41
 

கொண்டு சேர்த்து,புறபெண்டிர்க்கு - ஊர்க்குப் புறத்தேயுள்ள சேரியில் வாழும் பரத்தையர்க்கு, உரை - சொல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

(விரி.) “மலரன்ன மார்புற,” எனவும் பாடம். தலைமகள் காதல் பரத்தையர் பலர்க்கும் உரியதன்றித் தனக்குரியதல்ல என்பாள், “மலரன்ன மால்,” எனலாயினன். உழலை மரம் - தொண்டுக் கட்டை : அன்றி, தொழுவ மரமெனலுமாம்.

(46)

தேங்கமழ் பொய்கை யகவய லூரனைப்
பூங்கட் புதல்வன் மிதித்துழக்க - வீங்குத்
தளர்முலை பாராட்டி யென்னுடைய பாவை
வளர்முலைக் கண்ஞமுக்கு வார்.


[தலைமகளின் இல்லற வியல்பினைக் கண்டு மகிழ்ந்த
செவிலி நற்றாய்க் குரைத்தது.]

(பத.) தேம் கமழ் - நறு மணமிக்க, பொய்கை - மலர்த் தடங்களையுடைய, அகம் - மருத நிலத்தேயுள்ள, வயல் ஊரனை - கழனி சூழ்ந்த ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனை, பூம் கண் - அழகிய கண்களையுடைய, புதல்வன் - மகன், மிதித்து - கால்களால் துவைத்து, உழக்க - சிதைத்துக் கொண்டிருக்க, (தலைமகனார்,) ஈங்கு - இந் நிலையிலே, என்னுடைய பாவை - என் பாவை போல்பவளாகிய தலைமகளின், தளர்முலை - (மகப் பெற்றமையால்) நெகிழ்ந்துள்ள முலைகளை, பாராட்டி - விரும்பி, வளர் முலை கண் - முன்னோக்கி வளர்ந்து காணும்படியான அம் முலைகளின் நுனியினை, ஞமுக்குவார் - கைகளால் நெருடி மகிழ்ச்சி யுறுவார். (என்று செவிலி நற்றாயிடங் கூறினாள்.)

(விரி.) அகம் - மருதம். பாவை - உவமையாகுபெயர். ஞமுக்குதல் = நமுக்குதல் - நெருடுதல் ; ஞகர நகரப் போலி ; நமை - முதனிலை. தளர்முலை, வளர்முலை - வினைத் தொகைகள்.