நான்காவது - மருதம். ஆற்ற லுடைய னரும்பொறி நல்லூரன் மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக் கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேற் பட்டஞ் சிதைப்ப வரும். [மகற்பெற்ற தலைமகளினைச் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண் தலைமகன் மகற்கண்டு மகிழ்ந்த வகையினைத் தோழி கண்டுமகிழ்ந்து கூறியது.] (பத.) ஆற்றல் - போர்வன்மையினை, உடையன் - கொண்டவனாகிய, அரும்பொறி - அரியசெல்வத்தினையுடைய, நல் ஊரன் - நல்ல மருதநிலத்தூர்த்தலைவன், மேற்று - மேற்பாகத்தினிடத்தே, சிறு காய் - சிறிய காயானது, தாய - பொருந்தியுள்ள, வஞ்சிபோல் - வஞ்சிச் செடியினைப் போன்று, கண் தக - கணுக்கள் சிதறுதலால் (தோன்றும்படியான,) முத்தின் - முத்தினைப் போன்ற, புதல்வனை - தன் மகனை, மார்பின் மேல் - மார்பின் மீதே, துருவி - நெருக்கித் தழுவிப் பிடித்து, பட்டம் - மேலாடை, சிதைப்ப - சிதையும்படியாக, வரும் - (செய்பெருஞ் சிறப்பின்கண்ணே) காணப்பெறுகின்றனன். (என்று தோழி கூறி மகிழ்ந்தாள்.) (விரி.) தலைமகள் பெற்றெடுத்த மகற்கு ஐம்படைபூட்டிப் பெயரிடுதலாகிய சிறப்பின்கண் தலைமகன் புதல்வனை மேற்கொண்டு வந்தமையினைக் கண்டு மகிழ்ந்த தோழி கூறியதாகு மிச்செய்யுள். இது, “கரணத்தினமைந்து முடிந்த காலை,” (தொல், பொருள், கற்பு, 5) என்ற சூத்திரத்தின் கண், “புதல்வற் பயந்த புனிறு சேர்பொழுதின்...............செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்,” என்பதனாற் பெறப்படும். செய்பெருஞ் சிறப்பு - பிறந்த புதல்வன் முகங்காண்டல், ஐம்படை பூட்டல், பெயரிடுதன் முதலியன. ஐம்படை - திருமாலின்ஐவகைப்படைபோன்றமைந்த கழுத்தணிகலம். (43)
|