கண்டிரண் முத்தம் பயக்கு மிருமுந்நீர்ப் பண்டங்கொ ணாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே னின்ற வுணர்விலா தேன். [தலைமகள், பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகத் தலைமகன் வந்த ஞான்றும், பெறாத ஞான்றைத் துன்ப மிகுதியாற் பெற்றதனையுங் கனவு போன்று கொண்டு இகழ்ந்து கூறியது.] (பத.) கண் - கண்களிலுள்ள விழிகளைப்போல், திரள் - திரட்சியுற்றிருக்கும்படியான, முத்தம் - முத்துக்களை, பயக்கும் - கொடுக்கும்படியான, இரு - பெரிய, முந்நீர் - கடலினிடத்தே, பண்டம் கொள் - பொருள்களை ஏற்றுமதி செய்யும்படியான, நாவாய் - மரக்கலங்கள், வழங்கும் - வந்து போகும்படியான, துறைவனை - துறைமுகத் தலைவனை, முண்டகம் கானலுள் - தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையினிடத்தே, கண்டேன் - (இன்று அரிதாகக்) காணப்பெற்றேன், (ஆயினும்) நின்ற - (இவனைக் காணுதல் முன்பு இன்பந்தருமென உணர்ந்து) நிலைபெற்றிருந்த, உணர்வு - உணர்ச்சியானது, இலாதேன் - (இப்பொழுது) இல்லாத யான், என - (புணர்ச்சி துன்பம் தரும்) என்று, தெளிந்தேன் - தெரியலானேன். (என்று தலைமகள் கூறினாள்.) (விரி.) இடையீடு - தொடர்ச்சியற்ற நிலை. ஞான்று - நாள். இதனை, “மறைந்தவற் காண்டல்,” (தொல். கள. 20.) எனற் சூத்திரத்துள், “வந்தவழி யெள்ளினும்,” என்பதனாற்கொள்க. (61) அடும்பிவ ரெக்க ரலவன் வழங்குங் கொடுங்கழிச் சேர்ப்ப னருளா னெனத்தெளிந்து கள்ள மனத்தா னயனெறிச் செல்லுங்கொ னல்வளை சோர நடந்து.
|