46
 

தலைமகள் கூறியதாகுமிச் செய்யுள். இதனை, “தம்முறுவிழுமம் பரத்தையர் கூறினும்,” (தொல். பொருள். பொருளிய. 41) என்றதனார் கொள்க. நீயிரும் - உம்மை எச்சப் பொருளது. ஏங்கன்மின், முயங்கன்மின் - எதிர்மறை ஏவற் பன்மை வினைமுற்றுக்கள்.

(52)

உண்ணாட்டஞ் சான்றவர் தந்த நசையிற்றென்
றெண்ணார்க்குக் கண்ணோட்டந் தீர்க்குதுமென் - றெண்ணி
வழிபாடு கொள்ளும் வளவய லூரன்
பழிபாடு நின்மே லது.



[தோழி, தலைமகளின் ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன்
வயத்தளாய் நின்று தலைவியைக் கழறியது.]

(பத.) உள் நாட்டம் - ஆழ்ந்த ஆராய்ச்சிமுறைகள், சான்றவர் - நிறைந்த பெரியோர்கள், தந்த - ஏற்படுத்தியது (இல்லறம்,) நசையிற்று - அன்போடு கூடியது, என்று எண்ணார்க்கு - என நினையாது கலவியொன்றினையே கருதும் பரத்தையரிடத்தில், (காட்டிய) கண்ணோட்டம் - அருளினை, தீர்க்குதும் - இனி விட்டொழிப்போம், என்று எண்ணி - எனக் கருதி, வழிபாடு கொள்ளும் - நின்பால் வணக்கத்தினை மேற்கொண்டுள்ள, வள வயல் - வளப்ப மிக்க கழனிகள் சூழ்ந்துள்ள, ஊரன் - ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனது, பழிபாடு - (நீ அவனை ஏற்றுக் கொள்ளாமையாலுண்டாங்) குற்றப்பாடு, நின் மேலது - நின்னையே சாரும். (ஆகலின், அவனை ஏற்றுக் கொள்வாயாக, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(விரி.) கழறுதல் - வற்புறுத்திக் கூறல். எண்ணார்க்கு - உருபு மயக்கம். நசையிற்று. மேலது - ஒன்றன்பாற் குறிப்பு வினை முற்றுக்கள். தந்த - தந்தது : ஈறுகெட்ட ஒன்றன்பால் வினைமுற்று.

(53)