அகன்பணை யூரனைத் தாமம் பிணித்த திகன்மை கருதி யிருப்பன் - முகனமரா வேதின் மகளிரை நோவ தெவன்கொலோ பேதமை கண்டொழுகு வார். [பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தலைமகள் காய்ந்து கூறியது.] (பத.) அகன் பணை - பரந்த மருதநிலத்துள்ள, ஊரனை - ஊர்க்குத் தலைவனான என் காதலனை, தாமம் - மலர்மாலையினாலே, பிணித்தது - (பரத்தையர்) கட்டிக் கொண்டு போயதனால், இகன்மை - (அவர் மாட்டு) மாறுபாட்டினை, கருதி - எண்ணி, இருப்பன் - இருத்தலைச் செய்கின்றனன், பேதமை - அறியாமையினை, கண்டு ஒழுகுவார் - செய்து நடப்பவராகிய, ஏதில் மகளிரை - பிறமகளிராகிய பரத்தையரை, முகன் அமரா - மனம் பொருந்தி, நோவது - (தலைமகன் பிரிவுக்காக) நொந்து கொள்வது, எவன் - எற்றுக்கு ? (அன்பும் உறவுமுடைய தலைமகனை நோவதே நெறியாம், என்று தலைமகள் கூறிக் கொண்டனள்.) (விரி.) பரத்தையர் தலைமகனைப் பொழிலாட்டு முதலியவற்றுட் படுத்தி அழைத்துச் சென்றமையினைத் தெரிந்த தலைமகள் முதற்கண் அப்பரத்தையரை வெறுத்துப் பின்னர், பிறராகிய அவரை வெறுத்தல் நெறியன்று எனத் தெளிந்து, தலைமகனைக் காய்ந்து (புலந்து) கூறியதாகு மிச்செய்யுள். கொல், ஓ - அசை நிலைகள். (44) போத்தில் கழுத்திற் புதல்வ ணுணச்சான்றான் மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு ணீத்துநீ ரூனவாய்ப் பாண!நீ போய்மொழி கூத்தாடி யுண்ணினு முண். [பாணற்குத் தலைமகள் வாயின் மறுத்தது.]
|