உண்டுறைப் பொய்கை வராஅ லினமிரியுந் தண்டுறை யூர! தகுவதோ - வொண்டொடியைப் பாராய் மனைதுறந் தச்சேரிச் செல்வதனை யூராண்மை யாக்கிக் கொளல். [பரத்தையர்பாற் சென்று வந்த தலைமகனைத் தோழி வணங்கிய மொழியான் இணங்குவித்தது.] (பத.) பொய்கை - தடாகத்தினிடத்தே, உண்டு - மேய்ந்து, உறை - வாழும், வரால் இனம் - வரால்மீன் கூட்டம், இரியும் - திரியும்படியான, தண் - குளிர்ந்த, துறை - இடத்தினையுடைய, ஊர - மருதநிலத்திற்குரிய தலைவனே ! ஒண் தொடியை - ஒள்ளிய வளையினையணிந்த தலைமகளை, பாராய் - கடைக்கணிக்காதவனாய், மனை துறந்து - எமது மனையினைவிட்டு நீங்கி, அ சேரி - அப்பரத்தையர் சேர்ந்து வசிக்கும் சிற்றூர்க்கு, செல்வதனை - போகின்ற போக்கினை, ஊர் ஆண்மை - பெரிய காரியமாக, ஆக்கி கொளல் - ஏற்படுத்திக் கொள்வது, தகுவதோ - (பெருந்தன்மை மிக்க நினக்குத்) தக்கதாமோ ? (என்று தோழி தலைமகனை வினவினள்.) (விரி.) வராஅல் - இசைநிறை யளபெடை. பாராய் - முற்றெச்சம். ஒண்டொடி - பண்புத்தொகை யன்மொழி. (54) பொய்கைநல் லூரன் றிறங்கிளத்த லென்னுடைய வெவ்வ மெனினு மெழுந்தீக - வைகன் மறுவில் பொலந்தொடி வீசு மலற்றுஞ் சிறுவ னுடையேன் றுணை. [பாணற்கு வாயின் மறுத்தது.] (பத.) (பாணனே !) வைகல் - நாடோறும், மறு இல் - குற்றமில்லாத, பொலம் தொடி - பொன்னாற் செய்த வளையணிந்த கைகளை, வீசும் - வீசியும், அலற்றும் - விரித்தும் விளையாடும்,
|