல ரொன்றாலு நில்லா வளை. [இதுவு மது.]
(பத.) (தோழியே !) ஆர்கலி - மிக்க வொலியினையுடைய, வானம் - முகிலானது, பெயல் தொடங்கி - பெய்தலை மேற்கொண்டு, கார் கொள - கார்ப்பருவத்தைக் கொள்ளுதலினாலே, வளை - என் கைகளிலுள்ள வளையல்களில், ஒன்று ஆலும் - ஒன்றாயினும், நில்லா - நிற்காது கழன்று வீழாநின்றது, காதலர் - நம் தலைவர், தேரை - தவளைகளைப்போன்று, தழங்கு - ஒலிக்கின்ற, குரல் - ஒலியினையுடைய, தார்மணி - குதிரைகளின் கழுத்தில் மாலையாக விடப்பட்டுள்ள மணிகள், வாய் அதிர்ப்ப - ஒலிக்கும்படி (தேரிலமர்ந்து,) இன்று - இற்றை நாளில், ஆற்ற - நாம் பொறுத்துக் கொள்ளும்படியாக, வாரா - வருதலைச் செய்யாது, விடுவார்கொல் - (நம்மை வருந்தும்படி) விட்டுவிடுவாரோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
|