நீரி லருஞ்சுரத் தாமா னினம்வழங்கு மாரிடை யத்த மிறப்பர்கொ லாயிழாய் ! நாணினை நீக்கி யுயிரோ டுடன்சென்று காணப் புணர்ப்பதுகொ னெஞ்சு. [பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது.] (பத.) ஆய் இழாய் - ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே ! நெஞ்சு - என் மனமானது, நாணினை - வெட்கத்தினை, நீக்கி - துறந்து, உயிரோடு - (சாதலில்லா) உயிரினோடு, உடன் சென்று - கூடிப்போய், காண - தலைவரினைப் பார்க்க. புணர்ப்பது - விரும்புவதாயுளது, (அங்ஙனமிருக்க,) நீர்இல் - உண்ணுதற்கும் நீர் கிடைக்காத, அரும் சுரத்து - அரிய பாலை நிலத்தின்கண்ணே, ஆமான் - காட்டுப் பசுக்களின், இனம் - கூட்டமானது, வழங்கும் - (நீரின்றித் தியங்கித்) திரியும், ஆர்இடை - அரிய இடத்தையுடைய, அத்தம் - வழியின்கண்ணே, இறப்பர் கொல் - கடந்து செல்வாரோ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.) (விரி.) கொல் - முன்னது ஐயவினாப் பொருளது, பின்னது அசைநிலைப் பொருளது. புணர்ப்பது - குறிப்புவினை முற்று. (32) பொறிகிளர் சேவல் வரிமரற் குத்த நெறிதூ ரருஞ்சுரநா முன்னி - யறிவிட் டலர்மொழி சென்ற கொடியக நாட்ட வலனுயர்ந்து தோன்று மலை. [வரைவிடைப் பிரிவில் ஏதிலார் கூறு மலர்கண்டு தலைமகள் ஆற்றாது தோழி கேட்பக் கூறியது.]
(பத.) பொறிகிளர் - தலைச் சூட்டான் விளங்காநின்ற, சேவல் - காட்டுக் கோழியானது, வரி - வரிகளையுடைய, மால் - மருள் செடியினை, குத்த - கொத்துதலினாலே, நெறி - வழியானது, தூர் - தூர்ந்து
|