சூரற் புறவி னணில்பிளிற்றுஞ் சூழ்படப்பை யூர்கெழு சேவ லிதலொடு - போர்திளைக்குந் தேரொடு கானந் தெருளிலார் செல்வார்கொ லூரிடு கவ்வை யொழித்து. [இதுவு மது.] (பத.) தெருள் இலார் - (பொருளினும் அருளே போற்றும் பண்பினது என்னுந்) தெளிவினை மேற்கொண்டிராத நங்காதலர், சூரல் - பிரப்பம்புதர்கள் மிகுந்த, புறவின் - காட்டினிடத்தே, அணில் - அணிற்பிள்ளைகள், பிளிற்றும் - ஒலிக்கும்படியான, படப்பைசூழ் - கொல்லைகளாற் சூழப்பெற்ற, ஊர் - பாலைநிலத்தூர்களில், கெழு - பொருந்தியுள்ள, சேவல் - ஆண் கோழியானது, இதல் ஒடு - காடைப்பறவையுடனே, போர்திளைக்கும் - சண்டை செய்யும்படியான, கானம் - பாலைநிலவழியே, தேர் ஒடு - தேரின் மீதே, ஊர் இடு - இவ்வூரில் நமக்கு இட்டுச் செய்யவேண்டிய, கவ்வை - காரியத்தை, ஒழித்து - விட்டுவிட்டு, செல்வார்கொல் - நம்மைப் பிரிந்து போவாரோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.) (விரி.) படப்பை - கொல்லை : தோட்டம். “புறவினணில் பிளிற்றுஞ் சூழ்படப்பையூர்,” என்றமையின் இது முல்லைக்கண் வந்த பாலை யென்க. கொல் - ஐய வினாப் பொருள். தேரொடு - உருபுமயக்கம். (35) முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை புள்ளி வெருகுதன் குட்டிக் கிரைபார்க்குங் கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி.
[தலைமகன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவலென்பது பட மொழிந்தது.]
|