29
 

வில் - வில்லினாலே, உழுது - முயன்று போர் புரிந்து, உண்பார் - (அதனால் வரும் பொருளைக் கொண்டு) உண்டு பிழைக்கும் மறவர்கள், கடுகி - விரைந்து, அதர் அலைக்கும் - வழிச் செல்வாரை வருத்திக் கொள்ளையடிக்கும் படியான, கல் சூழ் - கற்கள் சூழ்ந்துள்ள, பதுக்கை - சிறு தூறுகள், ஆர் - நிறைந்த, அத்தத்தின் - பாலை நிலவழியின் கொடுமையினை, பாரார் கொல் - நினைத்துப் பார்க்க மாட்டாரா? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

(விரி.) கொல் - ஐயப்பொருள் தருமிடைச்சொல். பதுக்கை - சிறு பாறை யெனலுமாம்.

(30)

பேழ்வா யிரும்புலி குஞ்சரங் கோட்பிழைத்துப்
பாழூர்ப் பொதியிற் புகாப்பார்க்கு மாரிடைச்
சூழாப் பொருணசைக்கட் சென்றோ ரருணினைந்து
வாழ்தியோ மற்றோ வுயிர் !


[பொருள்வயிற் பிரிந்து போய தலைமகனைக் காய்ந்து
தலைமகள் தானே கூறிக் கொண்டது.]

(பத.) உயிர் - எனது ஆருயிரே ! பேழ்வாய் - பிளந்த வாயினையுடைய, இரும்புலி - பெரிய புலியானது, குஞ்சரம் - யானையினை, கோள் - கொள்ளுதலினின்றும், பிழைத்து - தவறிப்போய், பாழ் ஊர் - (மறவர்தம் கொள்ளையாற்) பாழ்ப்பட்ட ஊரினது, பொதியில் - மன்றத்தின்கண், புகா - புகுந்து, பார்க்கும் - (உணவினை) நாடி நிற்கும்படியான, ஆர் இடை - அரிய பாலைநில வழியே, சூழா - நெருங்கி, பொருள் நசை கண் - பொருள் தேடவேண்டுதலினாலே, சென்றோர் - பிரிந்து சென்ற தலைவரது, அருள் - தண்ணளியினை, நினைந்து - இன்னும் எதிர் பார்த்து, வாழ்தியோ - (மடியாது) வாழ விரும்புகின்றனையோ ? (என்று தலைமகள் தன்னுயிருடன் வினவினள்.)

(விரி.) புகா, சூழா - ‘செய்யா’, என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள். நசைக்கண் - வேற்றுமை மயக்கம். மற்று, ஓ - அசைநிலைகள். உயிர் - அண்மைவிளி கொண்டது.

(31)