மரத்தடியிற் றங்கியிருந்த) காட்டுப் பசுக்களின், முலை - பான் மடியை, வருட - தடவிக் கொடுக்க, கன்று அமர்ந்து - கன்றினிடத்துப்போல அன்புபட்டு, சுரக்கும் - (அப் பசுக்கள் பால்) சுரந்து கொடுக்கும்படியான, அணி - இயற்கையழகுக் காட்சிகள் மிக்க, மலைநாடனை - மலைநாட்டிற்குரிய தலைமகனை, யாம் ஆ - யாம் இப்பிறப்பில் உயிரோடு உள்ளேமாகும் வரைக்கும், பிரிவது - (அவனைப்) பிரிந்து வாழ்வது, இலம் - மேற்கொள மாட்டேம். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) மன்றின்கண் நின்ற பலவின் சுளைமுதிர்ந்த இனிய பழத்தைத் தின்றின்புற்று வந்து ஆமாவின் முலையை மந்தி வருட அவ்வாமாத் தன் கன்றிற்குப்போல அன்பு பட்டுப் பாலைச்சுரக்கும் அணிமலைநாடனை யாமுளேமாகப் பிரிவதிலம். (விரி.) மன்று - மக்கள் முதலோர் சென்று தங்குமிடம். ‘அமர்ந்து’ என்றும் பாடம். அமாத்தல் - அன்பு படல் : பழங்கால வழக்கு. தலைமகன் சிறைப் புறத்தானாக - பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லும் தோழியினையும் தலைவியையும் சோலையின் வேலிப்புறத்து நின்று நோக்கினனாக. இயற்பழித்தல் - தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல். இயற்பட மொழிதல் - அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல். தலைமகன் அன்பிற்குறையா னென்பது மந்தி முலைவருட ஆமா சுரக்கும் அணிமலை நாடன் என்றதனாற் பெறப்படும். இதனை அளிசிறந்தவழித் தலைவி கூறிய தென்பர் இளம்பூரணர், (தொல். பொருள். கள. 21.) (4) சான்றவர் கேண்மை சிதைவின்றா யூன்றி வலியாகிப் பின்னும் பயக்கு மெலிவில் கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயந்திகழு மென்னுமென் னெஞ்சு.
|